திங்கள், மார்ச் 28, 2016

மூடர்கூடமாகும் பள்ளிக்கூடங்கள்

நாம் திறமையாய் வேலை செய்ய வேண்டுமா?  நன்றாக சம்பாதிக்க வேண்டுமா?  நம்மை எல்லோரும் புகழ வேண்டுமா?  அதற்கு கடின உழைப்பு வேண்டும் என்று உங்களுக்கு தெரியும்.  ஆனால் அது வெறும் 50% சதவீதம் தான்.  மீதி 50% உங்களுக்கு நீங்கள் செய்யும் தொழிலில் இயற்கையான திறமை இருக்க வேண்டும்.  உங்களுக்கு இயற்கையான திறமையும், கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள்.   ஆனால் நம் சமுதாயத்தில் பார்க்கும் மனிதர்களிடம் திறமை வேறொன்று இருக்கும், செய்யும் தொழில் வேறொன்று இருக்கும்.  வெகு சிலரே இதை உடைத்து இயற்கையாக தமக்கு வரும் திறமையையே தொழிலாக அமைத்து கொள்கிறார்கள்.  உதாரணம்: டெண்டுல்கர், இளையராஜா, நல்லி குப்புசாமி  போன்றோர்கள்.   (இவர்கள் சட்டென்று ஞாபகம் வந்தவர்கள்). இதற்கு முக்கிய காரணம் நம் கல்வி முறை.

ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்.  ஆனால் நம் நாட்டில் ஏட்டுசுரைகாய் தான் பல ஆண்டுகளாய் பெரும்பாலானோர் வாழ்க்கையை தீர்மானித்துக் .கொண்டிருக்கிறது.  பள்ளி படிப்பு தான் பலர் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.  இதை நன்றாக தெரிந்துக் கொண்டவர்கள் பள்ளிக்கூடத்தை வியாபாரமாக்கிக் கொண்டார்கள்.  பெற்றோர்களும் இந்த மாய வலையில் வீழ்ந்து படிப்பு ஒன்று தான் தங்கள் பிள்ளைகளை காக்கும் கடவுள் என்று ஏமாந்து போகிறார்கள்.

அந்த கால அப்பாக்களுக்கு தங்கள் பிள்ளைகளின் திறமைகளை கண்டுபிடிக்க தெரிந்திருந்தாலும் அதை மேலும் வளர்க்க வசதி இருந்திருக்க வில்லை. அதனால், நன்றாக படம் வரையக்கூடிய தன மகனை ஒரு பெரிய ஓவிய பள்ளியிலோ அல்லது பிரபல ஓவியரிடமோ பயிற்சி பெற அனுப்ப நினைத்ததில்லை.  அவனை படிப்பு வரவில்லை என்றாலும் ஏதாவது சுமாராக படிக்க வைத்து சராசரி வேலையில் சேர்த்து சராசரி மனிதனாக வாழ வைத்து விடுகிறார்கள்.  இப்போதும் அலுவலகங்களில் பார்க்கலாம். எவ்வளவோ திறமை மனிதர்களிடம் தூங்கி கொண்டு இருப்பதை.  அவர்களது அப்பாக்கள் அந்த  திறமையை வளர்க்கவில்லை. அவர்களையும் குறை கூற முடியாது.  அப்போது அவர்களது குடும்ப கஷ்டம் அப்படி.

எனக்கு, இத்தனை வருடம் வேலை செய்து குப்பை கொட்டியதில் ஒன்று புரிந்தது.  அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் நாம் செய்யும் வேலை நாம் பள்ளிக்கூடத்தில் கற்றதில் வெகு சில பங்கே ஆகும். சொல்லப் போனால், நமது பள்ளிக்கூடத்து படிப்பு என்பது நாம் உலக விஷயங்களை தெரிந்துக் கொள்ள உதவுவது. இந்த படிப்பு எல்லோருக்கும் வேண்டும் தான். ஆனால் இதுவே ஒருவர் செய்யும் வேலைக்கு ஆதாரமாக இருக்க கூடாது.   ஆனால் என்ன நடக்கிறது இங்கே.  ஒருவர் தலையெழுத்தையே பள்ளிகூட மதிப்பெண்கள் தான் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும்/ சிறுவர்க்கும் ஒரு திறமை இருக்கும்.  அது இயற்கையாக இறைவன் அளித்தது.   நம் நாட்டில் அந்த திறமை படிப்பு என்பதற்கு முன்பு காணாமல் போய் பள்ளிகூடதிலேயே மடிந்து போய் விடுகிறது.  இசையமைப்பது, நடிப்பது, கதை, கவிதை எழுதுவது, நன்றாக ஒரு விளையாட்டை விளையாடுவது, பாடுவது, நடனம் ஆடுவது, மேடை பேச்சு, நன்றாக பேசுவது, கணக்கு போடுவது, வியாபாரம் செய்வது, விமர்சனம் செய்யும் திறமை, வேளாண்மை, சமையல், அறிவியலில் நாட்டம், இயந்திரங்களில் நாட்டம் இப்படி எவ்வளவோ இருக்கு. ஆனால் இது எல்லாத்தையும் விட பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தான் வாழ்க்கையை  தீர்மானிக்கும் என்றால் எப்படி?

நான் சொன்ன இயற்கையான திறமை கடவுள் அளித்தது.  அதையே வேலையாக, வாழ்க்கையாக, வேட்கையாக தேர்ந்தெடுத்து கடின உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் வெற்றி என்றால், இந்த சமுதாயத்திற்கு உதவியாக இருக்கலாம்.  ஊர் மெச்சும் படி இருக்கலாம்.  உதாரணம் சொன்னால், நம்ம இளையராஜா படிக்கவில்லை.  ஆனால் அவரது இசை நமக்கு எவ்வளவு தேவை படுகிறது.  ரஜினி, கமல் படிக்க வில்லை தான்.  ஆனால் அவர்கள் படங்கள் தான் நிறைய பேருக்கு பொழுது போக்கும் வாழ்வில் ஒரு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. எஸ்.பி.பி, ஜானகி, வைரமுத்து, கண்ணதாசன், வாலி, கே. பாலச்சந்தர், பத்மா சுப்பிரமணியம், இவர்கள் எல்லாம் படிப்பை வைத்தா முன்னுக்கு வந்தார்கள்.  நாடக உலகத்தில் முன்னிற்கும் எஸ்.வி. சேகர், crazy மோகன் இவர்கள் படித்தவர்கள் தான். ஆனால் அவர்கள் படித்த படிப்பை நம்பி இவர்கள் வேலை இல்லை.  நல்லி குப்புசாமியும், GRT நகை அதிபரும் படிப்பை நம்பியா வேலை செய்கிறார்கள்?  ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவ படிப்பு படிப்பவர்களுக்கு அந்தந்த துறையில் திறமை உள்ளதென்று அர்த்தம்.  நம் அலுவலகத்தில் உயரிய பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு நிர்வாகத்திறமை இயற்கையாக உள்ளதென்று அர்த்தம்.

அறிவியலில் நாட்டமும், அதை புரிந்துகொள்ளும் திறமையும் இருந்தால்  பெரிய விஞ்ஞானியாக ஆகலாம்.  அது சில சிறுவர்க்கு இருக்கும். சில சிறுவர்க்கு இருக்காது.  அந்த திறமை இல்லாத சிறுவரை படிக்க சொல்லி கஷ்டபடுத்தினால் எப்படி? இப்போதுள்ள பள்ளிகள் என்ன செய்கிறார்கள். தினமும் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வர வேண்டும். சில சமயம் பெற்றோரும் செய்து கொடுக்க வேண்டும்.  பள்ளிக் கூடம் பாதி நாள் விடுமுறை.  மீதமுள்ள நாட்களில் அவசர கதியாக பாடம் நடத்த வேண்டியது. மீதம் படிப்பை Tuition வகுப்பில் தொடர வேண்டியது. இல்லை, பெற்றோர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது.  நாமக்கல் போன்ற இடங்களில் பிள்ளைகளை நல்ல மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாய் மாற்றும்  பள்ளிகூடங்கள் வந்துவிட்டன. ஆனால் இப்படி வாங்கும் மதிப்பெண்கள் பயனுள்ளவையா?  பின்னால் இந்த மாணவர்கள் ஒரு வேலையில் சேர்ந்தாலும் , அந்த வேலை பிடித்தமானதாக இருக்காது. முன்னேற்றமும், சந்தோஷமும் கொடுக்காது.

எனவே, பிள்ளைகள் பள்ளிகூடத்தில் படிப்பதை வாழ்வின் அடிப்படை என்று போதியுங்கள்.  அதற்கு தேர்வு என்பது கூட அவசியமில்லை.   எந்த துறையில் பிள்ளைகளுக்கு நாட்டம் உள்ளதோ, அந்த துறையில் ஒரு பெரிய பள்ளியிலோ, ஆசிரியர்/ Coach போன்றோரிடம் சேர்த்து விட்டீர்களேயானால் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு நிச்சயம் வருவார்கள். தொழில்முறை கல்வி மிகவும் பயனுள்ளது.  கண்ட கண்ட பாடங்களையெல்லாம் கல்லூரி படிப்பில் சேர்த்துக்கொள்வதை விட்டு விட்டு, அரசாங்கம் தொழில்முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம், சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் பிள்ளைகள் பை ஒன்றை மாட்டிக்கொண்டு ஏதாவது ஒரு வகுப்பிற்கு (பள்ளி படிப்பை தவிர) செல்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.  செஸ், கிரிக்கெட், நடனம், இசை இப்படி ஆர்வம் காட்டும் மாணவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கூடிய விரைவில் வளமான இந்தியா உருவாக இது அடிப்படையாக இருக்கும் என்று  நான் நம்புகிறேன்.


ஞாயிறு, மார்ச் 13, 2016

வை ராஜா வை - பணத்தை வை

உங்களால் எவ்வளவு செலவு  செய்ய முடியும்? நீ எவ்வளவு பணம் கொடுப்ப!!இப்படி வேட்பாளர் தேர்வுக்கு நேர்காணல் செய்து தேர்தல் செலவுக்கு பணம் வாங்குகிறார்கள்.  கொடுப்பவர்களும் லட்சங்களிலும், கோடிகளிலும் கொட்டிக் கொடுக்கிறார்கள். நமக்கெல்லாம் ஒரு கோடி என்றாலே வாழ்க்கையின் ஒரு கோடியில் இருக்கிறது அந்த தொகை.  எப்படி கட்டுகிறார்கள் அவ்வளவு பெரிய தொகை? எப்படியோ கட்டுகிறார்கள்.   டாக்டர் சீட்டுக்கும், இன்னும் பிற சேர்க்கைக்கும் லட்ச லட்சமாக கட்ட வில்லையா?


அரசியல் தொழில் செய்ய தேவைப்படும் முதலீடு இது.  இல்லை இல்லை. அரசியல் சூதாட்டதில் வைக்கப்படும் பணம் இது.  பணத்தை போட்டு பணத்தை எடுப்பது.   ஒரு முறை ரஜினிகாந்த் தனது உடல்நிலை மோசமாகி பிறகு  தேறி வந்தவுடன் தன ரசிகர்களை சந்தித்தார்.  எல்லா ரசிகர்களுக்கும் மிகவும் ஆர்வம்.  தலைவர் அரசியலுக்கு வந்து விட மாட்டாரா என்று.   ஒரு ரசிகர் மன்ற தலைவர் கேட்டார்.  தலைவா, நீங்க அரசியலுக்கு வந்தா எங்களுக்கு தேர்தல் செலவு செய்ய நிதி கொடுப்பீங்களா என்று.  அதற்கு ரஜினியோ அரசியல் வேறு பணம்  வேறு.  அரசியலில் பணத்தை கலக்க கூடாது, அரசியல் என்றால் மக்கள் தொண்டு  என்று சொல்லிவிட்டார்.  பணம் கலக்காமல் அரசியலா? அந்த ரசிகருக்கு தலை சுற்றியிருக்கும்.  இப்படி தான் விஜய்காந்திற்கும், ஜாதி சார்ந்த பல கட்சி தலைவர்களுக்கும் நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள். பணத்தை குறி வைத்து காத்துக்கொண்டிருக்கும் இந்த தொண்டர்கள் தான் நாளைய அரசியல் தலைவர்கள்.  நாடு நல்லா விளங்கும்.

இப்படி ஒரு கூட்டம் சூதாட்டம் விளையாடும் போது நாம் அவர்களிடம் போய் மின்சாரம் வேண்டும், ரோடு வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டால் எப்படிங்க? விளையாட்டை பார்த்துட்டு போய் கிட்டே இருங்க.

வை ராஜா வை. பணத்தை எடு ராஜா எடு!!!






ஞாயிறு, மார்ச் 06, 2016

மெட்ராஸ் ஆட்டோகாரன்


Image result for chennai auto

சென்னையில் பெரிய மால்கள் வந்து விட்டன.  மெட்ரோ ரயில் ஓடுகிறது. பெரிய பாலங்கள் கட்டி இருக்கிறார்கள்.  இவற்றுக்கு மத்தியில் மூணு சக்கர தேரு... அதாங்க.. ஆட்டோ!!, சென்னையின் பள்ள மேடான சாலைகளில், காதை  Puncture ஆக்கும் சத்தத்தோடு சதா ஓடிக் கொண்டிருக்கிறது. அணைத்து விஷயங்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டு அடுத்த நிலையை அடையும் போது, இந்த மெட்ராஸ் ஆட்டோவும், ஆட்டோக்காரர்களும் முப்பது வருடங்களாக அப்படியே இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆட்டோ ஓட்டுகிறார்கள்.  என்றாலும், மெட்ராஸ் ஆட்டோக்காரன் என்றால்  அது தனி.   தமிழ்நாட்டிலேயே கூட இவர்கள் வித்தியாசமானவர்கள்.   முக்கால்வாசி ஆட்டோக்கள் கருப்பு புகையை கக்கிக் கொண்டிருக்கும்.  அந்த புகையில் கொசு மருந்தும் கலந்திருந்தால் சென்னையில் கொசு தொல்லையாவது தீரும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை.  அந்த புகையை சுவாசிக்கும் இரு சக்கர வாகனக்காரர்களுக்கு சளித் தொல்லை தான் வருகிறது.

மெட்ராஸ் ஆட்டோகாரர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருவது இவை:

- காக்கி சட்டை அழுக்கு ரொம்ப தாங்கும் என்பதால், அதை அழுக்காகவே
  போட்டுக் கொள்வது
- தலையை சீவாமல், வாயில் எப்போதும் எதையாவது மென்று துப்பிக்
கொண்டே இருப்பது.
-  எந்த ஊருக்கு போகணும்னு சொன்னாலும், முதல் முறை இரு மடங்கு
   பணம் கேட்பார்கள்.
-  பாஷா படத்திற்கு பிறகு ஆட்டோகாரன் பாட்டு இவர்களது தேசிய கீதம்.
-  சந்து பொந்து என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  சைக்கிள் கேப்பில் 
  புகுந்து போய்விடுவான் என்பார்களே.  இவர்களது ஆட்டோ புகுந்து போய் 
  விடும்.  
- சென்னையில் கார் வைத்து இருப்பவர்கள் எல்லாம் அவர்களது காரில் 
  ஒன்றிரண்டு விழுப்புண்ணாவது (சிராய்ப்புகள்) வைத்திருப்பார்கள்.  அது 
  எல்லாமே ஆட்டோகாரர்கள் போட்டது தான்.
- பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுப்பவர்கள் இவர்கள் தான்.  ஆட்டோவில் வயதான பெண்மணிகள் இருந்தாலும் கூட சாலையில் போவோரை கெட்ட வார்த்தைகள் போட்டு வசை பாடுவார்கள். 
- நாளில் எந்த நேரத்தில் ஆட்டோவில் ஏறினாலும் சில்லறை இல்லை என்பார்கள்.  நீ தாம்பா முதல் போனி என்பார்கள்.  
- ஆட்டோவை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு இருப்பார்கள்.  நான் எல்லாம் ஆபீசில் வேலை செய்ய வேண்டிய ஆள் சார். என் போதாத காலம் ஆட்டோ ஓட்ட வந்துட்டேன் என்பார்கள்.

இங்கே ஆட்டோ ஓட்டுவதை ஒரு நல்ல தொழிலாக கருதி ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.  சென்னையில் எந்த ஒரு ஆட்டோக்காரனையாவது கேட்டு பாருங்கள்.  நான் சும்மா டெம்பரவரியா ஆட்டோ ஓட்டுறேன் சார்.  அடுத்த மாதம் துபாய போய் விடுவேன் என்றோ, அல்லது பெரிய இடத்தில் கார் டிரைவராக வேலைக்கு போவதாகவும், இல்லை வேறு வேலைக்கு போக போவதாகவும் சொல்வார்கள்.   சிலர் ஆட்டோ ஒட்டி கொண்டே படித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வார்கள். அப்படியே படித்து கலெக்டர் ஆகப் போவதாக பில்ட் அப் வேறு!!  ஆட்டோவை விட்டு விட்டு எப்போது டாக்ஸி க்கு மாறுவார்கள் என்று எதிர்பார்த்தால், ஆட்டோவின் இன்னுமொரு மோசமான அவதாரமான ஷேர் ஆட்டோவை உருவாக்கியிருக்கிறார்கள்.  அரசாங்கம் இவர்களுக்கு பயணத்திற்கான கட்டணத்தை முறை படுத்துவதை விட்டு விட்டு, இவர்களை டாக்ஸி ஓட்ட வைத்தார்களானால் என் ஆதரவு அவர்களுக்கு தான்.

இவை அனைத்தையும் மீறி நல்ல உடை உடுத்தி,  எங்கேயும் துப்பாமல், சரியான கட்டணம் வாங்கும் நல்ல ஆட்டோகாரர்களும் உண்டு.  ஆனால், அத்தி பூத்தாற் போல் நமக்கு நல்ல நேரம் என்றால் அப்படியொரு ஆட்டோ சவாரி வாய்ப்பதுண்டு!!