சனி, ஏப்ரல் 23, 2016

தேர்தல் 2016- பந்தயம் ஜோர்!!

இந்த முறை தேர்தலில்   உண்மையாகவே அனல் பறக்கிறது.  சூரியனின் உக்கிரத்தால் வெப்பம் இப்பவே 41 deg C ஆக கொதிக்கிறது.  தேர்தல் தினத்தில் (மே 16) எவ்வளவு செல்சியஸ் சென்று ஓட்டு சதவீதத்தை பாதிக்க போகிறதோ தெரியவில்லை.  பிரச்சாரத்தில் தலைவர்கள் சூட்டை கிளப்புகிறார்களோ இல்லையோ, சூரியன் கிளப்பும் சூட்டில் நாலைந்து பேர் இறந்து போனது பரிதாபம்.  தமிழா! பிரியாணி பொட்டலத்துக்கும், குவாட்டருக்கும் சொச்ச பணத்துக்கும் இப்படி வெயிலில் மாண்டு போனாயே...


ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குறுதிகளில் இலவசங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.  மிக்சி, Fan, Grinder, கணினி என்று ஆரம்பித்து இப்போது  fridge, வாஷிங் மெஷின் என்று போய்க்கொண்டிருக்கிறது.  ஒரு ரூபாய் வாங்கினாலும், அதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் நம் மக்கள் என்பதை அரசியல் வாதிகள் புரிந்து வைத்துள்ளனர்.   ஒரு கட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,  உங்களுக்கு மாத சம்பளமே இலவசமாக கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.  மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டில் நடக்கும் இலவச திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டு போகிறார்களாம்.  நாட்டை கெடுப்பதில் தமிழ்நாடு எப்படி முன்னோடியாக இருக்கிறது பாருங்கள்!! தேர்தல் வாக்குறுதி என்றால் எவ்வளவு பெரிய விஷயம் என்பது போய், அதை காமெடி அறிக்கை ஆக்கி விட்டார்கள்.  

கையில் கேமரா சகிதம் போலீஸ்காரர்கள் அங்காங்கே வண்டிகளை நிறுத்தி சோதனை செய்கிறார்கள்.  காருக்குள் என் மனைவியும், மகளும் இருந்தும் கூட என் வண்டி பலமுறை நிறுத்தி சோதனை செய்யப் பட்டது.  என்னடா இப்படி தொல்லை கொடுக்கிறார்கள் என்று அலுத்துக்கொள்ளும் போது, இன்று கரூர் மாவட்டத்தில் நிறைய இடங்களில் பதுக்கி வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்த போது, தன் கடமையை தான் அவர்கள் செய்கிறார்கள் என்று புரிந்தது.  ஆனால் பிரச்சாரம் என்ற பெயரில் பொது சாலைகளை அடைத்து மேடை போட்டு வண்டிகளை அந்த சாலையில் விடாமல் வேறு சாலைகளில் திருப்பி விட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்.  இதற்கெல்லாம் அதிகாரம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று தெரிய வில்லை. 

Image result for tamil nadu election 2016 

இந்த முறை பிரதான  இரண்டு கட்சிகளை தவிரவும் பிற கட்சி கூட்டணிகள் இருப்பது ஒரு ஆறுதலும், விறுவிறுப்பும் கூட.  சில கட்சி தலைவர்களுக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தலாகவும், வரும் ஆண்டுகளில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர வழி செய்யும் தேர்தலாகவும் இது இருக்கக் கூடும். இந்த தேர்தலில் வெற்றி பெரும் கட்சியும், இது வரை இருக்கும் அரசியல் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்களை செய்து மக்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  தேர்தலில் நிற்கும் கட்சிகளும், அவர்களின் பிரச்சார முறைகளும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், இலவச வாக்குறுதிகளும் எதுவும் இந்த தேர்தலில் மாற வில்லை.  ஆனால் மக்கள் தங்களுக்குள் எழுப்பும் கேள்விகளும், அரசியல் தலைவர்களை ஆழ்ந்து பார்ப்பதிலும், நையாண்டி செய்வதிலும் நல்ல மாற்றங்கள் தெரிகிறது.  இந்த தேர்தலின் முடிவிலும் அதன் தொடர்ச்சியான ஆட்சியிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்காவிட்டாலும், அடுத்த தேர்தல் தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் தேர்தலாக இருக்கும் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.  

இருந்தும், அம்மாவின் வேட்பாளர் மாற்றங்களும், கலைஞரின் குற்றசாட்டுகளும், விஜயகாந்தின் புரியாத பேச்சும், வைகோவின் கூட்டணிகளும், ராமதாஸின் தேர்தல் அணுகுமுறைகளும், பா.ஜ.க வின் பரிதவித்தலும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக whatsapp, facebook இவற்றில் வரும் memes மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் விவாதங்களும் இந்த தேர்தலை விறுவிறுப்பான தேர்தலாக்கி இருக்கிறது.  தேர்தல்  2016 - பந்தயம்   ஜோர்!!! 

ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

Flop ஆகி போன தேர்தல் அறிக்கைகள்...

தேர்தல் அறிக்கை என்பதை எல்லாம் மக்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை என்பது கட்சிகளுக்கு நன்றாக தெரிந்து விட்டது.  போன தேர்தலில் சொன்னதை எல்லாம் மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்ன?  அதனால் எதை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்ற தைரியம். வானத்தில் உள்ள நட்சத்திரத்தை பிடுங்கி கொண்டு வருவோம், இமய மலையை தமிழ் நாட்டுடன் சேர்த்து விடுவோம் என்று இஷ்டத்துக்கு கதை விடறது...  கச்ச தீவை மீட்பது, தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக கொண்டு வருவது எல்லாம் இப்படி தான்.  நடு நடுல இலவசம் இலவசம்னு சிலதை போட்டுக்கணும்.  

ஆனால் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது... நம் தொகுதியில் போன முறை வெற்றி பெற்றவர் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் செய்து விட்டாரா என்று பார்ப்பது அவசியம்.  அப்படி செய்யவில்லை என்றால் அந்த கட்சியை தவிர்ப்பது நல்லது.  

இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை;

-  அணைத்து திட்டங்களையும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மறுஆய்வு  
   செய்யவோம்.  அதில் மக்களின்  கருத்துக்களும் இடம் பெற செய்வோம்.

-  தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து 
   ஒத்துழைப்போம்.

-  சென்னை போன்ற மக்கள் அடர்த்தி உள்ள நகரங்களை விரிவு 
   படுத்துவோம்.  புதிய அடுக்கு மாடி கட்டிடங்களை இங்கே கட்ட அனுமதி 
   கொடுக்க மாட்டோம்.

-  கல்வி தரத்தை உயர்த்துவோம்.  தொழிற்முறை கல்விக்கு முக்கியத்துவம் 
   கொடுப்போம்.

-  புதிய மின் நிலையங்களை தொடங்கி மின்சார தட்டுப்பாடை நீக்குவோம்.

-  மதுவிற்கு எதிரான பிரசாரத்தை தீவர படுத்துவோம்.  மது கடைகளை 
   திறந்து வைத்திருக்கும் நேரத்தை குறைப்போம்.

-  எந்த பொதுப்பணி துறையின் வேலையானாலும் அதை தரத்துடன், உரிய 
   காலத்தில் முடிப்போம். ப்ராஜெக்ட் முடியும்வரை அதன் தற்போதைய 
   நிலையை  மக்களுக்கு தெரியப் படுத்துவோம்.  

- அரசாங்க மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவோம்.

இப்படி எத்தனையோ... படிப்படியாக செய்வோம்  என்றால் கூட நல்லது.  ஆனால் இங்கே என்ன நடக்கிறது.  தேர்தல் அறிக்கையை வைத்து தேர்தல் நடப்பதில்லை.  ஒரு கட்சியை பற்றி  மற்ற கட்சி மோசமான வார்த்தைகளால் வசை பாடுவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமே நடக்கிறது. இவ்வாறு நடப்பதற்கு மக்களாகிய நாம் இடம் கொடுத்து விட்டோமா என்று தோன்றுகிறது.  கொஞ்சம் யோசிப்போம் மக்களே!!!








சனி, ஏப்ரல் 09, 2016

புத்தகம் படிக்கும் பழக்கம்

நான் சிறுவயதிலேயே புத்தகம் வாசிப்பதை கண்டு என் அப்பா எங்கே நான் கதை கிதை எழுதி கிறுக்கனாகி விடுவேனோ என்று பயந்ததுண்டு.  பின்னே, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே நாவல் (தமிழ்) படிக்க ஆரம்பித்து விட்டதால் கொஞ்சம் மிரண்டு தான் போனார்.  அப்போது, எங்கள் வீட்டு பரணை மேல் ஒரு கூடை நிறைய புத்தகங்கள் இருக்கும்.  பெரும்பாலும், தமிழ் நாவல்கள்.  புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், சாண்டில்யன், கல்கி போன்றோர் எழுதிய நாவல்கள் தான்.  மற்றும், மருத்துவம், சோதிடம், போன்ற பிற நூல்களும் இருக்கும்.  என் அப்பா வேலைக்கு சென்று விட்ட பின், பரணை மேல் ஏறி ஒரு நாவலை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காத ஒரு இடத்திற்கு (மொட்டை மாடி) சென்று படிப்பது வழக்கம்.  அந்த சிறிய வயதில் முழுக்க  புரியாத போதிலும், க்ரைம் சம்பந்தமாக கொஞ்சம் புரிந்து ஒரு த்ரில் கொடுத்த அனுபவம் ஞாபகம் இருக்கிறது.  நான் இப்படி திருட்டுத்தனமாக படிப்பது அப்பாவிற்கு எப்படியோ தெரிந்து என்னை திட்டி தீர்த்தார்.  நான் அந்த கதைகளை எல்லாம் படித்து  கெட்டு போய் உருப்படி இல்லாமல் போய் விடுவேன்  என்று அவருக்கு பயம்.  வார வாரம் வரும் தொடர்களை கோர்த்து புத்தகம் ஆக்கி வைத்திருப்பார்கள்.  அப்படி ஒரு புத்தகமாய் தான் பொன்னியின் செல்வன் படித்தேன்.  அப்போது ஆறாவது படித்ததாய் ஞாபகம்.  ஐந்து புத்தகங்களாக இருந்ததை ஒரு வாரத்தில் முடித்து விட்டேன் (பரீட்சை முடிந்ததும் விடும் லீவில்).   இப்படி படிப்பதை பார்த்து சொந்தக்காரர்கள் என்ன உங்க பையன் புத்தக புழுவாக இருக்கிறான் என்று என் அம்மாவை பார்த்து கேட்பார்கள். கதை புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு பாட புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை எனினும் ஓரளவிற்கு மார்க் வாங்கி விடுவேன்.  

பிறகு, கல்லூரி காலத்தில் நண்பன் ஒருவன் அறிமுகப்படுத்தியதில் பாலகுமாரன் படிக்க ஆரம்பித்து பிறகு அப்படியே ஜெயகாந்தன், கல்கி, புதுமைபித்தன், சுஜாதா, சுந்தர ராமசாமி என்று படிக்க ஆரம்பித்து புத்தக புழுவான நான் புத்தக பட்டாம்பூச்சி ஆகி விட்டேன்.   ஆனால் இவ்வளவு கதைகள் படித்து இருந்தாலும், நான் படித்ததை யாரிடமும் விவாதித்ததில்லை.  ஏனென்றால், என் நண்பர்கள் பலருக்கு கதை படிக்கும் பழக்கமில்லை.  என்னை சுற்றிலும் இலக்கிய கூட்டமெல்லாம் இருக்காது. எப்போதாவது என் நண்பர்கள் வீட்டிற்கு வந்து புத்தக அலமாரியை பார்த்தால், நீ புத்தகங்கள் எல்லாம் படிப்பாயா என்று ஆச்சர்யம் படுவார்கள். என் மகள் பிறந்தவுடன் அவளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வரும் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் அவளுக்கு புத்தகம் படித்தால் தூக்கம் தான் வரும் என்று இப்போது தெரிந்து கொண்டேன்.  முன்பெல்லாம், புத்தகம் படிக்காதவர்களை கண்டால் என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றும்.   ஆனால், இப்போது தான் புரிகிறது, புத்தகம் படிப்பது என்பது சில பேருக்கே பிடித்தமானது.  அந்த பழக்கம் சில பேருக்கே வரும்.  இப்படி புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்.  எவ்வளவு பெரிய புத்தகம் ஆனாலும் கையில் எடுத்து விட்டால், முழுக்க படிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள். இதனால் பல வேலைகள் பாதிக்க படும். 

நான் சமீபகமாக France போய் இருக்கும் போது, அங்கே ரயிலில் நிறைய பேர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யம் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, அங்கு ரயிலுக்குள் செல் போன் சிக்னல் கிடைக்காது என்றும், அதனால் புத்தகம் தான் படிப்பார்கள் என்றும்.  இருந்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கம் அங்கே அதிகம்.  நம்மூரிலும் வருடம் வருடம் நடக்கும் புத்தக விழாவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.  சில புத்தகங்களையும், நிறைய நொறுக்கு தீனியும் (டெல்லி அப்பளம், தோசை, காப்பி) வாங்குவதில் அத்தனை ஆர்வம்.  நம் மக்களுக்கு எங்கு போனாலும் Snacks கடை இருக்க வேண்டும்.  அப்போது தான் எதுவுமே நடக்கும்.  இப்போது whatsapp, facebook , Kindles மற்றும் Blogs யுகத்திலும் புத்தகங்கள் விற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.  முன்பெல்லாம், குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் வாரத்தொடர்களை படித்ததுண்டு. இப்போது அவற்றை படிக்கிறார்களா என்று தெரிய வில்லை. இன்னொன்றையும் பார்க்கிறேன்.  கொஞ்சம் மேல் தட்டு மக்கள் என்றால் ஆங்கில புத்தகங்கள் தான் படிக்கிறார்கள்.  சாமான்ய தமிழ் மக்கள் படிப்பது குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வார பத்திரிக்கைகள் மட்டும் தான்.  என்னை போல் மற்றவர்களால் உந்த பட்டும், வேறு சில அறிமுகங்களாலும் தமிழில் நல்ல எழுத்தாளர்களின் நாவல்கள் படிப்போரும் உண்டு.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் நாட்டம் இருக்கும். புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளவருக்கு அதில் உள்ள சுவை போகவே போகாது.  மேலும், புத்தகம் படிப்பவர்கள் ஒரு வித மேன்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது என் கருத்து. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தாராளமாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணலாம்.  முதலில் தமிழில் வாசித்து பின்பு ஆங்கிலத்துக்கு மாறலாம். Google லில் சிறந்த தமிழ் நாவல்கள், சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் என்று தேடிப் பார்த்து வாங்கி படியுங்களேன்.

(புத்தகங்களை தயவு செய்து இரவல் மட்டும் கொடுத்து விடாதீர்கள்.  அது திரும்பி வரவே வராது!!!)