புதன், அக்டோபர் 05, 2016

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன!!!

சில மாதங்களாக இந்தியாவிலும், தமிழ் நாட்டிலேயும் நடக்கும் விஷயங்களை கவனித்து வந்ததில் மக்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளின் மேல் கொஞ்சமும் அதிகாரமோ, கட்டுப்பாடோ கிடையாது என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் இது தான் இத்தனை வருடங்களாக இந்தியாவில் நடக்கிறது என்றாலும், இப்போது தான் சில விஷயங்கள் தெளிவாக புரிகிறது.                                                                                                                                                       தலைப்பில் சொன்னது போல், எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.  ஆனால், அதில், நாட்டு பிரச்சினையை பற்றியும், மக்களின் பிரச்சினையை பற்றியும் எழுதுவதால் என்ன பயன் வந்துவிட போகிறது என்ற அலுப்பு வந்து விடுகிறது.  சென்னை நகரத்தில் புதிது புதிதாக குடியிருப்பு கட்டிடங்கள் எழுப்பி ஏற்கனவே மக்கள் கூட்டத்தால் மூச்சு திணறும் நகரத்தை மேலும் திணறடிக்கிறார்கள் என்று ஒரு வருடம் முன்பு எழுதினேன்.  அதற்கு அப்புறமும் எத்தனையோ குடியிருப்பு ப்ராஜெக்ட் சென்னைக்குள் வந்து விட்டது.  இங்கு பிரச்னையை பற்றிய வருத்தமும் கோபமும் எதனை பேரிடம் இருக்கும் என்று தெரியவில்லை.   காலையில் சாலையில் செல்லும் போது ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும், மழை பெய்தால் ஏற்படும் வெள்ளமும்  சென்னையை விட்டு நகர வாழ்க்கை புலம் பெயர வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்த்துகிறது.   ஆனால், அரசாங்கத்தால் இயக்க படும் C M D A போன்ற அலுவலகங்கள் மீது நமக்கு இருக்கும் அதிகாரம் என்ன?  குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு எதிராக போராடிய ஒரு சமூக ஆர்வலருக்கு நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும்.                                                                                                                                                                                                                                  ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யும் முதலமைச்சர் தமிழகத்தின் அணைத்து தொகுதிகளுக்கும் ஒரு முறை சென்று பார்க்கிறாரா?  குறைந்த பட்சம் சென்னையிலாவது அணைத்து பகுதிகளும்  எப்படி இருக்கிறது என்று சென்று பார்க்கிறார்களா?  வெளிநாடு பல சென்றிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏன் நம் நாட்டு அடிப்படை வசதிகளை தரம் படுத்த தோணுவதில்லை.  சாலை வசதி, சாக்கடை வடிகால், மின்சாரம், பொது மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் போன்ற விஷயங்களை பற்றி எந்த முதலமைச்சராவது கவனம் கொண்டிருக்கிறார்களா?   ஆனால் மக்களுக்கு TASMAC வசதி, இலவச செல்போன், லேப்டாப், உணவு இதிலெல்லாம் அதிகம் கவனம் கொண்டிருக்கிறார்கள்.  இது போன்ற முதலமைச்சர்களுக்கும், பிரதம மந்திரிகளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிட்டால் மக்கள் காட்டும் அனுதாபம் இருக்கிறதே...  மக்களின் இரக்க உணர்ச்சியை கண்டால் புல்லரிக்கிறது.                                                                                                                                                                                                                       இப்போது இருக்கும் காவிரி பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை எல்லாம் அரசியல்வாதிகளால் ஊடகங்கள் உதவியோடும், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் உதவியோடும் திட்டமிட்டு நன்றாக நடத்த படுகிறது.  பெரும்பாலான மக்களுக்கு இதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுக்கும், நேரம் கடத்தவும் பயன் படுகிறது.  சில முட்டாள்கள்  போராட்டம், எதிர்ப்பு என்ற பெயரில் அடி வாங்கியும், உயிரையும் விடுகிறார்கள்.                                                                                                                                                                                                                                                                     2ஜி, க்ரானைட், மணல் தாது கொள்ளைகள், BCCI, ஹரியானா நில விவகாரம், நேஷனல் ஹெரால்ட், Bofors  எல்லாம் பேசி பேசி அலுத்து போன விஷயங்கள்.  இவை எல்லாம் நிலைமைக்கேற்ப அரசியல் வாதிகளால் முன்பே சொன்னது போல் நீதிமன்றங்கள், மற்றும் ஊடகங்கள் உதவியோடும் நடத்த படும் நாடகங்கள்.  மக்கள் பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.  இதில் எல்லாம் தலையிட முடியாது.  தலையிட்டால் தலை இருக்காது.                                                                                                                                                                                                       சினிமா, கதை, கவிதை, இலக்கியம், குடும்ப பிரச்சனைகள், சமையல், விளையாட்டு, அறிவியல், சுற்றுலா, மருத்துவம், பண்டிகை, நடனம், பாட்டு, குழந்தை வளர்ப்பு  என்று ஆஹா ...எழுதுவதற்கு எத்தனை விஷயங்கள்  உள்ளன.  இவை மட்டுமே நம் மக்களை உயிர்ப்போடு வைத்திருப்பவை.  சுஜாதா போன்ற புத்திசாலி எழுத்தாளர்கள் இந்த தலைப்பில் தான் எழுதி வந்தார்கள். ஏனென்றால் நம் நாடு மக்களால் நடத்த படும் நாடல்ல !!!


ஞாயிறு, ஜூலை 24, 2016

கபாலி விமர்சனம் - ரஜினியை பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள்!!!!

கபாலிக்கு டிக்கெட் கிடைக்காதலால் சிவனே.. என்று உட்கார்ந்திருந்த எனக்கு எந்த நடிகருக்கும் ரசிகனாக இல்லாத சில நண்பர்கள்  படத்தை பார்த்துவிட்டு செம படம் என்று உறுதி செய்ததும், என் மனம் சும்மா இருக்குமா... என் மகளை கூட்டிக் கொண்டு லோக்கல் தியேட்டருக்கு படம் பார்க்க கிளம்பி விட்டேன்.

Image result for kabali movie

இதற்கு முன், மூன்று நாளாய் படத்தின் விமர்சனங்களை  இணையத்தில் படித்ததில் படம் மொக்கை, Drag..அப்படி இப்படினு படிச்சதும் ஒரே ஆச்சர்யமாக இருந்தது.  ஏனென்றால், எப்படியும் லிங்காவை விட இந்த படம் நன்றாக இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்பியதும், சில விமர்சனங்கள்  லிங்காவே மேல் என்று எழுதியிருந்ததும் தான்.  பின் தான் இதெல்லாம் சில வட இந்திய ஊடகங்களும், நம் வழக்கமான ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் வேலை என்று தெரிந்தது.

இது வரை ரஜினி படம் மசாலா type, லாஜிக் இருக்காது, கதை இருக்காது, நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்காதென்று சொன்னவர்கள் இப்போது கபாலியில் இது எல்லாம் இருந்தவுடன், படம் ரஜினி படம் மாதிரி இல்லை, ஸ்டைல் இல்லை, விறுவிறுப்பு இல்லை என்று கதை விடுவது ரொம்ப அசிங்கம்.  உண்மையில் இந்த படம் அசத்தல் படம்.  ரஜினியை வெறுப்பவர்கள் தவிர மற்றவர்க்கு  கண்டிப்பாக பிடிக்கும்.  தியேட்டரில் கூட மக்கள் என்னப்பா படம் நல்லா தானே இருக்கு, இதை போய் நல்லாயில்லைனு சில பேர் சொல்கிறார்களே என்று கேட்க முடிந்தது.

ரஜினியின் நடிப்பை பற்றி தனியாக சொல்ல நான் விரும்பவில்லை.  முள்ளும் மலரும், அவள் அப்படி தான் , ஜானி போன்ற படங்களில் முழு படமும், கதை சார்ந்த ஆழமான நடிப்பு திறனை வெளிப்படுத்திருந்தாலும், பின் அவர் ஸ்டைல், காமெடி என்று தன் படங்களை மாற்றிக்கொண்டார்.  ஆனாலும், அண்ணாமலை, பாட்சா, தளபதி போன்ற படங்களில் சில இடங்களில் அந்த ஆழமான நடிப்பு வெளிப்பட்டிருந்தது.  இதுவே, எனக்கு ஏதாவது ஒரு படம் ரஜினியின் ஆரம்ப படங்களை மாதிரி அழுத்தமான நடிப்பு, கதையையொட்டி வராதா என்று ஏக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.  அப்படியொரு படம் தான் கபாலி.  நடிப்பென்றால் என்னவென்று இந்த படத்தில் ரஜினி Class எடுத்திருக்கிறார்.

மூன்றாவது படமே ஆனாலும் ரஞ்சித்திடம் பெரிய டைரக்டருக்கான தகுதிகள் தெரிகிறது.  படத்தை முடிந்த வரை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களும் கதையையும், அது நடக்கும் களத்தையும் ஒட்டியேயிருந்தது ரஞ்சித்தின் நல்ல Direction.  எனக்கு இந்த டைரக்டரை பிடித்திருக்கிறது.

ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக வரும் சாய் தன்ஷிகா,  கூடவே வரும் ஜான் விஜய், படத்தின் வில்லன் ஆகியோரது நடிப்பு சூப்பர்.  படத்தில் எல்லோருடையும் நடிப்பும் நன்றாக தான் இருக்கிறது.  சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலமும், நிறைய இடங்களில் படத்திற்கு ஏற்ற கம்பீரத்தை கொடுத்திருந்தது. மலேசியாவில் நடக்கும் கதை என்பதால் அதுவே வழக்கமான தமிழ் படங்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது.

சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அதுவும் நன்றாக தான் இருக்கிறது. படத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது கொஞ்சம் அதிகம். Gangster படம் என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை போல... ஊடங்களில் வரும் சில செய்திகளை வைத்து படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்யாதீர்கள்.  படம் சூப்பர்.  இன்னும் சில நாட்களில் படம்  Block Buster என்றே செய்தி வரும் என்று நம்புகிறேன்.



திங்கள், ஜூலை 18, 2016

கபாலி படத்தை விளம்பரங்கள் படுத்தும் பாடு!!

எங்கும் கபாலி எதிலும் கபாலி என்று போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்களில், கபாலியை வைத்துக் கொண்டு இந்த விளம்பரங்கள் படுத்தும் பாடு இருக்கிறதே....சகட்டு மேனிக்கு மக்களை கேளுடா... வாங்குடா... வாடா... போடா.... என்று "டா" போட்டு திட்டாத குறை தான். நெருப்புடா... நெருங்குடா.. கபாலிடா.... வார்த்தைகளுக்கு rhyming ஆக இருக்கணுமாம்.

இதே மாதிரி தான் பாபா படம் ரிலீஸ் ஆன போது ஏகப்பட்ட விளம்பரம் செய்தனர்.  ரஜினியின் குடும்பத்திலேயே ரஜினி 25 என்று விழா கொண்டாடினர்.  ரஜினி பற்றிய பாடல்களை அவர் மனைவி பாடி வெளியிட்டார்.  எங்கும் ரஜினி மயமாக இருந்த அந்த சமயத்தில் வந்த பாபா படம் படு பிளாப்.  இப்போது, கபாலி படத்தின் இயக்குனரே பயமா இருக்குப்பா, கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா என்று பயப்படும் அளவுக்கு விளம்பரம் அமர்க்களம் படுகிறது.

ரஜினி பற்றி ஏதாவது பெரிய விஷயங்கள் வரும் போதெல்லாம் அவரை பிடிக்காதவர்களுக்கு வயிறு பயங்கரமாக எரியும்.  பாலு விக்கிற விலையில அவர் ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பாலை ஊத்துறாங்கய்யா... காச கரியா எரிக்கிறாங்க என்று இவர்கள் எரிந்து போவார்கள்.   ஒன்றோ இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ரஜினி படத்துக்கு ஒரு நாள் அவரது ஒரு ரசிகன் தன் வருமானத்தில் 500 ரூபாய் செலவு செய்து விட்டு போகட்டுமே. அவன் வாழ்க்கையில் என்ன குறைந்து விட போகிறது.  முதல் show போவது, ரஜினி பட சட்டையை அணிந்து கொள்வது, கடல் கடந்து போய் படம் பார்ப்பது எல்லாம் பண்டிகையை ஒத்த ஒரு ஆனந்தம்.  ஆனால் இதெல்லாம் ரஜினியை பிடிக்காதர்வர்களுக்கு மண்டை குடையும்.  ரத்த நாளங்கள் எல்லாம் சூடாகும்.  ரஜினி என்னும் நடிகனுக்காக செலவு செஞ்சு அழிஞ்சு போகும் கிறுக்கு ரசிகனுங்க என்று ஒப்பாரி வைப்பார்கள்.  ரசிகர்கள் இப்படி வருடத்திற்கு ஒரு ரஜினி படம் பார்ப்பதால் அவர்கள் வேலை கேட்டு போய் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்களா என்ன?  

Image result for kabali muthootImage result for kabali airtel

இப்போதோ விமானத்தில் ரஜினி படம்.  அப்படியானால் ரஜினி Haters க்கு எப்படி இருக்கும்?  அப்துல் கலாம் படத்தை பஸ்ஸில் கூட வைக்கலப்பா... ரஜினி படத்தை பிளேன்ல போட்டாங்க.. என்று ஒரே அழுகை...
முத்தூட் பைனான்ஸ், Big FM, ஏர்டெல், U டாக்ஸி, Cadburys என்னும் எத்தனையோ நிறுவனங்கள், T.V சானல்களில் போட்டிகள் என்று ஏகப்பட்ட விளம்பரங்கள்.  ரஜினி படத்திற்கு விளம்பரம் தேவை இல்லை தான்.   ஆனால் இவர்களின் வியாபாரத்திற்கு விளம்பரம் செய்ய ரஜினி தேவையாய் இருக்கிறார்.

Image result for kabali air asia

எங்கும் எதிலும் கபாலியை பற்றிய செய்திகளை கேட்கும் போது சலிப்பு வராமல் இல்லை.   டேய்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. படம் ஊத்திக்க போது என்று ரஜினியை பிடிக்காதவர்கள் வயிறு எரிந்தாலும்.... ........ 
இதையெல்லாம் மீறி படம் வெற்றி பெறட்டுமே... உண்மையிலேயே தீபாவளி பண்டிகை போன்று மக்களிடையே என்ன ஒரு மகிழ்ச்சி... பேச்சு...எதிர்பார்ப்பு... 
படத்தின் ரிலீஸ்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன். 

வெள்ளி, ஜூலை 08, 2016

பிஞ்சில் முற்றிவிடும் குழந்தைகள்!!

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொலை சென்னைவாசிகள் அனைவரது தூக்கத்தையும் சில நாள் கலைத்திருக்கும். பெண்ணை பெற்றவர்கள் எல்லோரும் ஒரு வித திகிலில் கண்டிப்பாக இருந்திருப்பார்கள்.  இது சம்பந்தமாக வந்த செய்திகளையெல்லாம் தொகுப்பாக தர எனக்கு விருப்பமில்லை (ஏற்கனவே நிறைய படித்திருப்பீர்கள்). ஆனால் இன்றைய தலைமுறையை (பெற்றோர்களும், பிள்ளைகளையும்) பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று தோன்றியது.


இப்போதெல்லாம் பத்து வயது பிள்ளைகள் இருபது வயது பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள்.  இருபது வயது பிள்ளைகள் பெரியவர்களுக்கே அறிவுரை சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.  இப்படி பிள்ளைகள் பிஞ்சிலேயே முற்றி விடுவதில் பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோஷம்.
சார், என் பையன் நாலாம் கிளாஸ் தான் படிக்கிறான்.  ஆனா, செல்போன் operation எல்லாம் அத்துப்படி சார்.  எனக்கே ஏதாவது டவுட்னா அவனை தான் கேட்கிறேன் என்பார்.   தனக்கு தான் மூளை இல்லை.  ஆனால்,  தன் பையன் சின்ன வயதிலேயே ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்ற நினைப்பு.   இதே மாதிரி தான் - என் பையன் இப்போதே கார் ஓட்டுகிறான், கடையை கவனிச்சுக்கிறான், அவனுக்கு தெரியாததே இல்லை, அப்படி இப்படினு பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.

சின்ன பிள்ளைகள் ஏழாம் வகுப்பிலேயே Girl friends, Boy friends என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். கூட படிக்கும் ஒன்றிரண்டு அப்பாவி குழந்தைகள் வீட்டில் வந்து அம்மா அப்பாவை பார்த்து இன்னைக்கு வகுப்பில் Flames போட்டுக் கொண்டார்கள், Crush, Love பத்தி பேசிக்கிறாங்கன்னு சொல்லும் போது சங்கடமாக இருக்கிறது.  அது அது வர வேண்டிய வயதில் வர வேண்டும்.  படிப்பில் கவனம் இருக்குதோ இல்லையோ, டீச்சரை எப்படி சமாளிப்பது, மற்ற பிள்ளைகளை எப்படி மட்டம் தட்டி பேசுவது என்பதில் புத்திசாலித்தனம் காட்டுகிறார்கள். இந்த கேடு கெட்ட புத்திசாலித்தனத்திற்கு பெற்றோர்களுக்கு பெருமை வேறு!!

Image result for spoiled adult children

தன் பிள்ளை சின்ன வயதிலேயே அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்ற ஆசையில் ஏகப்பட்டதில் சேர்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு தன் வயதில் விளையாடும் விளையாட்டில் விளையாட நேரம் கிடைக்காமல் போகிறது.  நான் கோலி, கில்லி விளையாடிய வயதில் இப்போது பிள்ளைகள் நுழைவு தேர்வு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். சினிமா என்றால் என்ன என்று தெரியாத என் வயதில், இப்போது பிள்ளைகள் நீ விஜய் Fana, அஜித் Fana என்று கேட்டுக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு செல் போன் கிடைத்து விடுகிறது.  Facebook, whatsapp பார்க்கிறார்கள். அசிங்கமான படம் என்றெல்லாம் சொல்லத் தெரிகிறது.  அரசியல் தெரிகிறது.  காதலை பற்றி யோசிக்கிறார்கள்.  எல்லாம் தெரிகிறது. ஆனால் எதிலும் நிதானம் இல்லை.  அது எப்படி வரும்?.  அதற்கு அனுபவம் வேண்டுமே.  மற்ற குழந்தைகளுக்கு வண்டி வண்டியாய் போதனை செய்யும் பெற்றோர் தன் குழந்தைகளை ஒழுங்காக வளர்ப்பதில்லை.  தங்கள் குழந்தைகள் சரியான ரூட்டில் தான் போகிறார்களா என்று சரி பார்ப்பதில்லை.  நாமக்கல் பள்ளியில் சேர்த்து விட்டால் பையன் தேறி விடுவான் போன்ற அவசரத்தனம் தான் தெரிகிறது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், தனுஷ் போன்றோர் பெரும்பாலான படங்களில் வேலைவெட்டி இல்லாத படிக்காத பையனாக தான் வருகிறார்.  ஆனால் காதலிப்பதோ அழகான பணக்கார பெண்ணை.  இதில் அட்றா அவளை, வெட்றா அவளை என்று பாட்டு வேறு.  அவர் அண்ணன் செல்வராகவன் தான் இந்த வகையறா படங்களை ஆரம்பித்து வைத்தது.  படங்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டுக்கு ஒரு வேண்டுகோள்.  இனி மேல் படங்களை ஆரம்பிக்கும் முன்பே திரைக்கதையை (Script) என்னவென்று ஆராய்ந்து செர்டிபிகேட் செய்யுங்கள்.

என்னை பொறுத்த வரை குழந்தைகளை குழந்தைகளாக வைத்திருந்தாலே அவர்களை நன்றாக வளர்ப்பது போலாகும். பிஞ்சுலேயே பழுத்து விடுவதால் அதனால் தொல்லைகள் அதிகம். அப்படியானால் எப்படி வளர்க்கலாம்?
12ஆம் வகுப்பு வரை செல்போன் வாங்கி கொடுக்காதீர்கள்.  காலேஜ் முடிக்கும் வரை பைக் வாங்கிக் கொடுக்காதீர்கள்.  அதிகமாக டி.வி, சினிமா பார்க்க விடாதீர்கள்.  ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்கள் கண்டிப்பாக பழக்க படுத்துங்கள். பிள்ளைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களை திட்டுவது, பொய் சொல்வது, பிறரை அவ மரியாதை செய்வது, ஏமாற்றுவது போன்றவற்றை செய்யாதீர்கள்.  ஆண் பிள்ளைகளையும் கோயிலுக்கு அழைத்து போங்கள்.

நாங்கள் சின்ன வயதில் Bubble gum மென்று முட்டை விட்ட வயதில் இப்போது சிகரெட்டு புகை விட்டு வட்டம் விடுகிறார்கள். புத்தக பை தூக்கும் வயதில் கத்தி ஆயுதம் தூக்குகிறார்கள்.  பெற்றோர்களின், மற்றும் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந்த காலம் அப்போது.  இப்போது சின்னஞ்சிறு பிள்ளைகள் நமக்கு அறிவுரை சொல்லும் காலம்.   தனக்கென்று ஒரு உலகத்தை உண்டாக்கி வாழும் பிள்ளைகள் பெற்றோரை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள்.   ஏதாவது விபரிதம் நடந்த பின் தான் அது எவ்வளவு தூரம் என்று தெரிய வருகிறது.  அதனால், பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தை கெடுத்து விடாதீர்கள். அவர்கள் மனநிலை பக்குவம் அடைய கால அவகாசம் கொடுங்கள். பெரிய பெரிய விஷயத்தையெல்லாம் அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.  குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற முதிர்ச்சி தேவை!!!


திங்கள், ஜூன் 20, 2016

சாலைகள் தோண்டாமை நன்று !!!

சென்னை மாநகராட்சிக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று சாலைகளை (ரோடு) தோண்டுவது.  தமிழில் வினைத்தொகை என்று படித்திருப்பீர்கள். அதாவது ஊறுகாய் என்பதை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என்று சொல்லலாம்.  அது போல் சென்னை ரோடுகளை - தோண்டிய ரோடு, தோண்டுகின்ற ரோடு, தோண்டும் ரோடு என்றும் சொல்லலாம்.  

Image result for chennai road digged

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகையில்,  எப்போதும் வரும் சாலையை தோண்டி இருந்ததால் மாற்று சாலையை பயன்படுத்தி வந்தேன்.  இப்படி செய்து இரண்டு மூன்று மாதம் ஆகிவிட்டதால், இன்று மறுபடியும் வழக்கமான சாலையில் வரலாம் (தோண்டியதை சரி பண்ணி இருப்பார்கள் என்ற நப்பாசை) என்று வந்து பார்த்தால் முன்பை விட ஆழமாக தோண்டி இருந்தார்கள்.  அப்போது உதித்தது தான் மேலே சொன்ன ஊறுகாய் சமாச்சாரம்.  ரோடு தோண்டுவதற்கான காரணங்களை இப்போது ஆராய போவதில்லை.  ஆனால் இப்படி தோண்டிக்கொண்டே இருப்பதால் மக்கள் படும் அவஸ்தை இருக்கிறதே...அதை எழுத்தால் முழுமையாக எழுத முடியாது. 

பாரிஸ், ரோம் போன்ற நகரங்களில் சில இடங்களில் அரசாங்கத்திடம் அனுமதி வாங்காமல் எங்கேயும் தோண்ட கூடாது.  புராதன காலத்தில் போட்ட ரோடுகளாம் அவை.   இங்கே எங்கள் வீட்டு ரோட்டை தோண்டினால் பல புராதன ரோடுகள் உள்ளே புதையுண்டு கிடைக்கும்.  பல சமயங்களில் ரோட்டை தோண்டும் தொழிலாளர்களுக்கு அதை ஏன் தோண்டுகிறோம் என்றே தெரிவதில்லை.  போன மாசம் தானே தோண்டுனீங்க, மறுபடி ஏன் தோண்டுறீங்க என்று கேட்டால் வெள்ளந்தியாக சிரிப்பார்கள்.  அது போன மாசம்.  இது இந்த மாசம் என்ற பதிலை மானசீகமாக நினைத்துக் கொள்வேன். 

சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் இருக்க ஆட்டோ காரர்கள் வளைந்து வளைந்து ரோட்டின் மீது இன்னொரு ரோட்டை போடுவார்கள்.  அவர்கள் போடும் புது ரூட்டை பின் தொடர்ந்து நாம் போய் விடலாம்.  என்ன, அலுவலகத்திற்கு கொஞ்சம் லேட்டாக போக வேண்டும்.  சில ரோடுகளுக்கு பள்ளங்களிலிருந்து சாப விமோசனமே கிடையாது.  365 நாட்கள் 24 மணி நேரம் தோண்டப் பட்டே இருக்கும்.  மக்களும் லேசு பட்ட ஆட்கள் இல்லை.  நீ தோண்டிகிட்டே இருக்கியா அதை பற்றி எனக்கென்ன கவலை என்பது மாதிரி மக்கள் குறுக்கும் நெடுக்கும் சாலைகளை கடக்க வண்டியில் போகும் எங்களுக்கு சரக்கே அடிக்காமல் போதையில் வண்டி ஓட்டுவது போல நடுங்கும்.  

இன்று, தோண்ட பட்ட சாலைகளை பற்றி ரொம்ப தோண்டிவிட்டேன். இன்னும் தோண்டினால் பள்ளத்திலிருந்து சாக்கடை, குப்பை போன்ற இன்னும் பல வஸ்துகள் வெளிவந்து விடும் என்பதால் இத்தோடு முடித்து விடுகிறேன்.  நாளை தோண்டப்படாத இன்னொரு ரோட்டை கண்டு பிடிக்க வேண்டும்.





ஞாயிறு, ஜூன் 19, 2016

நெருப்புடா...கபாலி பாடல்

பருப்புடா, தக்காளிடா ...என்று கபாலியின் பாடலையொட்டி காமெடிகள் வந்தாலும் நெருப்புடா பாடல் நிஜமாகவே நெருப்பு ரகம்.    ரஜினி ரசிகன் என்பதால் மட்டும் அல்லாமல் பொதுவாகவே கபாலியின் பாடல்கள் எல்லாமே பிடித்திருந்தது.   ஏனென்றால் கபாலி பாடல்கள் பழைய இசை வடிவங்களை ஒத்திராது புதிதாக இருக்கிறது.  

சிவாஜி, எந்திரன் பட பாடல்கள் ரஹ்மானின் வழக்கமான பாடல்களாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தன.  இளையராஜா ரஜினிக்கு பாடல்கள் போட்ட போது, படத்துக்கு படம் வித்தியாசமாய் இசையமைத்திருப்பார். அம்சலேகாவின் கொடி பறக்குது கொஞ்சம் Different ஆக இருந்தது.    ஆனால் கபாலி இது வரை வந்த ரஜினி பட பாடல்கள் போல் இல்லாமல் முற்றிலும் புதிதாய் அதே சமயம் powerful ஆகவும், இளைய தலைமுறையை கவரக்கூடிய வகையிலும் உள்ளது.

நெருப்புடா பாடலை கேட்டால்  மேற்கத்திய Heavy Metal வகை இசையை போல் தெரியும்.  இந்த வகையறாவை யொட்டி சில தமிழ் பாடல்கள் வந்திருந்தாலும், இது தான் முழுக்க முழுக்க Heavy Metal யொட்டி வந்த தமிழ் பட பாடல் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு Metallica என்னும் இசைக்குழுவின் இந்த Heavy Metal வகை பாடலை கேளுங்களேன்.


இப்போது நெருப்புடா பாடலை கேளுங்களேன்.


நெருப்புடா ...நிஜமாகவே நெருப்பான பாடல் தான்......



செவ்வாய், ஜூன் 14, 2016

முகமது அலி ஏன் இவ்வளவு பிரபலம்?

முகமது அலி ஒரு குத்து சண்டை வீரர்.  அவருக்கு லைலா என்றொரு பெண் இருக்கிறார்.  அவரும் ஒரு குத்து சண்டை வீரர் தான்.  முகமது அலி பார்கின்சன் நோயால் அவதி பட்டார்.  இவ்வளவு தான் முகமது அலியை பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர் சமிபத்தில் இறந்ததும் செய்தி தாள்களிலும், தொலைகாட்சியிலும், வலை பக்கங்களிலும் வந்த இரங்கல்களையும், முக்கியத்துவத்தையும் கவனித்தால் ஒரு விளையாட்டு வீரர் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார் என்று ஆச்சர்யம் வந்தது.

Image result for why muhammad ali is very popular

முகமது அலி இறந்தது செய்தி தாள்களில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தி.  பி.பி.சி வலை பக்கத்தில் கூட பெரும்பாலும் இந்த செய்தியை தான் காண முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.    நம்ம ஊர் செய்தி தாள்களில் கூட முகமது அலி, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை பார்க்க முடிந்தது. கருணாநிதியே தனது இரங்கல் செய்தியில், அவரின் வீட்டிற்கும், அறிவாலயத்திருக்கும் 1990 இல் முகமது அலி சென்றிருப்பதை குறிப்பிட்டிருந்ததை கண்டவுடன் ஒரு குறுகுறுப்பே  வந்து விட்டது.  


ஒரு குத்து சண்டை வீரருக்கு இவ்வளவு பேரும், புகழும் எப்படி கிடைத்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது மைக் டைசன் என்னும் குத்து சண்டை வீரர் புகழ் பெற்றிருந்தார்.  இவர் நாக் - அவுட்டுக்கு பேர் போனவர். இவரது சண்டையை டி.வியில் நேரடியாக ஒளிப்பரப்பினார்கள். அதை பார்த்து விட்டு அடுத்த நாள் பள்ளிகூடத்தில் ஆஹா ஓஹோ  என்று பேசியது ஞாபகம் இருக்கிறது.  ஆனால் இது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான். பிறகு மைக் டைசனொ அல்லது குத்து சண்டையோ தலை தூக்கவேயில்லை. குத்து சண்டையை விட நாங்கள் டென்னிசை அதிகம் ரசித்திருக்கிறோம். இவான் லென்டில், போரிஸ் பெக்கர், ஆண்ட்ரிவ் அகாசி போன்றவர்கள் அப்போது டென்னிஸில் மிகவும் பிரபலம். ஆனால் இவர்கள் யாரும் முகமது அலி அவர்களுக்கு புகழ் வாய்ந்தவர்களா என்று தெரியவில்லை.   சச்சின் டெண்டுல்கர் எல்லாம் இந்தியா போன்ற கிரிக்கெட் பைத்தியம் உள்ள நாட்டில் தான் பிரபலம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கால்பந்து தான் மிகவும் பிரபலம். இப்படி இருக்க, முகமது அலியை பற்றி வலை பக்கங்களில் அலசியதில் கிடைத்த தகவல்கள்:
  • அமெரிக்காவில் பிறந்த கருப்பர் இனத்தை சேர்ந்த முகமது அலி பிறப்பால் கிறிஸ்தவர்.  பின்பு முஸ்லிமாக  மாறியவர்.
  • உலகத்திலேயே முதல் முறையாக ஹெவி வெயிட் பிரிவில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அதுவும் வெவேறு காலக்கட்டத்தில் வென்றார்.
  • முகமது அலி எளிமையாக பழக கூடியவர்.  பெண்களுக்கு பிடித்தமானவர். நான்கு பெண்களை மணந்து ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தை.
  • வியட்நாம் போரை எதிர்த்தவர். இந்த காரணத்தால் தனது பட்டத்தை இழக்க  வேண்டியிருந்தது.   கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர். 
  • பார்கின்சன் நோயால் பாதிக்க பட்டிருந்தாலும் பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சமுக பணியாற்றியிருக்கிறார்.
  • பத்திரிக்கைகளுக்கு சுவாரசியமாக பேட்டி கொடுப்பார்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
இப்படியும், மற்றும் அவர் விளையாடி ஜெயித்த போட்டிகளை பற்றியும் தகவல்கள் கிடைத்தன.   மேலும், இவரை விட குத்து சண்டை போட்டியில் வலுவானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும்  அறிய முடிந்தது. இதை எல்லாம் பார்த்த பிறகு, உண்மையை சொல்ல வேண்டுமானால் எதனால் இவர் இத்தனை பிரபலமானார் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.  என்ன தான் சாதித்தாலும் சிலர் மட்டும் தான் பிரபலமாக வேண்டி பிறந்திருக்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது.   எல்லோரும் அவரை புகழ்வதால் அவர் நல்லவராகவே இருக்க கூடும்.  அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.



வியாழன், ஜூன் 02, 2016

ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ?


Image result for swachh bharat abhiyan

கண்ட கண்ட பொது இடங்களில் Mr. பொது ஜனம் உச்சா போறதை இந்த ஸ்வட்ச் பாரத் நிறுத்தி விட்டதா?  காத்தாட வெளியே போறத விட்டுட்டு  இந்த தண்ணி வராத கழிப்பறைக்கு யாரு போவாங்கன்னு பேசுகிற பொது ஜனத்தை இந்த திட்டம் மாற்றி விட்டதா?  ஆனால் சூரியன் F.M இல், ஸ்வட்ச்   பாரத் பற்றிய விளம்பரம் அடிக்கடி வருகிறது.  அதுவும் ஹிந்தியில்!!  எப்படி பட்ட காம்பினேஷன் பாருங்கள்!!  விளம்பரம் கொடுப்பவர்க்கு இது தமிழ்நாடு, ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் யாருக்கும் புரியாது என்பது புரியவில்லை.  அந்த விளம்பரத்தை போடும் சூரியன் அலைவரிசைக்கோ ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் தங்கள் கழகத்தின் தமிழ் காவலர் இமேஜ் கெட்டு போகுமோ என்று கவலையில்லை.  எல்லாம் பணம் ஐயா பணம்...

எது எப்படியோ, இந்த திட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. ஆரம்பத்தில், வி.ஐ.பி என்று அறியப்படும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் கையில் துடைப்பத்தோடு காட்சி கொடுத்தனர்.  நம் கமல்ஹாசன் கூட அந்த மாதிரி பத்திரிக்கை புகைப்படங்களில் வந்தார்.  ஆனால் கையில் பக்கெட்டோடு ஏரியை சுத்தபடுத்துவதற்காக. 

Image result for kamal hassan swachh bharatImage result for kamal hassan swachh bharat


இப்படி இவர்கள் எல்லாம் கையில் துடைப்பத்தோடும் பக்கெட்டோடும் போட்டோவிற்கு போஸ் கொடுத்ததற்கு யாரும் துட்டு கொடுக்க வில்லையோ என்னவோ, ஸ்வட்ச் பாரத் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.  நான் இருக்கும் சிங்கார சென்னையை  பார்க்கிறேன்.  குப்பை கூளங்களும், சாலையில் சாக்கடை ஒழுகி ஓடுவதும், ரோட்டில் எச்சில் துப்புவதும், குப்பையை வீசுவதும் எதுவும் நிற்கவில்லை.  இப்போது தான் ஸ்வட்ச் பாரத் திட்டம் பிகார், உத்தர் பிரதேஷ் போன்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது தமிழ்நாடு வருமென்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் நம்மூருக்கும் ஸ்வட்ச்பாரத் வரியென்று 0.5% வரி போட்டு விட்டார்கள்.  

இந்த திட்டத்தின் படி 2019  ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பதை அடியோடு நிறுத்துவதே முதல் நோக்கமாகும்.  இதற்காக 12 கோடி கழிப்பறைகளை கிராமங்களில் கட்ட வேண்டும் என்ற மத்திய அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக டாட்டா, மகிந்திரா போன்ற நிறுவனங்களும், உலக வங்கியும் பொருளுதவி செய்கின்றன.  முக்கியமாக பெண்கள் கழிப்பறை தேடி வீட்டிற்கு வெளியே செல்வது மோடி அவர்களுக்கு அதிக கவலை கொடுத்திருக்கிறது.  மோடியின் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம்.  நான் கூட, சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் காந்தி, நேரு  முதற்கொண்டு அப்துல் கலாம் வரை யாரும் சுத்தம் சுகாதாரம் பற்றி பெரிதாக சீர் திருத்தம் கொண்டு வரவில்லையே என்று யோசித்ததுண்டு. ஆனால் முதன்முறையாக தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்த மோடியை பாராட்டுகிறேன்.   அவர் கனவு நனவாக இன்னும் சில வருடம் காத்திருப்போம்.  கழிப்பறை மட்டுமில்லாமல் அதற்கும் மேலே பொது இடங்களில் சுகாதாரம் பற்றியும் அவரது திட்டம் அமையும் என்றும் எதிர்பார்ப்போம்.  

அனால் நம் Mr. பொது ஜனமும் கொஞ்சம் மனசு வந்து பொது இடங்களில் உச்சா போறது, எச்சில் துப்புறது, லுங்கி கட்டிக்கொண்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து ரோட்டோரத்தில் உருண்டு கிடப்பது, வாங்கின பிளாஸ்டிக் கவரை கண்ட இடங்களில் போட்டு விடுவது போன்றவற்றை நிறுத்தவும் இந்த ஸ்வட்ச்பாரத் திட்டம் இப்போதே வகை செய்ய வேண்டும்.  இதற்காக பொறுத்திருந்து 2025 லேயா திட்டமிடமுடியும்?  நம் நாட்டில் எதற்குமே கொஞ்சம் அதிகம் போராட வேண்டும் போலிருக்கிறது.  சுதந்திரம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்.  அது போல சுகாதாரம் வாங்கவும் கஷ்டப்பட வேண்டும் போலிருக்கிறது.  முன்னது வெள்ளைக்காரனிடமிருந்து வாங்க போராட வேண்டியிருந்தது.  பின்னது, நம்மிடமிருந்து நாமே வாங்க போராட வேண்டியிருக்கிறது.  பொதுநலம் நம் சுயநலமாக இருக்கட்டுமே !!!

சரி!!  ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ? இன்னும் ஒரு வருடம் கழித்து பார்ப்போம்.