புதன், நவம்பர் 25, 2015

மழையும் சென்னையும் ....

போதும் போதும் என்று இந்த முறை (2015) மழை பெய்து விட்டது.  சென்னையில் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதுமே.... இது சம்பந்தமாக  மழை வெள்ளம், வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள், அடித்து செல்லப்பட்ட மனிதர்கள், உடைந்த பாலங்கள், அறுந்த மின் கம்பிகள், சிதைந்த சாலைகள், ஆர்ப்பரித்து செல்லும் ஆறுகள், நிரம்பிய ஏரிகள், திறக்காத பள்ளிகூடங்கள்  என்று பல தரப்பட்ட செய்திகளும், வீடியோக்களும் பார்த்தோம். 

இதற்கான காரணங்களாக ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், இருக்கும் ஏரியை சரியாக தூர் வாராதது என்று பலவற்றை செய்தி தாள்களும், இன்னும் பல ஊடகங்களும் அலசி ஆராய்ந்தன.  



எனக்கு நான் ஐந்தாம் வகுப்பு (1985) படிக்கும் போது சென்னையில் பெய்த அடை  மழை ஞாபகம் வந்தது.  காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் முன்னரே பள்ளி விடுமுறை என்று தெரிந்தும் கூட, இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே பள்ளிக்கூடம் போனதும், பள்ளி முழுக்கவே தண்ணீரில் மிதப்பதை பார்த்து பிரமித்ததும், பின் ஆனந்தப்பட்டதும் நினைத்து பார்த்தேன்.  சாலைகளில் ஆங்காங்கே லுங்கி கட்டிய மனிதர்கள் நின்று கொண்டு, இந்த வழியில் போக முடியாது, அந்த வழியில் போக முடியாது (blocku Sir!!) என்று கொஞ்ச நஞ்ச கடமை உணர்ச்சி மனிதர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.  செடிகளும், மரங்களும் ரோட்டில் விழுந்து கிடக்கும்.  வீட்டில் நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது.  நாங்கள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு நாள் முழுவதும் விளையாடிகொண்டே இருப்போம்.  

இதே ஞாபகங்கள் 1995 போதும், 2005 போதும், இப்போது 2015 போதும் வந்தன.  மேலும் இப்படி மழை பெய்யும் போதெல்லாம் வரும்.  அதற்கு தமிழகத்தை ஆளும் கட்சிகள், ஆளபோகிற கட்சிகள் வழி செய்துகொண்டே இருக்கும்.  மற்ற நாடுகளும், ஏன் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்கள் கூட முன்னேற்ற பாதையில் போகும் போது, தமிழ் நாடு பின்னோக்கியே போவது ஏன்?  அதற்கு காரணம், நம் அரசியல் வாதிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல, கடைந்தெடுத்த முட்டாள்கள்.  அட அயோக்கியர்களே, நீங்கள் காசு அடித்து விட்டு போங்கள்.  கொஞ்சம் புத்திசாலிதனமாகவும்  யோசித்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்களேன்.  யாராவது ஒரு நல்ல மனிதரை தமிழகத்தை வழி நடத்த  கடவுள் அனுப்பி வைப்பார் என்று பிராத்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக