தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 23, 2016

தேர்தல் 2016- பந்தயம் ஜோர்!!

இந்த முறை தேர்தலில்   உண்மையாகவே அனல் பறக்கிறது.  சூரியனின் உக்கிரத்தால் வெப்பம் இப்பவே 41 deg C ஆக கொதிக்கிறது.  தேர்தல் தினத்தில் (மே 16) எவ்வளவு செல்சியஸ் சென்று ஓட்டு சதவீதத்தை பாதிக்க போகிறதோ தெரியவில்லை.  பிரச்சாரத்தில் தலைவர்கள் சூட்டை கிளப்புகிறார்களோ இல்லையோ, சூரியன் கிளப்பும் சூட்டில் நாலைந்து பேர் இறந்து போனது பரிதாபம்.  தமிழா! பிரியாணி பொட்டலத்துக்கும், குவாட்டருக்கும் சொச்ச பணத்துக்கும் இப்படி வெயிலில் மாண்டு போனாயே...


ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குறுதிகளில் இலவசங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.  மிக்சி, Fan, Grinder, கணினி என்று ஆரம்பித்து இப்போது  fridge, வாஷிங் மெஷின் என்று போய்க்கொண்டிருக்கிறது.  ஒரு ரூபாய் வாங்கினாலும், அதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் நம் மக்கள் என்பதை அரசியல் வாதிகள் புரிந்து வைத்துள்ளனர்.   ஒரு கட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,  உங்களுக்கு மாத சம்பளமே இலவசமாக கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.  மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டில் நடக்கும் இலவச திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டு போகிறார்களாம்.  நாட்டை கெடுப்பதில் தமிழ்நாடு எப்படி முன்னோடியாக இருக்கிறது பாருங்கள்!! தேர்தல் வாக்குறுதி என்றால் எவ்வளவு பெரிய விஷயம் என்பது போய், அதை காமெடி அறிக்கை ஆக்கி விட்டார்கள்.  

கையில் கேமரா சகிதம் போலீஸ்காரர்கள் அங்காங்கே வண்டிகளை நிறுத்தி சோதனை செய்கிறார்கள்.  காருக்குள் என் மனைவியும், மகளும் இருந்தும் கூட என் வண்டி பலமுறை நிறுத்தி சோதனை செய்யப் பட்டது.  என்னடா இப்படி தொல்லை கொடுக்கிறார்கள் என்று அலுத்துக்கொள்ளும் போது, இன்று கரூர் மாவட்டத்தில் நிறைய இடங்களில் பதுக்கி வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்த போது, தன் கடமையை தான் அவர்கள் செய்கிறார்கள் என்று புரிந்தது.  ஆனால் பிரச்சாரம் என்ற பெயரில் பொது சாலைகளை அடைத்து மேடை போட்டு வண்டிகளை அந்த சாலையில் விடாமல் வேறு சாலைகளில் திருப்பி விட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்.  இதற்கெல்லாம் அதிகாரம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று தெரிய வில்லை. 

Image result for tamil nadu election 2016 

இந்த முறை பிரதான  இரண்டு கட்சிகளை தவிரவும் பிற கட்சி கூட்டணிகள் இருப்பது ஒரு ஆறுதலும், விறுவிறுப்பும் கூட.  சில கட்சி தலைவர்களுக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தலாகவும், வரும் ஆண்டுகளில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர வழி செய்யும் தேர்தலாகவும் இது இருக்கக் கூடும். இந்த தேர்தலில் வெற்றி பெரும் கட்சியும், இது வரை இருக்கும் அரசியல் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்களை செய்து மக்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  தேர்தலில் நிற்கும் கட்சிகளும், அவர்களின் பிரச்சார முறைகளும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், இலவச வாக்குறுதிகளும் எதுவும் இந்த தேர்தலில் மாற வில்லை.  ஆனால் மக்கள் தங்களுக்குள் எழுப்பும் கேள்விகளும், அரசியல் தலைவர்களை ஆழ்ந்து பார்ப்பதிலும், நையாண்டி செய்வதிலும் நல்ல மாற்றங்கள் தெரிகிறது.  இந்த தேர்தலின் முடிவிலும் அதன் தொடர்ச்சியான ஆட்சியிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்காவிட்டாலும், அடுத்த தேர்தல் தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் தேர்தலாக இருக்கும் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.  

இருந்தும், அம்மாவின் வேட்பாளர் மாற்றங்களும், கலைஞரின் குற்றசாட்டுகளும், விஜயகாந்தின் புரியாத பேச்சும், வைகோவின் கூட்டணிகளும், ராமதாஸின் தேர்தல் அணுகுமுறைகளும், பா.ஜ.க வின் பரிதவித்தலும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக whatsapp, facebook இவற்றில் வரும் memes மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் விவாதங்களும் இந்த தேர்தலை விறுவிறுப்பான தேர்தலாக்கி இருக்கிறது.  தேர்தல்  2016 - பந்தயம்   ஜோர்!!! 

ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

Flop ஆகி போன தேர்தல் அறிக்கைகள்...

தேர்தல் அறிக்கை என்பதை எல்லாம் மக்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை என்பது கட்சிகளுக்கு நன்றாக தெரிந்து விட்டது.  போன தேர்தலில் சொன்னதை எல்லாம் மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்ன?  அதனால் எதை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்ற தைரியம். வானத்தில் உள்ள நட்சத்திரத்தை பிடுங்கி கொண்டு வருவோம், இமய மலையை தமிழ் நாட்டுடன் சேர்த்து விடுவோம் என்று இஷ்டத்துக்கு கதை விடறது...  கச்ச தீவை மீட்பது, தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக கொண்டு வருவது எல்லாம் இப்படி தான்.  நடு நடுல இலவசம் இலவசம்னு சிலதை போட்டுக்கணும்.  

ஆனால் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது... நம் தொகுதியில் போன முறை வெற்றி பெற்றவர் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் செய்து விட்டாரா என்று பார்ப்பது அவசியம்.  அப்படி செய்யவில்லை என்றால் அந்த கட்சியை தவிர்ப்பது நல்லது.  

இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை;

-  அணைத்து திட்டங்களையும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மறுஆய்வு  
   செய்யவோம்.  அதில் மக்களின்  கருத்துக்களும் இடம் பெற செய்வோம்.

-  தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து 
   ஒத்துழைப்போம்.

-  சென்னை போன்ற மக்கள் அடர்த்தி உள்ள நகரங்களை விரிவு 
   படுத்துவோம்.  புதிய அடுக்கு மாடி கட்டிடங்களை இங்கே கட்ட அனுமதி 
   கொடுக்க மாட்டோம்.

-  கல்வி தரத்தை உயர்த்துவோம்.  தொழிற்முறை கல்விக்கு முக்கியத்துவம் 
   கொடுப்போம்.

-  புதிய மின் நிலையங்களை தொடங்கி மின்சார தட்டுப்பாடை நீக்குவோம்.

-  மதுவிற்கு எதிரான பிரசாரத்தை தீவர படுத்துவோம்.  மது கடைகளை 
   திறந்து வைத்திருக்கும் நேரத்தை குறைப்போம்.

-  எந்த பொதுப்பணி துறையின் வேலையானாலும் அதை தரத்துடன், உரிய 
   காலத்தில் முடிப்போம். ப்ராஜெக்ட் முடியும்வரை அதன் தற்போதைய 
   நிலையை  மக்களுக்கு தெரியப் படுத்துவோம்.  

- அரசாங்க மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவோம்.

இப்படி எத்தனையோ... படிப்படியாக செய்வோம்  என்றால் கூட நல்லது.  ஆனால் இங்கே என்ன நடக்கிறது.  தேர்தல் அறிக்கையை வைத்து தேர்தல் நடப்பதில்லை.  ஒரு கட்சியை பற்றி  மற்ற கட்சி மோசமான வார்த்தைகளால் வசை பாடுவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமே நடக்கிறது. இவ்வாறு நடப்பதற்கு மக்களாகிய நாம் இடம் கொடுத்து விட்டோமா என்று தோன்றுகிறது.  கொஞ்சம் யோசிப்போம் மக்களே!!!








சனி, ஜனவரி 16, 2016

பொங்கல், கரும்பு, பட்டிமன்றம்


தீபாவளி முடிந்து, புத்தாண்டும் முடிந்து அவ்வளவு தானா பண்டிகை, கொண்டாட்டங்கள் என்று நினைக்கும் வேளையில் வருவது தான் பொங்கல். வழக்கமாக பொங்கல் புது படங்கள் தான் சூடான பேச்சாக இருந்தாலும் இந்த முறை ஜல்லிக்கட்டு முந்திகொண்டது.  கடைசி வரை ஜல்லிகட்டை நடத்தவிடாமல் கட்டை போட்டு விட்டார்கள்.  கால காலமாக இருந்து வந்த உரிமையை பறித்து விட்டார்கள் என்ற உணர்வு தமிழரிடையே மேலோங்கி உள்ளது.  நீ யாருடா என்னை சொல்றது என்ற கோபமும் அதில் உள்ளது. அவர்கள் நம்மை ஹிந்தி  கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.  இதில் பல பிரச்சனைகள் சிக்கி கொண்டு உள்ளன.


போகி பண்டிகையின் போது விடியற்காலையில் எழுந்து பழைய குப்பைகளை எரிப்பது குளிருக்கு மிகவும் இதமாக இருக்கும்.  எரிப்பதற்கு குப்பைகள் தீர்ந்து போனால், வீட்டில் தேடி கண்டுபிடித்து பழைய புத்தகங்கள், மர சாமான்கள் கொண்டு வருவோம்.  போகி பண்டிகையின் போது சில சிறுவர்கள் தார் குச்சியை வைத்துகொண்டு சிறு மேளத்தை அடித்துக்கொண்டு "போகி போச்சு பொங்கல் போச்சு!! அய்யரு குடுமி எகிறி போச்சு " என்று பாடிக் கொண்டு போவார்கள்.  இப்போது நிஜமாகவே போகி போயே போச்சு!!


பொங்கலுக்கு முந்தின இரவு, அம்மாவோ மனைவியோ கோலம் போடும் போது ஆண் பிள்ளைகள் தான் காவல்.  அவர்கள் அழகாக போடும் கோலத்தை அங்கே அழி இங்கே மாற்று என்று சொல்லி குழப்பினாலும் அவர்கள் கோலத்தை அழகாக கொண்டு வந்து விடுவார்கள்.   நம் வீட்டு கோலம் தான் அழகு என்று நினைக்கையில், அடுத்த நாள் காலை, வீதிகளில் நடக்கும் போது தெரியும்  அழகான கோலங்களை வரைந்து விட்டு நம் வீட்டு பெண்மணிகள் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார்கள் என்று!!!

வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை கட்டும் வேட்டி ஆதலால் அது எங்கே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பெல்ட் போட்டு கட்டி நானும் தமிழன்டா என்று வலம் வருவதும், பெண்ணுக்கு பாவாடை சட்டை போட்டு அழகு பார்த்து அவளையும் கூட்டிக் கொண்டு கரும்பு வாங்க போவதும்  வாடிக்கை. ஒவ்வொரு பொங்கலுக்கும் கரும்பின் விலை அதிகமானாலும், அதன் Size மட்டும் குறைந்துகொண்டே போவது போல தோன்றும்.  இந்த முறை பென்சில் Size  க்கு  கொஞ்சம் அதிகம்.

காலை சன் டி.வி யில் அரட்டை அரங்கம். வாழ்க்கைக்கு தேவையானது ஞாபக சக்தியா? ஞாபக மறதியா? என்று ஒரு மாதிரியான தலைப்பு.  ஆனால் அதிலும்  பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஏமாற்ற வில்லை.  ராஜாவுக்கு பேச ஸ்கிரிப்ட் தேவையில்லை போல.   எதிர் அணியினர் பேசுவதை வைத்தே points தயார் செய்துகொள்கிறார்.  நாங்கள் பேசியதை ராஜா மறந்து விடுவார். எங்கள் பேச்சுக்கு எதிர்வாதம் வைக்க மாட்டார். ஏனென்றால் அவர் தான் ஞாபக மறதி அணியில் இருக்கிறாரே  என்று பாரதி பாஸ்கர் சொல்ல, ராஜாவோ பாரதி பாஸ்கர் சொன்னதையெல்லாம் நான் மறந்து விட்டேன் என்று பேச ஆரம்பித்தது ரொம்பவே சிரிப்பு வெடி.


மற்றபடி காதில் வந்து விழுந்தவை!!  பொங்கலில் வந்த படங்களில் ரஜினி முருகன் நன்றாக இருக்கிறது!! தாரை தப்பட்டை குடும்பமாக பார்க்க முடியாது!!! கதகளி சுமார்.  கெத்து சுமாருக்கும் சுமார்!!!  நான் இன்னும் பசங்க 2 பார்க்க வில்லை. அதற்கு பிறகு தான் ரஜினி முருகன் பார்க்க வேண்டும்.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்கழி விழாவென்று கர்னாடக கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கையில், பொங்கல் விழாக்களும் கொண்டாட பட வேண்டும் (முன்பு சங்கமம் விழா நடந்தது போன்று ).  அரசாங்கம் தமிழ்நாடு முழுவதும் வீதிகளை அழகு படுத்த வேண்டும்.  அலங்காரங்கள் வைக்க வேண்டும். எப்படி என்றால்? கீழே உள்ள படங்களை பாருங்களேன்.  பண்டிகைகள் மனித வாழ்க்கையின் வெற்றிடங்களை போக்கும்.  சண்டை சச்சரவுகளை குறைக்கும்.  மனிதர்களிடையே ஒரு நல்லிணக்கத்தை உண்டு பண்ணும்.

Image result for singapore pongal street decoration





Image result for christmas street decorationImage result for christmas street decoration







இதெல்லாம் ஆடம்பரமா? நிறைய செலவு ஆகுமா?  அப்படியென்றால்  இது எல்லாம் என்னதுங்க??










சனி, ஜனவரி 09, 2016

ஜல்லிகட்டுடன் ஒரு மல்லுகட்டு

நான் நகரத்து இளைஞன் தான்.  கிராமங்களில் ஒரு நாள் இரண்டு நாள் என்று ஒதுங்கியதோடு சரி.  மற்றபடி, கிராம மக்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள், வீரம் மிக்கவர்கள், வீராப்பு கொண்டவர்கள் என்று கதைகளிலும் படங்களிலும் கண்டதுண்டு.  அவர்களுக்கு இருக்கும் தைரியம் எனக்கு சுத்தமாக கிடையாது என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.

மாட்டிற்கு கொம்பு இல்லையென்றால் கூட பக்கத்தில் நடக்கையில் ஒரு safe distance வைத்துக்கொள்வது என் வழக்கம்.   அப்படியும் ஒரு சமயம், நான் நின்று கொண்டிருந்த பேருந்தில் நுழையும் வேளையில், ஒரு மாடு இடையில் புகுந்து என் கட்டை விரலை மிதித்து விட்டது. அதற்கே, என் கால் பெரு விரலில் மாத கணக்காய் வலி இருந்துக் கொண்டு மாட்டின் மீது ஒரு பீதியை கிளப்பி விட்டுருந்தது.



மற்றபடி, மாடு ம்மா வென்று கத்தும், பசு பால் கொடுக்கும் என்றும்,  கோயில்களில் இருக்கும் நந்தி சிலைகளை பார்க்கும் போது தோன்றும் அழகும்,  அன்பு உணர்வும் மாட்டின் பால் நான் கொண்ட அஹிம்சை எண்ணங்கள்.  ஆனால், மாட்டை உசுபேத்தி, எமனிடம் கால்ஷீட்டு வாங்கி தேதி குறிக்கும் கிராம இளைஞர்களின் தைரியம் மட்டும் வெகு நாள் புரியாமல் இருந்தது.  அதையே சென்னையில் மாட்டிற்கு  பதில் பைக்கை (bike ) வைத்து விளையாடும் Bike racing  பற்றி அறிந்த போது புரிந்து போனது.  ஓடும் பாம்பை காலால் மிதிக்கும் வயதில் (25 வயது வரை) மாடு குத்தினால்  உயிர் போகுமென்றோ, வேகமாக பைக் ஒட்டி சறுக்கி விழுந்தால் எமலோகம் என்பதும் புரிவதில்லை.  


சரி, மாடு பிடிப்பது, பைக் ரேஸ் விடுவதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்று இளைஞர்கள் வேண்டுமானால் சொல்லலாம்.   இது, குழந்தைகள் தீயில் விளையாடுவது போன்றது. இந்த பிரச்னையை கோர்ட் கையாண்டு தீர்ப்பு அளித்திருக்கிறது.  அரசியல் வாதிகள் ஏன் தன் சொந்த லாபத்திற்காக இதில் மல்லு கட்டுகிறார்கள்? ஒரு மைதானத்தில் பத்து காளை மாடுகளையும்  இருபது  அரசியல்வாதிகளையும் விட்டு ஏறு தழுவுதல் என்ற வீர விளையாட்டை விளையாட செய்ய வேண்டும். 

மாட்டிற்கு வலிக்கும் என்று PETA சொல்வதெல்லாம் அப்புறம்.  மனிதனுக்கு வலிக்காதா? ஒரு உயிர் என்றாலும் மனித உயிரல்லாவா?   அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது என்பது உண்மையல்லவா? ஜல்லிகட்டை தடை செய்யுங்கள்!!!  நான் சொன்னா உடனே நிறுத்திடுவாங்களா ! ஏதோ, என்னை மாதிரி ஒத்த கருத்து உள்ளவர்கள் நாலு பேர் இருந்தா எனக்கு ஒரு சந்தோஷம்.  

சென்னையில் பைக் ரேஸிங் தடை செய்யப்பட்டுள்ளது.  கிராமத்து இளைஞர்களே!!! ஜல்லிகட்டை எப்போது நிறுத்த போகிறீர்கள்???