திங்கள், டிசம்பர் 07, 2015

விடாத மழை

மழையும் சென்னையும் என்று சில நாட்களுக்கு முன் பதிவு எழுதி விட்டு மழைக்கு முற்றுபுள்ளி போட முடியவில்லை.  மழை சீசன் 1, சீசன் 2 என்று போய் கொண்டு இருக்கிறது.  இந்த முறை மழை அதிக பலம். அடையாறும், கூவமும் நாங்கள் வெறும் சாக்கடை கால்வாய்கள் இல்லை, பெரிய ஆறுகள் என்று நிருபித்து விட்டன. பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஏரிகள் எங்கெங்கு இருந்தன என்பதை மழை அதன் இருப்பிடத்தை காட்டிகொடுத்து விட்டது.  

தமிழக மக்கள் உணர்ச்சிமயமானவர்கள்.  அது நல்லதுக்காகவும் இருக்கலாம். உபயோகமில்லாத விஷயத்துக்காகவும் இருக்கலாம்.  இயற்க்கை சீற்றம் வந்துவிட்டால் பதற்றமடைவது, மற்றவர்களை பதற்றமடைய வைப்பது, புரளிகளை கிளப்புவது, தமிழ் நாடே  அழிய போகுது என்று பிரச்சாரம் செய்வது ஒரு பக்கம்.  இன்னோர்  பக்கம் தன்  உயிரை  பார்க்காமல் வெள்ளத்தில் நீந்தி மற்றவர்களை காப்பாற்றியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  தன்  குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று கூட தெரியாமல் பிறர்க்கு பகல் இரவு என்று பார்க்காமல்  உதவி செய்தவர்களும் ஏராளம்.  தமிழனின் இந்த உணர்ச்சிவசப்படுதலை அரசாங்கம் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.



உணவு பொட்டலங்கள், ஆடை, இருப்பிடம் போன்ற அத்தியாச பொருட்களுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து விட்டது.  இன்னும் நல்ல உள்ளம் படைத்த தனி மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ அள்ளி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால்  இது மட்டும் போதுமா? இந்த  மாதிரி மறுபடியும் மழை வந்தால் அன்றாட வேலைகளும்,  மக்களின் வாழ்வாதாரமும் முடங்காதவாறு அரசாங்கம் திட்டமிட்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எப்படி என்றால், 

1.  போன பதிவில் நான் சொன்ன மாதிரி சென்னையின் மக்கள் நெருக்கடியை குறைக்க வேண்டும்.  சென்னை நகருக்குள்ளே அடுக்கு மாடி குடியிருப்புக்கு  இனிமேல் அனுமதி கொடுக்க கூடாது.  புற நகர் பகுதிகளுக்கு கழிவு நீர் வடிகால், மின்சார வசதி, நல்ல சாலைகள் என்று வசதி ஏற்படுத்தவேண்டும்.  கூடுவாஞ்சேரி, ஒரகடம், கேளம்பாக்கம், திருவள்ளூர் போன்ற இடங்களில் மக்கள் குடியேற அரசாங்கம் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 

2.  துறை வல்லுனர்களைக் கொண்டு இப்போதைய சென்னை நகர கழிவு நீர் கால்வாய்கள் கூவத்திலும், அடையாரிலும் கலக்காமல் இருக்க நல்ல திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 

3. இருக்கும் வெள்ள  நீர் வாய்க்கால்கள் பெரிது படுத்த வேண்டும்.

4.  சாலைகளில் நீர் தேங்காதவாறு செய்ய வேண்டும்.  சாலை ஓரங்களில் மண் தெரியாதவாறு கல் பதிக்கலாம் (Tiles). ஏனென்றால் இந்த மண் தான் மழைக்காலத்தில் வெள்ள நீர் கால்வாய்களில்  போய் அடைத்துக்கொள்கிறது. 

5.  ஆறுகளின் ஓரத்தில் யாரையும் குடியேற அனுமதிக்க கூடாது.

இதை எல்லாம் விட்டு விட்டு, அந்த நடிகர் இவ்வளவு கொடுத்தாரு, இந்த நடிகர் அவ்வளவு கொடுத்தாரு என்று வெட்டி பேசுவது, மழை முடிஞ்சதும் கூவம் கரையிலும், அடையாறு கரையிலும் குடி போவது, ரோட்டில் உள்ள குண்டு குழியில் கல்களை கொண்டு நிரப்புவது, ஒன்றுமே நடக்காதது போல் அடுத்து தேர்தல் போஸ்டர் ஓட்ட போய் விடுவது, மறுபடியும் CMDA ஏரிகளில் வீடு கட்ட அனுமதி கொடுப்பது, கூவத்திலும், அடையாறிலும் சென்னை மாநகராட்சியே கழிவை கொட்டுவது என்று போய்க் கொண்டிருந்தால், நம்மை யாராலும் ஒழுங்கு படுத்த முடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக