ஞாயிறு, நவம்பர் 29, 2015

நகர்ந்து கொள் நகரமே!!!

சென்னையின் தற்போதைய (2015) மக்கள் தொகை 48 லட்சம்.  ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 14 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.  மக்கள் தொகை நெருக்கத்தில் உலகத்திலேயே எட்டாவது இடம்.  இந்த நகரத்தில் 144  போட்டால் கூட மக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டு இருப்பார்கள். 

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்.  வண்டி ஓட்டும் போது, குறுக்கில் புகுந்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர் என்று.  ஓட்டுவதற்கு பதில் வண்டியை தள்ளிக்கொண்டே போய்விடலாம் என்று தோன்றும்.   ஞாயிற்று கிழமைகளில் கூட இப்போதெல்லாம் மக்கள் நடமாட்டத்தை சாதாரணமாக  சாலைகளில் பார்க்கலாம்.  முன்னெல்லாம் தி. நகர் ரங்கநாதன் சாலை, புரசைவாக்கம் சாலை போன்றவை தான் கூட்டமாக இருக்கும்.  இப்போதெல்லாம் எல்லா சாலைகளும் ரங்கநாதன் சாலை தான்.

சென்னை மக்கள் அப்படி அலைந்து திரிந்து சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்.  ஜன நெருக்கடி தான்.   பல வருடங்களாக ஒற்றை (single) வீடுகளாக இருந்தவை எல்லாம் இப்போது இருபது வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகி விட்டன. ஒரு குடும்பம் வசித்த இடத்தில் ஒன்பது குடுபங்கள்.  குடி நீர் குழாய்களும், சாக்கடை குழாய்களும், மின்சார இணைப்புகளும், சாலையின் அகலங்களும், தரமும் அப்போது இருந்த மக்கள் தொகைக்காக போடப்பட்டது.  இப்போது, கூடுதலாக வந்து குடியேறிய மக்களுக்காக வசதிகள் செய்யும் போது  அடிக்கடி சாலையை தோண்ட வேண்டியிருக்கிறது.   மின்சார இணைப்பை பெரிது படுத்த வேண்டியிருக்கிறது.  சாக்கடை அடைத்துக்கொள்கிறது.  சாலைகள் போக்குவரத்தை தாங்குவதில்லை. காற்று மாசு பட்டு குழந்தைகள் எல்லாம் Nebulizer பயன்படுத்துவது சாதாரணமாகி விட்டது. மக்கள் முகமுடி திருடர்கள் போல முகத்தை மூடிக்கொண்டு பயணிக்கிறார்கள்.  தெருக்கு தெரு டாக்டர்களின் கிளினிக்குகள் பார்க்கிறோம்.   அந்தக் காலம் போன்று டாக்டர்கள் வீடு தேடி வந்து சிகிச்சை அளித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதெல்லாம் தெரிஞ்சது தானே என்கிறீர்களா? கீழே உள்ள விளம்பரத்தை பாருங்கள்.


இது மாதிரி நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகள் சென்னையில் வந்துக்கொண்டே இருக்கின்றன.  பில்டர்கள் வாங்க ஆள் கிடைத்தால்  விற்றுக்கொண்டு தான் இருப்பார்கள்.  ஆனால் இதற்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கத்தை (CMDA) என்ன சொல்ல?  புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கிண்டி, பெசன்ட் நகர் என்று நகரத்தின் முக்கிய இடங்களில் நூறு இருநூறு என்று அடுக்கு மாடி வீடுகள் வந்த வண்ணம் இருகின்றன.  அத்தனை வீடுகளிலும் கார் வைத்திருப்பார்கள்.  அவை அத்தணையும் சாலைக்கு வரும் போது வாகன நெரிசலை எண்ணிப் பாருங்கள்.  ஆபிஸ்க்கு நேரத்தில் போக முடியுமா??

போதுங்க...இனிமேலும் சென்னை தாங்காதுங்க.. கொஞ்சம் நகர்ந்து ஒரகடம், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் பக்கம் சென்னை விரிவடைய வேண்டும்.  அரசாங்கம் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் இடம் பெயருவார்கள்.  சென்னை சுத்தமான காற்றை சுவாசிக்கும்.  கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களாக !!!

சென்னை நகரமே கொஞ்சம் 
நகர்ந்து போ  - இல்லையெனில் 
நீ நகரமில்லை நரகமே !!!
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக