திங்கள், பிப்ரவரி 29, 2016

விஜய் டிவியின் இளையராஜா-1000



இளையராஜாவை ஆராதிக்க அப்போதெல்லாம் யாருக்கும் தோன்றியிருக்காது.  நான் சொல்வது 80களில், 90 களில்....  இசை ஞானியின் பாடல்கள் just like that, எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.   டீ கடைகளிலும், காசெட்டு விற்கும் கடைகளிலும், மக்களின் குடும்ப நிகழ்சிகளிலும் ராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  மக்களின் வாழ்வோடு கலந்து விட்ட இசை அது.  அன்றாடம் நாம் உண்ணும் உணவை பற்றியும் உடுத்தும் உடையை பற்றியும் பேசிக் கொண்டிருப்போமா?  அது போல தான் அவர் இசையும். இப்படி அவர் பாடல்களை கேட்டு வளர்ந்தே இப்போது வயதாகி விட்டது.  சினிமா படங்களில் ஒரு  பாடலில் ஹீரோ பணக்காரன் ஆவது போல, வேகமாக சென்று விட்டன நாட்கள். 

எதற்கு சொல்கிறேன் என்றால், இப்போது ராஜாவிற்கு பாராட்டு விழா என்றதும் அந்த உள்ளங்கள் எல்லோருக்கும் ஒன்று தோன்றி இருக்கும். இத்தனை வருடங்களாக அவருக்கு நாம் எவ்வளவு நன்றிகடன் பட்டிருக்கிறோம் என்று...  இசை கடவுளுக்கு பாராட்டு விழா என்றதும் திரண்டு வந்து விட்டார்கள்.  Y.M.C.A  நந்தனம் மைதானம் நிரம்பி வழிந்தது. இரவு 12.00 மணிக்கும் கடந்து சென்றுக் கொண்டிருந்த விழாவை கூட்டம் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தது.  

இசைஞானி ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கு பாராட்டு விழா (இப்போது மூன்று படங்களுக்கு இசை அமைத்து விட்டு அதே இசையை முப்பது படங்களுக்கு போடுகிறார்கள்).  நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாடலின் இசையை மட்டும் போடும் போது அந்த பெரிய மைதானத்தில், மாலை இருட்டும் வேளையில் எல்லோர் கண்களும் ஈரமாகி இருக்கும். 

முதல் இருபது நிமிடத்திற்கு அவர் பாடல்களின் முன்னே (prelude ) நடுவே (interlude) வரும் இசையை மட்டும் தொகுத்து போட்டார்கள்.   ஆஹா,  அதுவே எல்லோரையும் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.  இளையராஜா வந்ததும் தன இருக்கையில் போய் உட்கார வில்லை.  மக்களின் நடுவே மைதானத்தில் நடக்க ஆரம்பித்து விட்டார்.  கேட்கவா வேண்டும்.  மக்கள் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள்.  தரையில் நிற்க வில்லை.  இளைஞர்கள் முதல் பெரியவர்கள் முதல் இருக்கையின் மேலேயே எழுந்து நின்று அவரைப் பார்த்தார்கள்.  இசை ஞானி அத்தனை கூட்டத்தை பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரிய வில்லை.

சில டைரக்டர்களையும்  (பாலா, பால்கி, கெளதம் வாசுமேனன், மிஷ்கின், வாசு, பாக்யராஜ்), நடிகர்களையும் (ஜெயராம், பிரகாஷ்ராஜ்), நடிகைகளையும்  (ராதா, பூர்ணிமா, மீனா, கௌதமி), பாடகிகளையும் (ஜென்சி, சுசிலா, உமா ரமணன், சைலஜா, சித்ரா) மேடை மேல் அழைத்து ராஜாவை பற்றிப் பேச சொன்னார்கள்.  எல்லோரும் பேசிக்கொண்டே இருக்க ரசிகர்கள் பொறுமை இழந்தார்கள்.  பாட்ட போடுப்பா.  பாட்ட போடுப்பா என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.  அந்நேரம் கமலையும் பேச வருமாறு மேடைக்கு அழைத்தார்கள்.   அவர் இது பேச வேண்டிய நேரமில்லை, ராஜாவின் பாடல்களை கேட்க வேண்டிய நேரம் என்று பட்டென்று சொல்லி, எல்லோருக்கும் விடுதலை வாங்கி கொடுத்தார்.  பிறகு இளையராஜா அருகே போய் அமர்ந்து கொண்டார். இருவரும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

SPB, மனோ, சித்ரா நிறைய பாடல்களை பாடினார்கள்.  மக்கள் அதை தலையை ஆட்டியும், ஊஹூ என்று கத்தியும், கை தட்டி ஆரவாரம் செய்தது  அழகாக இருந்தது.  என் பக்கத்தில் காலேஜ் படிக்கிற வயதில் அழகான சின்ன பெண் ஒருவள் தனியாக Concert கேட்க வந்து விட்டாள்.   இளையராஜாவை பார்க்கும் போதெல்லாம், பாட்டு ஆரம்பிக்கும் போதெல்லாம், oh my God என்றும்,             ஊ ஹூ வென்று கத்தியும் ரகளை செய்துக் கொண்டிருந்தாள்.  11.30க்கு மேல் வீட்டுக்கு செல்ல அப்பாவிடம் அழைத்துக்கொண்டு போக செல்போனில் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.  

நிகழ்ச்சிக்கு 25,000, 10,000, 5000, 1000, 500 என்று டிக்கெட்டுகள் விலை மிக அதிகம் என்றாலும், நான் முன்பே சொன்ன மாதிரி, இளையராஜாவின் பாட்டை தினம் தினம் அனுபவிப்பதற்கு இந்த விலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல்  அமைந்திருந்தது கூட்டம்.  நிகழ்ச்சி விஜய் டிவி யில் வரும் போது தவற விடாதீர்கள்.


ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள்  இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியது தவறில்லையா?  பாப்பாவிடம் சாதிகள் இல்லையடி என்றால், சாதி என்றால் என்னப்பா என்று தான் கேட்கும். எந்த குழந்தைக்கு சாதி பற்றி தெரியும்? பள்ளிக்கூடம் முடித்து, கல்லூரி செல்லும் போது தான் பெரும்பாலும் பிள்ளைகள் சாதி என்றால் என்னவென்றும், சமுதாயத்தில் சாதிக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.  

அப்படியென்றால், சாதிகள் இல்லையடா தோழா என்று தானே பாரதி பாடியிருக்க வேண்டும்.   பிள்ளைகள் வளர்ந்த பின் எப்படியெல்லாம் சாதியை பற்றிக் கொள்கிறார்கள்.  அவர்கள் என்ன செய்வார்கள்?கல்லூரியில் சேரும் போதும், வேலை தேடும் போதும் சாதி அவர்களை என்னவெல்லாம் பாடாய் படுத்துகிறது.  காதலும் சும்மா விட்டு வைப்பதில்லை. பாரதிராஜா படத்தில் வரும் காதலும் சாதி மோதலும் நன்றாக நினைவு இருக்கிறது.  காதல் ஜோடி  ஓடி போவதும் அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் தீ பந்தம் ஏந்தி துரத்துவதும் சாதியை பற்றி பயத்தை கிளப்பி இருக்கிறது.  அந்த கால படங்களில் தான் இப்படி காட்டினார்கள் என்றால் இப்போதும் காதல் ஜோடிகளை (கலப்பு) துரத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று ஏட்டினில் எழுதி விட்டு சாதி தீயை கொழுந்து விட்டு வளர்த்துக்கொண்டு இருக்கிறோம்.  கல்யாணத்திற்கு சாதி வேண்டும்.  வேலைக்கு சாதி வேண்டும்.  ஓட்டுக்கும் சாதி வேண்டும். அதாவது அரசாட்சிக்கும் சாதி வேண்டும்.  பின் சாதி எப்படி ஒழியும்.  கடந்த அறுபது வருடங்களில் அழிக்க முடியாத சாதி எப்போது அழியும்?  நம்பிக்கை இருக்கிறதா? உயர்ந்த சாதி மாணவர்களுக்கு அதிக மார்குகள் எடுக்க வேண்டிய கட்டாயம்.  தாழ்ந்த சாதி மாணவர்களுக்கு தன் சாதியை தன் வட்டாரத்தில் கூட தெரிய படுத்திக்க  முடியாத ஒரு கஷ்டம்.

ஆனால் சாதி ஒழிந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  எப்போது என்றால், இந்தியாவின் சனத்தொகை குறைந்து நம் அரசாங்கம் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் சக்தி கொள்ளும் போது... குறைந்த மக்கள் தொகை, நிறைய மக்கள் சேவை என்று வரும் போது, வேலை வாய்ப்பில்  சாதி சலுகைகளை எடுத்து விடலாம்.  இப்போது இருக்கும் மக்கள் தொகைக்கு, மக்களுக்கு தேவையான உணவு கொடுப்பதே அரசாங்கத்துக்கு பெரும் பளுவாக இருக்கிறது.  இதில் சாலைகள் போடுவது, குடிநீர், மின்சாரம் கொடுப்பது எல்லாம் கோடி கணக்கான மக்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. இதில் அரசியல்வாதிகள் ஊழலுக்கு வேறு சில கோடிகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.  மக்கள் தொகை சரியும் போது, ஏழை எளிய மக்களை நன்றாக கவனிக்க முடியும். நல்ல கல்வியை அளிக்க முடியும். சாதியை வைத்து வேலை சலுகைகளை கொடுப்பதை தூக்கிவிட முடியும்.

இந்திய சனத்தொகை 2050 இல் இருந்து  குறையுமாம்.  அதுவரை சாதி சார்ந்த பிரச்சினைகள் இருந்துக்கொண்டு தான் இருக்கும். வேண்டுமானால் அரசாங்கம் சனத்தொகையை குறைக்க விரைவு நடவடிக்கை எடுத்தால் சாதியின் தாக்கத்தை குறைக்கலாம்.  இது என்னோட தனிப்பட்ட கருத்து. இப்பொது நாட்டில் சாதி சார்ந்த போராட்டங்களும், முக நூல் மற்றும், whatsapp போன்றவற்றிலும் கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதால் இந்த பதிவை எழுத தோன்றியது. மக்கள் சனதொகைக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றலாம்.  அதில் அரசாங்கத்தை மையப் படுத்தி யோசித்து பாருங்களேன்.