செவ்வாய், டிசம்பர் 19, 2006

கலக்குங்க தலைவா கலக்குங்க..


சூப்பர் ஸ்டாரின் புது மொட்டை ஸ்டைல். வழக்கம் போல் தலைவர் பட்டையை கிளப்புறார்.

சனி, டிசம்பர் 02, 2006

அடையாளம்

இந்த பதிவு, எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கான வெளிப்பாடு. நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் நம் வீடும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயமும், இனமும் நமக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்தை சுமந்துக்கொண்டு அதன் மூலம் மற்றவரை நோகடித்துகொண்டு வாழ்கிறோம்.

நாம் பிறக்கும் போது அமையும் அடையாளங்களான உடலின் அமைப்பு, நிறம் தவிர நமக்கு வேறு அடையாளங்கள் இருந்ததில்லை. ஆனால் நாம் வளர, வளர எத்தனையோ அடையாளங்கள் வந்து நம்மீது ஒட்டிக்கொள்கிறது.

ஹிந்துவாய் பிறந்தவன் என்றால் அவனுக்கு நெற்றியில் குங்குமம், விபூதி, சிவப்பு கோடு, பட்டைக்கோடு.
முஸ்லீம் என்றால் தலையில் குல்லா, நீண்ட அங்கி, தாடி........ இப்படி...
இவை மாதிரி christians-க்கு இல்லை என்றாலும் மற்ற அடையாளங்கள் உண்டு.

இந்த அடையாளங்களை பழித்தோ நீக்கசொல்லியோ பாருங்கள். அது பெரிய சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது. ஐய்யரை எடுத்தால் அவர் விஞ்ஞானியாக இருந்தாலும், நிறுவனத்தின் General Manager-ஆக இருந்தாலும் பூணூல் போட்டிருக்க வேண்டும். ஐய்யர் உடம்பு பூணூலோடே வாழவேண்டும். அந்த உடம்பின் விதி அப்படி. அறிவியல் படி அந்த நூலால் எதாவது உடலுக்கு நல்லது என்றால் மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம்.

முஸ்லீம்கள் தலையில் தாடியும், நீண்ட அங்கி அணிந்துக்கொள்வதும் அவர்களுக்கும், அதை பார்ப்பவர்களுக்கும் ஒரு தண்டனையாகவே தெரிகிறது. சர்தார்கள் தலையில் நிரந்தர குல்லா போட்டுக்கொள்வதும் அப்படியே.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், நீண்ட அங்கியும், தாடியும் போட்டிருக்கும் முஸ்லீம்கள், நெற்றியில் கோடு போடும் ஹிந்துக்கள், கறுப்பு பர்தா போட்டு திரியும் உருவங்கள் எல்லாம் சில சமயங்கள்ளிலும், சில இடங்களிலும் மனிதர்களை பயமுறுத்துவதாக உள்ளது.

மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும். இஷ்டப்பட்டால் தாடி, இல்லை வெறும் மீசை, விரும்பிய சிகை அலங்காரம், விருப்ப உடையணிதல் ஆகியவை வேண்டும். ஒருவனை பார்த்தால் அவன் முஸ்லீமா, ஹிந்துவா, கிறிஸ்டியனா என்று தெரியக்கூடாது. முதலில் நாமெல்லோரும் Phisical அடையாளங்களை விட்டொழிப்போம். பிறகு, நம் பழக்கங்கள், சாதி மற்றும் மத நெறிமுறைகளின் அடையாளங்களை விடுவதைப் பற்றி யோசிக்கலாம்.

வெள்ளி, செப்டம்பர் 22, 2006

சிலர் இப்படித்தான்

நேற்று, பெங்களூரில் இருந்து சென்னை செல்வதற்காக, பெங்களூர் மெயிலில் உட்கார்ந்திருந்தேன். ரயில் புறப்படும் நேரம் இரவு 10.45. தனியாக ஜன்னலோரம் ஒற்றை இருக்கையில் அமர்ந்து இருந்த போது, பக்கத்தில் ஒரு பெரிய மார்வாடி குடும்பம் (பெரிய என்றால் ரொம்ப.. பெரிய லக்கேஜுக்களையும் சேர்த்து) வந்து உட்கார்ந்தது. அவர்களுக்கு மேலே என்னுடையது Upper Berth. கொண்டு வந்த மூட்டை முடிச்சுக்களை என் Berth முழுக்க அடுக்கி விட்டார்கள். நான் படுக்கும் போது சொல்லலாம் என்று இருந்தேன். இரண்டு பெரிய பைகளை வழியில் வைத்துவிட்டார்கள். போவோர் வருவோர் எல்லாம் இடித்துக்கொண்டு போக, அது பக்கத்து அறைக்கு சென்றுவிட்டது.

மூன்று பெண்கள், ஒரு பாட்டி, இரண்டு ஆண்கள், நான்கு குழந்தைகள் எல்லோருக்கும் இடம் எப்படி போதும், என்று நான் யோசித்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த ஒர் ஆண் என்னிடம் மெதுவாக ஹிந்தியில் கேட்டார். "மேரா பேட்டிக்கோ ஆப் தேக்கா ஹைக்கியா?" இங்கு அமர்ந்திருந்த என் குழந்தையை பார்த்தீர்களா ? என்று. பக்கென்று இருந்தது எனக்கு. அப்போது தான் கவனித்தேன். அழகான ஒரு குழந்தையை (இரண்டு வயதிருக்கும்) அங்கே காணவில்லை. உடனே, அந்த ஆண்கள், பாட்டி மற்றும் ஒரு பெண் குழந்தையை தேட சென்று விட்டார்கள். நேரம் 10.40 ஆகி விட்டது. ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி!

குழந்தை பத்திரமாக கிடைக்க வேண்டுமே என்று நான் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கும் போது, பக்கத்தில் மீதம் இருந்த மார்வாடி பெண் மிகவும் நிதானமாக பதட்டமே இல்லாமல் அவர் குழந்தைக்கு Chips கொடுத்துக்கொண்டு இருந்தார். காணாமல் போன குழந்தையின் அம்மா, மீண்டும் அந்த இடத்துக்கு வந்த போது, ஏற்கனவே அங்கு இருந்த பெண் கூறியது: "எங்கே போயிருக்கும். வந்துரும். பொறுமையாக இரு" என்று சொல்லிவிட்டு தன் வேலையை செய்துக்கொண்டு (chips கொடுக்கறது தாங்க!) இருந்தார். நேரம் 10.45 தாண்டி ஐந்து நிமிடங்கள் கழித்து குழந்தையை பத்திரமாக கொண்டு வந்தார் ஒருவர். நல்ல வேளை ரயில் கிளம்பவில்லை. எனக்கும் நிம்மதியாக இருந்தது. மற்றவர்களை போல் அவர்கள் யாரும் அழவில்லை. சத்தம் போடவில்லை. கிடைத்த குழந்தையை எங்கே போனாய் என்று அடிக்கவுமில்லை.

ரயில் புறப்பட்டதும், ஒவ்வொரு Berth-லேயும் இரண்டு குழந்தைகளை போட்டார்கள், தூங்க வைப்பதற்கு. அதிலேயே அந்த பெண்களும் படுத்துக்கொண்டனர். பிறகு பேசினார்கள்... பேசினார்கள்.... 12 மணி வரை பேசினார்கள். அந்த நேரத்திலும் mixture, காரம், chips கொறித்துக்கொண்டு....
கொஞ்ச நேரத்தில் நானும் தூங்கிப்போனேன்.
மணி 2.00 இருக்கும். திடீரென்று ஒரே சத்தம். முகத்தில் light flash. என்னடாவென்று எழுந்து பார்த்தால், பெரிதாக ஒன்றுமில்லை. light போட்டுக்கொண்டு அவர்கள் பாஷையில் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். அது விவாதமா, வெட்டிப்பேச்சா தெரியவில்லை. அவர்களை சத்தம் போடக்கூட தோணாது, தூக்கக் கலக்கத்தில் நானும் தூங்கிப்போனேன்.

சனி, செப்டம்பர் 09, 2006

வீழ்ந்து எழும் சூரியன்..

வானமும் பூமியும் தொட்டுக்கொள்ளும்
விளிம்பில் ஓர் சிவப்பு வண்ண
சிதறலில் வீழ்ந்து அணையும் சூரியன்.
சில பறவை கூட்டம் அதை கடந்து செல்லும்
நகரும் கறுப்பு புள்ளி போட்ட கோலமாய்...
நிழல் நீளும் அந்த பொழுதில்
நிமிட நேரங்களில் இருள் போர்வை
போர்த்தும் பூமி.
தூரத்தில்.. நீண்டு வளர்ந்த தென்னைமரத்தின்
தலை வந்தமரும் வெண்ணிலவு.
கீற்றினூடே மஞ்சள் ஒளிக்கீற்று வந்து
காற்றுக்கும் உற்சாகம் கிளறி விடும்.
கறுப்பு சுரங்கத்தில் வைரக்குவியலும்
அதன் வழியே ஒரு தங்கநிலவும்
ஓர் இரவு முழு பொழுதில்
களவு போவதின் கதைசொல்லும் ஈரக்காற்று
காலை கண்விழிக்கும் பூமியிடம்.
பசித்த பூமிக்கும் இன்னும் பல உயிருக்கும்
பரிமாற வேண்டி வானத்தில் அடுப்பெரிக்க
இன்னொர் முறை
சிவப்பு வண்ண சிதறலில் எழுந்துக்கொள்ளும்
சூரியன்.


ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2006

தற்போது பிடித்ததும், பிடிக்காததும்..

தற்போது பிடித்தது

B.S.N.L மற்றும் Indian Railway துறை...

தற்போது பிடிக்காதது

கடந்த இருபது வருடங்களாக நான் பார்த்த, பார்க்கின்ற மாறவே மாறாத வடசென்னை.

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2006

ராசியில்லாதவர்கள்


நாம் வாழ்க்கையில் ராசியில்லாதவர்கள் என்று சிலரை சொல்லக் கேட்டதுண்டு. ஏன் நம்மில் சிலருக்கே அந்த எண்ணம் இருக்கக்கூடும். அந்த வகையில், நல்ல திறமை இருந்தும் கூட, சிலருக்கு கிடைக்க வேண்டிய பேரும் புகழும் கிடைக்காமல் போனதுண்டு. இது அவர்களில் சிலரை பற்றி......

1. வாணி ஜெயராம்
சில நாட்களுக்கு முன்பு விஜய் டி.வியில், Coffee with Suchi நிகழ்ச்சியில், வாணி ஜெயராமின் பேட்டி ஒளிபரப்பானது. கூடவே அருணா சாய்ராமும். அருணாவை அதிகம் பாட சொல்லி (கர்நாடக சங்கீதம்) கேட்ட Suchi வாணி ஜெயராமை பாடவே சொல்லவில்லை. வாணியின் மேகமே.. மேகமே பாடலை பாட சொல்லி கேட்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். நடுவில், கடந்த கால வாழ்க்கையில் எதையாவது மாற்ற நிணைக்கிறீர்களா என்ற கேள்விக்கு வாணி என் ஜாதகத்தை மாற்ற நிணைக்கிறேன் என்றார். "உனக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரம் கிடைக்கவில்லை" என்று வாணியின் நண்பர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். புதுசு புதுசாய் யார் யாரோ திரையிசை உலகில் வந்து கலக்கிக்கொண்டு (பந்தா) இருக்கிறார்கள். பழையவர்களூம் (S.P.B, ஜானகி, சித்ரா போன்றோர்) கச்சேரி, நட்சத்திர இரவு என்று செய்திகளில் வந்து போகிறார்கள். வாணி ஜெயராம் ஏன் இவற்றில் கலந்துக்கொள்வதில்லை என்று தெரியவில்லை. அரசும், அவரை கவுரவித்து ஏதேனும் விருது கொடுத்திருக்கிறதா? (பழைய விருதுகள் தவிர்த்து). S.P.B, ஜேசுதாஸ், ஜானகி, சித்ரா வரிசையில் கூட வாணி ஜெயராமுக்கு இடம் கிடையாது!!! "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி", "ABC நீ வாசி", "நானே நானா யாரோ", "கவிதை கேளுங்கள்", "ஏழு ஸ்வரங்களுக்குள்", "மல்லிகை என் மன்னன்" போன்ற இனிமையான பாடல்களை பாடியவர்க்கு அதற்கான அங்கிகாரம் கிடைத்திருக்கிறதா??

2. அணில் கும்பிளே
இந்திய Cricket, Bowling துறையில் கும்பிளே அதிக விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார் (ஐநூறுக்கும் மேல்). Courtney Walsh-ஐ முந்த இன்னும் சில விக்கெட்டுகளே பாக்கி. ஆனால், Sunil Gavaskar, Kapil Dev, Tendulkar போன்றோர்களுக்கு மக்களிடையேயும், மீடியாவிலும் கிடைத்த/கிடைக்கும் வரவேற்பு கும்பிளேவிற்கு கிடைக்கிறதா என்றால் பதில் இல்லை. Rahul Dravid கூட அந்த வகையை சேர்ந்தவரே.

மற்ற ராசியில்லாதவர்கள் பற்றி பின்னர் தொடர்கிறேன்...

ஒரு திறமையும் இல்லாமல் கொடிகட்டி பறப்பவர்களும் உண்டு. அவர்களை பற்றியும் பின்னர்.....

ஞாயிறு, ஜூலை 16, 2006

Mumbai- குண்டுவெடிப்பு

முதலில் இதற்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டாலும், இது போன்று இன்னும் எத்தணை நிகழப்போகிறது என்று மனது அச்சம் கொள்கிறது. இப்போதெல்லாம், வருடம் தோறும் மழை வெள்ளம், இரண்டு ஆண்டிற்கொருமுறை நிலநடுக்கம், ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை குண்டுவெடிப்பு என்று வரைமுறை வைத்துக்கொள்ள வேண்டும் போல!!.

ராணுவத்தின் துணைக்கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பேச்சு வார்த்தை, கண்டனம், Bus போக்குவரத்து, உல்லாச பயணம்- இப்படி போய்க்கொண்டிருந்தால் குண்டு வெடிப்புகளும் வாடிக்கையாகிவிடும். எங்கேயாயினும், நாம் காணும் ஓர் இறப்புக்கே எத்தனை அழுகல், சோகம், இழப்பு பார்க்கின்றோம். அத்தணை உயிர் பறிபோனதில், எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கடவுளும், மன்மோகன் சிங்கும் இந்தியா ஒரு ஈராக்காக (குண்டு வெடிப்பில்) மாறாமல் இருக்க உதவ வேண்டும்.

உலகப்கோப்பை கால்பந்து இறுதி - 2006


இத்தனன நாட்களாக அலுவல் மற்றும் வீட்டு வேலைகளிலும் கொஞ்சம் சோம்பேறித்தனமும் சேர்ந்துக்கொண்டதால் பதிவு பக்கமே வர முடியாமல் போய்விட்டது. எழுத நிணைத்து எழுத முடியாமல் போனது இது.
2006- உலகப்பந்து கால்பந்து இறுதி போட்டி: அலுவல் வேலை பளு காரணமாக அனேக போட்டிகளை காண முடியவில்லை (பெரிய போட்டிகள் எல்லாம் நள்ளிரவு 12.30 என்பது தலைவலி). France-க்கும் Italy-க்கும் நடந்த இறுதிப்போட்டி நல்ல விறுவிறுப்பு. Zidane, Materazzi அடித்த கோல்களால் ஆட்ட தொடக்கமே களை கட்டியது என்றால், பின்னர் Luca Tony-யின் முயற்சியில் பந்து வளைக்கம்பியில் பட்டு விலகியதும், Pirlo-வின் முயற்சியும் வளையோரம் போக்கு காட்டி சென்றதும் Italy வென்றுவிடக் கூடிய சாத்தியங்களாக தெரிந்தது. இதற்கு சற்றும் சளைக்காமல், Henry, Ribery மற்றும் Zidane (இவரது Header-ஐ Buffon எம்பி தடுத்தது அழகு) France-யின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினார்கள். ஆனால் கடைசியில் Henry, Ribery ஆகியோர் ஆட்டத்தில் இருந்து வெளிசென்றதும், Zidane வெளியேற்றப்பட்டதாலும் (Materazzi-ஐ தலையால் முட்டியதால்) France களை இழந்தது. பின்னர் Penalty-யில் Italy சரமாரியாக Goal போட்டு கோப்பையை வென்றதெல்லாம் வரலாறு ஆகிவிட்டது. Zidane செய்தது சரியா தப்பா என விசாரணை என்றெல்லாம் போனாலும், ஒரு அருமையான இறுதி போட்டியை தந்ததாலும், தன் நாட்டை இறுதி வரை கொண்டு சென்றதாலும், கடைசி போட்டி என்பதாலும், 'தங்கப்பந்து' Zidane-க்கு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே.
அப்பாடா! கஷ்டப்பட்டு ஏதோ எழுதியாகிவிட்டது. அத்தனனயும் எல்லோராலும் அக்குவேறாக விவாதிக்கப்பட்டு விட்டாலும், என் பதிவிலும் கால்பந்து பற்றி கொஞ்சம் இருக்கட்டுமே என்று தான் இது (For the Records!!!!)
இதெல்லாம் இருக்கட்டும்!!! How to write Zidane, Frane, Materazzi etc. in தமிழ். தமிழுக்கு அவசியம் ஒரு வீரமாமுனிவர் தேவை.

வெள்ளி, ஜூன் 16, 2006

Reel ரஜினி




rajinifans.com இல் கடந்த பத்து ஆண்டுகளில் ரஜினி கொடுத்த சில பேட்டிகளை காண நேர்ந்தது. ஒன்றில் கூட அவர் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லவில்லை.


இதற்கிடையில், இந்த வார குமுதம் கேள்வி பதிலில் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்...

கேள்வி: விஜய்காந்த் - ரஜினி ஒப்பிடுக?

பதில் : ஒருவர் Real - இன்னொருவர் Reel
இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு பேட்டியிலும் தன் நிலையை விளக்கியிருந்தும், அரசியல் நிலையில் குழப்புகிறார் என்று கூறப்படுவதெல்லாம் அவரின் சினிமா டயலாக்குகளை வைத்து தான் என்று தெரிகிறது.

அதனால் தான் Reel ரஜினியோ?

ஞாயிறு, ஜூன் 11, 2006

புதுப்பேட்டையும் செல்வராகவனும்

இன்று (ஞாயிறு) காலை விஜய் டி.வியில், மதன் திரை பார்வையில் செல்வராகவனை பேட்டி கண்டார்கள் (புதுபேட்டைக்காக). பேட்டியில், புதுபேட்டை மக்களிடம் சரியாக போய் சேராததை போல் பேசினார் செல்வராகவன். (உண்மையில் புதுபேட்டை மெதுவாக பிக் அப் ஆவதாக கேள்வி!!). அதற்காக வருந்தியவர், இனி தமிழ் படங்கள் பண்ண போவதில்லை என்றும், தெலுகு, மற்றும் இந்தி படங்கள் பண்ண போவதாக தெரிவித்தார்.

ஆனானப்பட்ட பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோரே தங்களது பிடித்த படங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு இத்தனை வருத்தப்பட்டதில்லை. தமிழ் சினிமாவை விட்டு விலகியதுமில்லை. நான் பார்த்த வரைக்கும் படம் நன்றாகவே இருந்தது. அத்தனை நடிகர்களை வைத்துக்கொண்டு கூலிப்படை ஆட்களை பற்றிய நிஜமான கதையை படமாக்க செல்வராகவனால் மட்டுமே முடியும். படம் மேலும் பெரிய ஹிட் ஆனால், அவர் தன் முடிவை மாற்றிக்கொள்வார் என்று நிணைக்கிறேன்.
(இந்திக்கு போனால் தானே தெரியும் நம்மவர்கள் அங்கே படும் அவதி என்னவென்று...)

சனி, ஜூன் 10, 2006

தமிழில் வலைபதிவது மிகவும் இனிமை. என் முதல் வலைபதிவை ஒரு கவிதையில் இருந்து தொடங்குகிறேன்.

நிலவு தந்த பதில்

அது ஒரு
இரவு நேர
இனிய பயணம்
பேருந்தின் ஜன்னலோரம்
பேச்சுக்கு துணையின்றி நான்.

கிராமத்து விளக்குகள்
முழித்திருக்க வில்லை -வானத்தில்
விழித்திருந்த நிலவே
விளக்கானது.

காற்றுக்கு ஏன் இவ்வளவு
வேகம்- என்
முகத்தை தகர்த்தெறிய
விர்ரென்று
வீசி அடித்தது.

வீசின காற்றின் ஊடே
வான் நோக்கி நிலவு
பார்த்திருந்தேன் -நிலவை
பார்த்ததும்- அதை
ஒன்று கேட்டு வைத்தேன்.

அன்று
என்னவளும் நானும்
பேசிய நேரத்தில் நீயும்
தூரத்தில் பார்த்திருந்தாய்
அல்லவா!
அந்த காட்சிகளை
திருப்பி தர முடியுமா?

நிலவு பதிலேதும் தரவில்லை - அமைதி
நிலவியதில் சற்றே
தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

தூக்கத்தில் ஒரு கனவு
கனவில் அன்று
என்னவளுடன் பேசிய
காட்சிகள் மறுபடியும்.
கனவு முடிந்து
நனவு வந்ததும்
நிணைத்துக் கொண்டேன்.
நிலவிடம் நான் கேட்ட கேள்விக்கு
நிலவு தந்த பதில் தான் கனவோ!