ஞாயிறு, அக்டோபர் 08, 2017

வோலோகாப்டர் - The Air TaxiImage result for volocopterஇனிமேல் மனிதர்கள் வானத்தில் தும்பிகள் மாதிரி பறக்க போகிறார்கள்.  ஆம்.  இப்போது ஹெலிகாப்டர் போல வோலோகாப்டர் என்று ஒரு வானூர்தி வந்து விட்டது.  அலுவலகம் செல்வது, மார்க்கெட் செல்வது, சிட்டிக்குள் ரவுண்டு அடிப்பது.. எல்லாமே இனிமேல் வோலோகாப்டரில் தான்.

போனவாரம் தான் மனைவியுடன் கடைக்கு செல்கையில் பேசிக் கொண்டிருந்தேன்.  இன்னும் பத்து இருபது வருடங்களில் மக்கள் ஆபீஸ் போவதற்கு வானத்திலேயே சிறிய பறக்கும் டாக்சியில் போய்விட்டு வருவார்கள் என்று... பெரிய ஆருடம் எல்லாம் இல்லை.  ரொம்ப நாட்களுக்கு முன்பே எங்கோ இந்த  விஷயத்தை பற்றி படித்து இருந்தேன்.  இன்று டிவியில் துபாயில் இந்த வானூர்தியை அறிமுகப் படுத்த போகிறார்கள் என்று செய்தியை பார்த்ததும் ஏன் மனைவிக்கு ஆச்சர்யம்.  நீங்க போன வாரம் தாங்க சொன்னீங்க ... இப்ப பாருங்க அதே மாதிரி வந்து விட்டது என்று... ஆம் ஐயாவுக்கு நிகழ்காலம் , வருங்காலம் எல்லாம் தெரியும் என்று கொஞ்சம் தம்பட்டம் அடித்துக்  கொண்டாலும்,  இந்த கண்டுபிடிப்பு அடுத்து எதில் போய் முடியும் என்று யோசனை வந்து விட்டது.


வானத்தில் டிராபிக் சிக்னல் வைக்க முடியாது.  நம்ம ஆட்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஒட்டி பழக்க பட்டவர்கள்.  இவர்களை ஒழுங்காக ஒருத்தர் மீது ஒருத்தர் இடிக்காமல் ஓட்ட என்ன செய்வார்கள்.  அதற்கும் வழி இருக்கும் போலிருக்கிறது.  GPS (Global positioning system) பயன்படுத்தி இப்போது Aeroplane பறப்பது மாதிரி விபத்துக்கள் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.  இந்த வோலோகாப்டர்களை வோலாகாப்டர் என்னும் ஜெர்மன் நிறுவனமும், Airbus, Uber போன்ற நிறுவனங்களும் தயாரிக்க இருக்கின்றது.  இப்போது இதை துபாயில் மாதிரி ஓட்டம் செய்து பார்த்து இருக்கிறார்கள்.  இன்னும் சில மாதங்களில் பயன் பாட்டுக்கு வந்து விடும்.


நமக்கு உணவு இல்லாவிட்டாலும் தங்க இடம் இல்லாவிட்டாலும், நல்ல சாலைகள் இல்லாவிட்டாலும் செல் போன் வேண்டும், bullet train போன்றவை வேண்டும் ஆயிற்றே ... எனவே கூடிய விரைவில் இந்த வோலோகாப்டர் இந்தியாவுக்கு வந்து விடும் என்று நம்பலாம்.   சைக்கிள், பைக் வாங்கி கொடுத்தது போய், வருங்காலத்தில் அப்பாக்கள், பெண் வீட்டார்கள்  வோலோகாப்டர்கள் வாங்கி கொடுப்பார்கள்.  இந்த விஷயத்தில் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.  மனிதனின் இந்த கண்டுபிடிப்புகள் நன்றாக தான் இருக்கிறது.  கூடவே, நம் மக்கள் தொகையை குறைக்க ஏதாவது செய்தால் தேவலை ... இல்லையென்றால் இந்த கண்டுபிடிப்புகள் கோடிக்கணக்காக இருக்கும் நம் மக்கள் ஒழுங்காக பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.