கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 20, 2016

எங்களில் யாரது!!

பையன்களுக்கு மீசை அரும்பியதும் கண்களும் குறுகுறுக்க ஆரம்பித்து விடும். இளசுகள் மத்தியில் சொல்லுவார்கள்.  ஒன்னு விட மாட்டான்டா. குச்சிக்கு சுடிதார் போட்டாக்கூட போதும். வச்ச கண்ண எடுக்க மாட்டான்.   பள்ளிக்கூடம் விட்டாச்சுன்னா விளையாடுறது, பிறகு ஊர சுத்துரது (எந்த வகுப்பு என்று கண்டு பிடித்து கொள்ளுங்கள்).   ஊர சுத்தரதுன்னா எப்படி? இப்படி தான்.

எங்களில் யாரது ?? 

அப்போதெல்லாம் எங்களுக்கு 
மீசை அரும்பும் வயசு 
ஆசை அடங்காத மனசு 
கண்களில் காதல் நிரப்பிக் 
கொண்டு சில தேவதைகளின் 
தரிசனத்திற்காய் எங்கள் 
வீதிவலம் விளக்கு வைக்கும் வரை 
தொடர்ந்திருக்கும்.

வாசல் தெளிப்பவளாய்....
செடிக்கு நீர் வார்ப்பவளாய்....
எங்கோ செல்வதற்கு 
வெளிவருபவளாய் 
எப்படியோ எங்கள் 
தேவதைகள் முகம் காட்டும் - அந்த 
ஓரக்கண் பார்வையும் 
வாயோர புன்னகையும் எங்களில் 
யாரையோ ஒருவரை பார்த்து...

இன்று 
வெறிச்சோடி போன அதே தெருக்களில் 
எங்கள் தேவதைகளை தேடி 
பார்க்கிறேன்.
எங்கேனும் குழந்தையோடும் 
கணவனோடும் தென்படும் போது 
அன்றைய 
ஓரக்கண் பார்வையும் 
வாயோர புன்னகையும் மனதை 
வாட்டும் ஒரு 
பெருமூச்சோடு...

செவ்வாய், ஜனவரி 12, 2016

தனிமையில் நான் ....

போன பதிவில் ஜல்லிகட்டை நிறுத்த வேண்டும் என்று எழுதியது முழுக்க முழுக்க மனித உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதால் மட்டுமே....இதன் தொடர்ச்சியாக கூகிள் லில் தேடியதில் 2010 இல் இருந்து 2014 வரை 17 பேர் ஜல்லிக்கட்டில் இறந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.  ஆனால் அதே சமயம் நிறைய தமிழர்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள் என்பதும் புரிந்தது.  ஆகையால், ஜல்லிகட்டை பாதுகாப்பாக விளையாடுவதற்கு வயிற்று கவசம், மார்பு கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாமே....என்று கோரிக்கை வைப்பது சரியென படுகிறது.  

சரி இன்றைய பதிவிற்கு (கவிதை) வருகிறேன்.  இந்த கவிதையை படித்து விட்டு என்னை ஒரு குடு குடு கிழவன் என்று நினைத்து விட வேண்டாம்.  ஒரு வயோதிகரை சிறிது காலமாக கவனித்து வந்ததில்  எழுதியது.  முதுமையில் தனிமை மிகவும் கொடியது.  ஒரு குழந்தையை அனாதையாக விட்டு விடுவது போன்றது.   அதுவும் கை நிறைய சம்பாதித்த ஒரு ஆண் கையாகாமல் போவது வேதனைக்குரியது.

தனிமையில் நான்....

காற்று வீசாத வெட்கையான மாலை 
மாடியில் நடக்கின்றேன்.
மனதிலும் புழுக்கம்.
நாலு வருஷம் ஆச்சு 
நல்ல செய்தி கேட்டு!!
சிரித்து வைத்த சிரிப்பெல்லாம் 
நினைத்து பார்த்து சிரிக்கிறேன்.
தனிமையில் சிரிக்கிறேனோ?
சுற்றி முற்றி பார்க்கிறேன் 
அக்கம் பக்கம் யாருமில்லை 
யார் வருகிறார் என்னை தேடி 
கீழே வீட்டுக்குள்ளே 
மனைவி உண்டு பிள்ளை உண்டு 
அவர்கள் மனசுக்கு உள்ளே மட்டும் 
நான் இல்லை மாடிக்கு வந்து விட்டேன்.
வீட்டின் உள்ள பொருள்களிலே 
கூட ஒன்றாய் நானானேன்.
அவற்றையெல்லாம் துடைச்சு வச்சவங்க 
என்னை மட்டும் பழசாய் விட்டு வச்சாங்க 
ரிட்டயர் ஆகி போனதினால் 
நான் மாடிக்கு வந்து விட்டேன்.

----



சனி, ஜூன் 13, 2009

உன் பொய்யும் புரட்டும்...........

உன் பொய்யும் புரட்டும்
என்னிடம் எதை எதிர்பார்த்து?
என் உண்மை உன்னை
ஏன் அறைந்து விட்டது?
உன் புலம்பலும், பின் என்னிடமிருந்து
உன் விலகலும் உன்னை யாரோ
ஒரு முகம் தெரியாத அன்னியனாக்கிவிட்டது.
இப்போது உன்னிடம் நான்
வைத்திருக்கும் அன்பு முகம் தெரியாத
மனிதர்களிடம் நான் கொண்டிருக்கும்
அன்பு போன்றதே.

சனி, செப்டம்பர் 09, 2006

வீழ்ந்து எழும் சூரியன்..

வானமும் பூமியும் தொட்டுக்கொள்ளும்
விளிம்பில் ஓர் சிவப்பு வண்ண
சிதறலில் வீழ்ந்து அணையும் சூரியன்.
சில பறவை கூட்டம் அதை கடந்து செல்லும்
நகரும் கறுப்பு புள்ளி போட்ட கோலமாய்...
நிழல் நீளும் அந்த பொழுதில்
நிமிட நேரங்களில் இருள் போர்வை
போர்த்தும் பூமி.
தூரத்தில்.. நீண்டு வளர்ந்த தென்னைமரத்தின்
தலை வந்தமரும் வெண்ணிலவு.
கீற்றினூடே மஞ்சள் ஒளிக்கீற்று வந்து
காற்றுக்கும் உற்சாகம் கிளறி விடும்.
கறுப்பு சுரங்கத்தில் வைரக்குவியலும்
அதன் வழியே ஒரு தங்கநிலவும்
ஓர் இரவு முழு பொழுதில்
களவு போவதின் கதைசொல்லும் ஈரக்காற்று
காலை கண்விழிக்கும் பூமியிடம்.
பசித்த பூமிக்கும் இன்னும் பல உயிருக்கும்
பரிமாற வேண்டி வானத்தில் அடுப்பெரிக்க
இன்னொர் முறை
சிவப்பு வண்ண சிதறலில் எழுந்துக்கொள்ளும்
சூரியன்.


சனி, ஜூன் 10, 2006

தமிழில் வலைபதிவது மிகவும் இனிமை. என் முதல் வலைபதிவை ஒரு கவிதையில் இருந்து தொடங்குகிறேன்.

நிலவு தந்த பதில்

அது ஒரு
இரவு நேர
இனிய பயணம்
பேருந்தின் ஜன்னலோரம்
பேச்சுக்கு துணையின்றி நான்.

கிராமத்து விளக்குகள்
முழித்திருக்க வில்லை -வானத்தில்
விழித்திருந்த நிலவே
விளக்கானது.

காற்றுக்கு ஏன் இவ்வளவு
வேகம்- என்
முகத்தை தகர்த்தெறிய
விர்ரென்று
வீசி அடித்தது.

வீசின காற்றின் ஊடே
வான் நோக்கி நிலவு
பார்த்திருந்தேன் -நிலவை
பார்த்ததும்- அதை
ஒன்று கேட்டு வைத்தேன்.

அன்று
என்னவளும் நானும்
பேசிய நேரத்தில் நீயும்
தூரத்தில் பார்த்திருந்தாய்
அல்லவா!
அந்த காட்சிகளை
திருப்பி தர முடியுமா?

நிலவு பதிலேதும் தரவில்லை - அமைதி
நிலவியதில் சற்றே
தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

தூக்கத்தில் ஒரு கனவு
கனவில் அன்று
என்னவளுடன் பேசிய
காட்சிகள் மறுபடியும்.
கனவு முடிந்து
நனவு வந்ததும்
நிணைத்துக் கொண்டேன்.
நிலவிடம் நான் கேட்ட கேள்விக்கு
நிலவு தந்த பதில் தான் கனவோ!