ஞாயிறு, மார்ச் 12, 2017

தமிழ்நாடு இன்னும் கெட்டு போகட்டும்..

Back again after long time!!!

கடந்த ஐந்து ஆறு மாதங்களில் தான் எவ்வளவு விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன.  ஜெயலலிதாவின் மரணம் தொடங்கி, பண மதிப்பழிப்பு நடவடிக்கை, வரதா புயல், மெரினா புரட்சி, சசிகலா அரசியல்..இப்போது நெடுவாசல், மீனவர் பிரச்சனை என்று முக்கிய நிகழ்வுகள் நீண்டுக் கொண்டே இருக்கின்றன.

எல்லாவற்றையும் கவனிக்கையில், இப்போதெல்லாம் நாட்டு நடப்புகள் சட் சட்டென்று மாறி வருவதும், அதை விட முக்கியமாக மக்களும், அதிலும் இளைஞர்கள் பெருமளவு  பங்கேற்று வருவதும் சந்தோஷமே...  இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இப்படி ஒரு தருணத்தில் ஒரு தலைவர் இல்லாதது தான் ஒரே குறையாக தெரிகிறது.  இருந்தாலும் இந்த மாற்றங்கள் எல்லாம் இன்னும் சிறிது காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக  ஒரு தலைவரை உருவாக்கி விடுமென்றே தோன்றுகிறது.   கமல் ரொம்பவே சஞ்சல பட்டு அரசியலில் கிட்டத்தட்ட தொபுக்கடீர்ன்னு குதித்து விடலாம்னு முடிவே பண்ணிட்டு பிறகு பழைய அடிகளும், விழுப்புண்களும் ஞாபகம் வந்து , சுப்ரமணிய சுவாமியின் குடைச்சலும் தாங்க முடியாததால் reverse அடித்து விட்டார்.  

ரஜினி மீது மக்கள் உச்ச பட்ச கோபத்தில் இருப்பதும் தெரிகிறது.   எதோ அவர் வந்தால் நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பு முன்னர் இருந்தது. ஆனால் இது இருபது வருடங்களாக முடியாத தொடர் கதை போலானதும், இப்போது தமிழ் நாட்டில் இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாத ரஜினியை யாருக்கும் பிடிக்கவில்லை.  

நடிகர்களாவது பரவாயில்லை.  சகாயம், பொன்ராஜ் (அப்துல் கலாமிற்கு அறிவியல் ஆலோசனை வழங்கியவர்) போன்றோரும், மற்ற துறையில் உள்ளோரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் அளவு அவர்களுக்கு தைரியம் வர வில்லை.   நாமும் இத்தனை நிகழ்வுகளை பார்த்துக்கொண்டும் ஏதாவது கருத்துக்களை முகநூலிலும் வாட்ஸாபிலும் போட்டு விட்டு நம் வேலையை கவனித்து வாழ்க்கையை ஓட்ட கற்றுக் கொண்டோம்.

மெரினா புரட்சி போன்று இன்னொரு முறை நடக்க வேண்டுமென்றால் அதற்கு தமிழ் நாடு இன்னும் கெட்டு போக வேண்டும் போலிருக்கிறது.  கூவத்தூர் கூத்துக்களும், மீனவர் சுட்டு இறந்ததும், நிலை இல்லாத தமிழக அரசியலும், நெடுவாசல் போராட்டமும் போதவே போதாது. இப்படி பிரச்சனை மேல் பிரச்சனைகள் தமிழனை அழுத்தி திமிர வைக்கும் போது இன்னொரு புரட்சி வெடிக்கும்.  அதற்கு தமிழகம் இன்னும் கெட்டு போக வேண்டும். இப்போதைய நிகழ்வுகளை ஒரு அளவு கோலில் வைத்து பார்ப்போமானால் அவை எவ்வளவு தரம் தாழ்ந்து போய்க்கொண்டு இருக்கிறது என்று உணர முடியும்.  சீக்கிரம் அது bottom most நிலைக்கு போகும் போது ஒரு மாற்றம் வருமா என்று பார்ப்போம்.