ஞாயிறு, ஜூலை 24, 2016

கபாலி விமர்சனம் - ரஜினியை பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள்!!!!

கபாலிக்கு டிக்கெட் கிடைக்காதலால் சிவனே.. என்று உட்கார்ந்திருந்த எனக்கு எந்த நடிகருக்கும் ரசிகனாக இல்லாத சில நண்பர்கள்  படத்தை பார்த்துவிட்டு செம படம் என்று உறுதி செய்ததும், என் மனம் சும்மா இருக்குமா... என் மகளை கூட்டிக் கொண்டு லோக்கல் தியேட்டருக்கு படம் பார்க்க கிளம்பி விட்டேன்.

Image result for kabali movie

இதற்கு முன், மூன்று நாளாய் படத்தின் விமர்சனங்களை  இணையத்தில் படித்ததில் படம் மொக்கை, Drag..அப்படி இப்படினு படிச்சதும் ஒரே ஆச்சர்யமாக இருந்தது.  ஏனென்றால், எப்படியும் லிங்காவை விட இந்த படம் நன்றாக இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்பியதும், சில விமர்சனங்கள்  லிங்காவே மேல் என்று எழுதியிருந்ததும் தான்.  பின் தான் இதெல்லாம் சில வட இந்திய ஊடகங்களும், நம் வழக்கமான ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் வேலை என்று தெரிந்தது.

இது வரை ரஜினி படம் மசாலா type, லாஜிக் இருக்காது, கதை இருக்காது, நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்காதென்று சொன்னவர்கள் இப்போது கபாலியில் இது எல்லாம் இருந்தவுடன், படம் ரஜினி படம் மாதிரி இல்லை, ஸ்டைல் இல்லை, விறுவிறுப்பு இல்லை என்று கதை விடுவது ரொம்ப அசிங்கம்.  உண்மையில் இந்த படம் அசத்தல் படம்.  ரஜினியை வெறுப்பவர்கள் தவிர மற்றவர்க்கு  கண்டிப்பாக பிடிக்கும்.  தியேட்டரில் கூட மக்கள் என்னப்பா படம் நல்லா தானே இருக்கு, இதை போய் நல்லாயில்லைனு சில பேர் சொல்கிறார்களே என்று கேட்க முடிந்தது.

ரஜினியின் நடிப்பை பற்றி தனியாக சொல்ல நான் விரும்பவில்லை.  முள்ளும் மலரும், அவள் அப்படி தான் , ஜானி போன்ற படங்களில் முழு படமும், கதை சார்ந்த ஆழமான நடிப்பு திறனை வெளிப்படுத்திருந்தாலும், பின் அவர் ஸ்டைல், காமெடி என்று தன் படங்களை மாற்றிக்கொண்டார்.  ஆனாலும், அண்ணாமலை, பாட்சா, தளபதி போன்ற படங்களில் சில இடங்களில் அந்த ஆழமான நடிப்பு வெளிப்பட்டிருந்தது.  இதுவே, எனக்கு ஏதாவது ஒரு படம் ரஜினியின் ஆரம்ப படங்களை மாதிரி அழுத்தமான நடிப்பு, கதையையொட்டி வராதா என்று ஏக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.  அப்படியொரு படம் தான் கபாலி.  நடிப்பென்றால் என்னவென்று இந்த படத்தில் ரஜினி Class எடுத்திருக்கிறார்.

மூன்றாவது படமே ஆனாலும் ரஞ்சித்திடம் பெரிய டைரக்டருக்கான தகுதிகள் தெரிகிறது.  படத்தை முடிந்த வரை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களும் கதையையும், அது நடக்கும் களத்தையும் ஒட்டியேயிருந்தது ரஞ்சித்தின் நல்ல Direction.  எனக்கு இந்த டைரக்டரை பிடித்திருக்கிறது.

ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக வரும் சாய் தன்ஷிகா,  கூடவே வரும் ஜான் விஜய், படத்தின் வில்லன் ஆகியோரது நடிப்பு சூப்பர்.  படத்தில் எல்லோருடையும் நடிப்பும் நன்றாக தான் இருக்கிறது.  சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலமும், நிறைய இடங்களில் படத்திற்கு ஏற்ற கம்பீரத்தை கொடுத்திருந்தது. மலேசியாவில் நடக்கும் கதை என்பதால் அதுவே வழக்கமான தமிழ் படங்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது.

சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அதுவும் நன்றாக தான் இருக்கிறது. படத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது கொஞ்சம் அதிகம். Gangster படம் என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை போல... ஊடங்களில் வரும் சில செய்திகளை வைத்து படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்யாதீர்கள்.  படம் சூப்பர்.  இன்னும் சில நாட்களில் படம்  Block Buster என்றே செய்தி வரும் என்று நம்புகிறேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக