சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 20, 2016

சாலைகள் தோண்டாமை நன்று !!!

சென்னை மாநகராட்சிக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று சாலைகளை (ரோடு) தோண்டுவது.  தமிழில் வினைத்தொகை என்று படித்திருப்பீர்கள். அதாவது ஊறுகாய் என்பதை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என்று சொல்லலாம்.  அது போல் சென்னை ரோடுகளை - தோண்டிய ரோடு, தோண்டுகின்ற ரோடு, தோண்டும் ரோடு என்றும் சொல்லலாம்.  

Image result for chennai road digged

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகையில்,  எப்போதும் வரும் சாலையை தோண்டி இருந்ததால் மாற்று சாலையை பயன்படுத்தி வந்தேன்.  இப்படி செய்து இரண்டு மூன்று மாதம் ஆகிவிட்டதால், இன்று மறுபடியும் வழக்கமான சாலையில் வரலாம் (தோண்டியதை சரி பண்ணி இருப்பார்கள் என்ற நப்பாசை) என்று வந்து பார்த்தால் முன்பை விட ஆழமாக தோண்டி இருந்தார்கள்.  அப்போது உதித்தது தான் மேலே சொன்ன ஊறுகாய் சமாச்சாரம்.  ரோடு தோண்டுவதற்கான காரணங்களை இப்போது ஆராய போவதில்லை.  ஆனால் இப்படி தோண்டிக்கொண்டே இருப்பதால் மக்கள் படும் அவஸ்தை இருக்கிறதே...அதை எழுத்தால் முழுமையாக எழுத முடியாது. 

பாரிஸ், ரோம் போன்ற நகரங்களில் சில இடங்களில் அரசாங்கத்திடம் அனுமதி வாங்காமல் எங்கேயும் தோண்ட கூடாது.  புராதன காலத்தில் போட்ட ரோடுகளாம் அவை.   இங்கே எங்கள் வீட்டு ரோட்டை தோண்டினால் பல புராதன ரோடுகள் உள்ளே புதையுண்டு கிடைக்கும்.  பல சமயங்களில் ரோட்டை தோண்டும் தொழிலாளர்களுக்கு அதை ஏன் தோண்டுகிறோம் என்றே தெரிவதில்லை.  போன மாசம் தானே தோண்டுனீங்க, மறுபடி ஏன் தோண்டுறீங்க என்று கேட்டால் வெள்ளந்தியாக சிரிப்பார்கள்.  அது போன மாசம்.  இது இந்த மாசம் என்ற பதிலை மானசீகமாக நினைத்துக் கொள்வேன். 

சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் இருக்க ஆட்டோ காரர்கள் வளைந்து வளைந்து ரோட்டின் மீது இன்னொரு ரோட்டை போடுவார்கள்.  அவர்கள் போடும் புது ரூட்டை பின் தொடர்ந்து நாம் போய் விடலாம்.  என்ன, அலுவலகத்திற்கு கொஞ்சம் லேட்டாக போக வேண்டும்.  சில ரோடுகளுக்கு பள்ளங்களிலிருந்து சாப விமோசனமே கிடையாது.  365 நாட்கள் 24 மணி நேரம் தோண்டப் பட்டே இருக்கும்.  மக்களும் லேசு பட்ட ஆட்கள் இல்லை.  நீ தோண்டிகிட்டே இருக்கியா அதை பற்றி எனக்கென்ன கவலை என்பது மாதிரி மக்கள் குறுக்கும் நெடுக்கும் சாலைகளை கடக்க வண்டியில் போகும் எங்களுக்கு சரக்கே அடிக்காமல் போதையில் வண்டி ஓட்டுவது போல நடுங்கும்.  

இன்று, தோண்ட பட்ட சாலைகளை பற்றி ரொம்ப தோண்டிவிட்டேன். இன்னும் தோண்டினால் பள்ளத்திலிருந்து சாக்கடை, குப்பை போன்ற இன்னும் பல வஸ்துகள் வெளிவந்து விடும் என்பதால் இத்தோடு முடித்து விடுகிறேன்.  நாளை தோண்டப்படாத இன்னொரு ரோட்டை கண்டு பிடிக்க வேண்டும்.





ஞாயிறு, மார்ச் 06, 2016

மெட்ராஸ் ஆட்டோகாரன்


Image result for chennai auto

சென்னையில் பெரிய மால்கள் வந்து விட்டன.  மெட்ரோ ரயில் ஓடுகிறது. பெரிய பாலங்கள் கட்டி இருக்கிறார்கள்.  இவற்றுக்கு மத்தியில் மூணு சக்கர தேரு... அதாங்க.. ஆட்டோ!!, சென்னையின் பள்ள மேடான சாலைகளில், காதை  Puncture ஆக்கும் சத்தத்தோடு சதா ஓடிக் கொண்டிருக்கிறது. அணைத்து விஷயங்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டு அடுத்த நிலையை அடையும் போது, இந்த மெட்ராஸ் ஆட்டோவும், ஆட்டோக்காரர்களும் முப்பது வருடங்களாக அப்படியே இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆட்டோ ஓட்டுகிறார்கள்.  என்றாலும், மெட்ராஸ் ஆட்டோக்காரன் என்றால்  அது தனி.   தமிழ்நாட்டிலேயே கூட இவர்கள் வித்தியாசமானவர்கள்.   முக்கால்வாசி ஆட்டோக்கள் கருப்பு புகையை கக்கிக் கொண்டிருக்கும்.  அந்த புகையில் கொசு மருந்தும் கலந்திருந்தால் சென்னையில் கொசு தொல்லையாவது தீரும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை.  அந்த புகையை சுவாசிக்கும் இரு சக்கர வாகனக்காரர்களுக்கு சளித் தொல்லை தான் வருகிறது.

மெட்ராஸ் ஆட்டோகாரர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருவது இவை:

- காக்கி சட்டை அழுக்கு ரொம்ப தாங்கும் என்பதால், அதை அழுக்காகவே
  போட்டுக் கொள்வது
- தலையை சீவாமல், வாயில் எப்போதும் எதையாவது மென்று துப்பிக்
கொண்டே இருப்பது.
-  எந்த ஊருக்கு போகணும்னு சொன்னாலும், முதல் முறை இரு மடங்கு
   பணம் கேட்பார்கள்.
-  பாஷா படத்திற்கு பிறகு ஆட்டோகாரன் பாட்டு இவர்களது தேசிய கீதம்.
-  சந்து பொந்து என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  சைக்கிள் கேப்பில் 
  புகுந்து போய்விடுவான் என்பார்களே.  இவர்களது ஆட்டோ புகுந்து போய் 
  விடும்.  
- சென்னையில் கார் வைத்து இருப்பவர்கள் எல்லாம் அவர்களது காரில் 
  ஒன்றிரண்டு விழுப்புண்ணாவது (சிராய்ப்புகள்) வைத்திருப்பார்கள்.  அது 
  எல்லாமே ஆட்டோகாரர்கள் போட்டது தான்.
- பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுப்பவர்கள் இவர்கள் தான்.  ஆட்டோவில் வயதான பெண்மணிகள் இருந்தாலும் கூட சாலையில் போவோரை கெட்ட வார்த்தைகள் போட்டு வசை பாடுவார்கள். 
- நாளில் எந்த நேரத்தில் ஆட்டோவில் ஏறினாலும் சில்லறை இல்லை என்பார்கள்.  நீ தாம்பா முதல் போனி என்பார்கள்.  
- ஆட்டோவை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு இருப்பார்கள்.  நான் எல்லாம் ஆபீசில் வேலை செய்ய வேண்டிய ஆள் சார். என் போதாத காலம் ஆட்டோ ஓட்ட வந்துட்டேன் என்பார்கள்.

இங்கே ஆட்டோ ஓட்டுவதை ஒரு நல்ல தொழிலாக கருதி ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.  சென்னையில் எந்த ஒரு ஆட்டோக்காரனையாவது கேட்டு பாருங்கள்.  நான் சும்மா டெம்பரவரியா ஆட்டோ ஓட்டுறேன் சார்.  அடுத்த மாதம் துபாய போய் விடுவேன் என்றோ, அல்லது பெரிய இடத்தில் கார் டிரைவராக வேலைக்கு போவதாகவும், இல்லை வேறு வேலைக்கு போக போவதாகவும் சொல்வார்கள்.   சிலர் ஆட்டோ ஒட்டி கொண்டே படித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வார்கள். அப்படியே படித்து கலெக்டர் ஆகப் போவதாக பில்ட் அப் வேறு!!  ஆட்டோவை விட்டு விட்டு எப்போது டாக்ஸி க்கு மாறுவார்கள் என்று எதிர்பார்த்தால், ஆட்டோவின் இன்னுமொரு மோசமான அவதாரமான ஷேர் ஆட்டோவை உருவாக்கியிருக்கிறார்கள்.  அரசாங்கம் இவர்களுக்கு பயணத்திற்கான கட்டணத்தை முறை படுத்துவதை விட்டு விட்டு, இவர்களை டாக்ஸி ஓட்ட வைத்தார்களானால் என் ஆதரவு அவர்களுக்கு தான்.

இவை அனைத்தையும் மீறி நல்ல உடை உடுத்தி,  எங்கேயும் துப்பாமல், சரியான கட்டணம் வாங்கும் நல்ல ஆட்டோகாரர்களும் உண்டு.  ஆனால், அத்தி பூத்தாற் போல் நமக்கு நல்ல நேரம் என்றால் அப்படியொரு ஆட்டோ சவாரி வாய்ப்பதுண்டு!!

திங்கள், டிசம்பர் 07, 2015

விடாத மழை

மழையும் சென்னையும் என்று சில நாட்களுக்கு முன் பதிவு எழுதி விட்டு மழைக்கு முற்றுபுள்ளி போட முடியவில்லை.  மழை சீசன் 1, சீசன் 2 என்று போய் கொண்டு இருக்கிறது.  இந்த முறை மழை அதிக பலம். அடையாறும், கூவமும் நாங்கள் வெறும் சாக்கடை கால்வாய்கள் இல்லை, பெரிய ஆறுகள் என்று நிருபித்து விட்டன. பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஏரிகள் எங்கெங்கு இருந்தன என்பதை மழை அதன் இருப்பிடத்தை காட்டிகொடுத்து விட்டது.  

தமிழக மக்கள் உணர்ச்சிமயமானவர்கள்.  அது நல்லதுக்காகவும் இருக்கலாம். உபயோகமில்லாத விஷயத்துக்காகவும் இருக்கலாம்.  இயற்க்கை சீற்றம் வந்துவிட்டால் பதற்றமடைவது, மற்றவர்களை பதற்றமடைய வைப்பது, புரளிகளை கிளப்புவது, தமிழ் நாடே  அழிய போகுது என்று பிரச்சாரம் செய்வது ஒரு பக்கம்.  இன்னோர்  பக்கம் தன்  உயிரை  பார்க்காமல் வெள்ளத்தில் நீந்தி மற்றவர்களை காப்பாற்றியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  தன்  குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று கூட தெரியாமல் பிறர்க்கு பகல் இரவு என்று பார்க்காமல்  உதவி செய்தவர்களும் ஏராளம்.  தமிழனின் இந்த உணர்ச்சிவசப்படுதலை அரசாங்கம் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.



உணவு பொட்டலங்கள், ஆடை, இருப்பிடம் போன்ற அத்தியாச பொருட்களுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து விட்டது.  இன்னும் நல்ல உள்ளம் படைத்த தனி மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ அள்ளி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால்  இது மட்டும் போதுமா? இந்த  மாதிரி மறுபடியும் மழை வந்தால் அன்றாட வேலைகளும்,  மக்களின் வாழ்வாதாரமும் முடங்காதவாறு அரசாங்கம் திட்டமிட்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எப்படி என்றால், 

1.  போன பதிவில் நான் சொன்ன மாதிரி சென்னையின் மக்கள் நெருக்கடியை குறைக்க வேண்டும்.  சென்னை நகருக்குள்ளே அடுக்கு மாடி குடியிருப்புக்கு  இனிமேல் அனுமதி கொடுக்க கூடாது.  புற நகர் பகுதிகளுக்கு கழிவு நீர் வடிகால், மின்சார வசதி, நல்ல சாலைகள் என்று வசதி ஏற்படுத்தவேண்டும்.  கூடுவாஞ்சேரி, ஒரகடம், கேளம்பாக்கம், திருவள்ளூர் போன்ற இடங்களில் மக்கள் குடியேற அரசாங்கம் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 

2.  துறை வல்லுனர்களைக் கொண்டு இப்போதைய சென்னை நகர கழிவு நீர் கால்வாய்கள் கூவத்திலும், அடையாரிலும் கலக்காமல் இருக்க நல்ல திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 

3. இருக்கும் வெள்ள  நீர் வாய்க்கால்கள் பெரிது படுத்த வேண்டும்.

4.  சாலைகளில் நீர் தேங்காதவாறு செய்ய வேண்டும்.  சாலை ஓரங்களில் மண் தெரியாதவாறு கல் பதிக்கலாம் (Tiles). ஏனென்றால் இந்த மண் தான் மழைக்காலத்தில் வெள்ள நீர் கால்வாய்களில்  போய் அடைத்துக்கொள்கிறது. 

5.  ஆறுகளின் ஓரத்தில் யாரையும் குடியேற அனுமதிக்க கூடாது.

இதை எல்லாம் விட்டு விட்டு, அந்த நடிகர் இவ்வளவு கொடுத்தாரு, இந்த நடிகர் அவ்வளவு கொடுத்தாரு என்று வெட்டி பேசுவது, மழை முடிஞ்சதும் கூவம் கரையிலும், அடையாறு கரையிலும் குடி போவது, ரோட்டில் உள்ள குண்டு குழியில் கல்களை கொண்டு நிரப்புவது, ஒன்றுமே நடக்காதது போல் அடுத்து தேர்தல் போஸ்டர் ஓட்ட போய் விடுவது, மறுபடியும் CMDA ஏரிகளில் வீடு கட்ட அனுமதி கொடுப்பது, கூவத்திலும், அடையாறிலும் சென்னை மாநகராட்சியே கழிவை கொட்டுவது என்று போய்க் கொண்டிருந்தால், நம்மை யாராலும் ஒழுங்கு படுத்த முடியாது.


புதன், நவம்பர் 25, 2015

மழையும் சென்னையும் ....

போதும் போதும் என்று இந்த முறை (2015) மழை பெய்து விட்டது.  சென்னையில் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதுமே.... இது சம்பந்தமாக  மழை வெள்ளம், வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள், அடித்து செல்லப்பட்ட மனிதர்கள், உடைந்த பாலங்கள், அறுந்த மின் கம்பிகள், சிதைந்த சாலைகள், ஆர்ப்பரித்து செல்லும் ஆறுகள், நிரம்பிய ஏரிகள், திறக்காத பள்ளிகூடங்கள்  என்று பல தரப்பட்ட செய்திகளும், வீடியோக்களும் பார்த்தோம். 

இதற்கான காரணங்களாக ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், இருக்கும் ஏரியை சரியாக தூர் வாராதது என்று பலவற்றை செய்தி தாள்களும், இன்னும் பல ஊடகங்களும் அலசி ஆராய்ந்தன.  



எனக்கு நான் ஐந்தாம் வகுப்பு (1985) படிக்கும் போது சென்னையில் பெய்த அடை  மழை ஞாபகம் வந்தது.  காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் முன்னரே பள்ளி விடுமுறை என்று தெரிந்தும் கூட, இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே பள்ளிக்கூடம் போனதும், பள்ளி முழுக்கவே தண்ணீரில் மிதப்பதை பார்த்து பிரமித்ததும், பின் ஆனந்தப்பட்டதும் நினைத்து பார்த்தேன்.  சாலைகளில் ஆங்காங்கே லுங்கி கட்டிய மனிதர்கள் நின்று கொண்டு, இந்த வழியில் போக முடியாது, அந்த வழியில் போக முடியாது (blocku Sir!!) என்று கொஞ்ச நஞ்ச கடமை உணர்ச்சி மனிதர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.  செடிகளும், மரங்களும் ரோட்டில் விழுந்து கிடக்கும்.  வீட்டில் நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது.  நாங்கள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு நாள் முழுவதும் விளையாடிகொண்டே இருப்போம்.  

இதே ஞாபகங்கள் 1995 போதும், 2005 போதும், இப்போது 2015 போதும் வந்தன.  மேலும் இப்படி மழை பெய்யும் போதெல்லாம் வரும்.  அதற்கு தமிழகத்தை ஆளும் கட்சிகள், ஆளபோகிற கட்சிகள் வழி செய்துகொண்டே இருக்கும்.  மற்ற நாடுகளும், ஏன் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்கள் கூட முன்னேற்ற பாதையில் போகும் போது, தமிழ் நாடு பின்னோக்கியே போவது ஏன்?  அதற்கு காரணம், நம் அரசியல் வாதிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல, கடைந்தெடுத்த முட்டாள்கள்.  அட அயோக்கியர்களே, நீங்கள் காசு அடித்து விட்டு போங்கள்.  கொஞ்சம் புத்திசாலிதனமாகவும்  யோசித்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்களேன்.  யாராவது ஒரு நல்ல மனிதரை தமிழகத்தை வழி நடத்த  கடவுள் அனுப்பி வைப்பார் என்று பிராத்திக்கிறேன்.