வெள்ளி, ஜூலை 08, 2016

பிஞ்சில் முற்றிவிடும் குழந்தைகள்!!

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொலை சென்னைவாசிகள் அனைவரது தூக்கத்தையும் சில நாள் கலைத்திருக்கும். பெண்ணை பெற்றவர்கள் எல்லோரும் ஒரு வித திகிலில் கண்டிப்பாக இருந்திருப்பார்கள்.  இது சம்பந்தமாக வந்த செய்திகளையெல்லாம் தொகுப்பாக தர எனக்கு விருப்பமில்லை (ஏற்கனவே நிறைய படித்திருப்பீர்கள்). ஆனால் இன்றைய தலைமுறையை (பெற்றோர்களும், பிள்ளைகளையும்) பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று தோன்றியது.


இப்போதெல்லாம் பத்து வயது பிள்ளைகள் இருபது வயது பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள்.  இருபது வயது பிள்ளைகள் பெரியவர்களுக்கே அறிவுரை சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.  இப்படி பிள்ளைகள் பிஞ்சிலேயே முற்றி விடுவதில் பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோஷம்.
சார், என் பையன் நாலாம் கிளாஸ் தான் படிக்கிறான்.  ஆனா, செல்போன் operation எல்லாம் அத்துப்படி சார்.  எனக்கே ஏதாவது டவுட்னா அவனை தான் கேட்கிறேன் என்பார்.   தனக்கு தான் மூளை இல்லை.  ஆனால்,  தன் பையன் சின்ன வயதிலேயே ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்ற நினைப்பு.   இதே மாதிரி தான் - என் பையன் இப்போதே கார் ஓட்டுகிறான், கடையை கவனிச்சுக்கிறான், அவனுக்கு தெரியாததே இல்லை, அப்படி இப்படினு பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.

சின்ன பிள்ளைகள் ஏழாம் வகுப்பிலேயே Girl friends, Boy friends என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். கூட படிக்கும் ஒன்றிரண்டு அப்பாவி குழந்தைகள் வீட்டில் வந்து அம்மா அப்பாவை பார்த்து இன்னைக்கு வகுப்பில் Flames போட்டுக் கொண்டார்கள், Crush, Love பத்தி பேசிக்கிறாங்கன்னு சொல்லும் போது சங்கடமாக இருக்கிறது.  அது அது வர வேண்டிய வயதில் வர வேண்டும்.  படிப்பில் கவனம் இருக்குதோ இல்லையோ, டீச்சரை எப்படி சமாளிப்பது, மற்ற பிள்ளைகளை எப்படி மட்டம் தட்டி பேசுவது என்பதில் புத்திசாலித்தனம் காட்டுகிறார்கள். இந்த கேடு கெட்ட புத்திசாலித்தனத்திற்கு பெற்றோர்களுக்கு பெருமை வேறு!!

Image result for spoiled adult children

தன் பிள்ளை சின்ன வயதிலேயே அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்ற ஆசையில் ஏகப்பட்டதில் சேர்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு தன் வயதில் விளையாடும் விளையாட்டில் விளையாட நேரம் கிடைக்காமல் போகிறது.  நான் கோலி, கில்லி விளையாடிய வயதில் இப்போது பிள்ளைகள் நுழைவு தேர்வு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். சினிமா என்றால் என்ன என்று தெரியாத என் வயதில், இப்போது பிள்ளைகள் நீ விஜய் Fana, அஜித் Fana என்று கேட்டுக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு செல் போன் கிடைத்து விடுகிறது.  Facebook, whatsapp பார்க்கிறார்கள். அசிங்கமான படம் என்றெல்லாம் சொல்லத் தெரிகிறது.  அரசியல் தெரிகிறது.  காதலை பற்றி யோசிக்கிறார்கள்.  எல்லாம் தெரிகிறது. ஆனால் எதிலும் நிதானம் இல்லை.  அது எப்படி வரும்?.  அதற்கு அனுபவம் வேண்டுமே.  மற்ற குழந்தைகளுக்கு வண்டி வண்டியாய் போதனை செய்யும் பெற்றோர் தன் குழந்தைகளை ஒழுங்காக வளர்ப்பதில்லை.  தங்கள் குழந்தைகள் சரியான ரூட்டில் தான் போகிறார்களா என்று சரி பார்ப்பதில்லை.  நாமக்கல் பள்ளியில் சேர்த்து விட்டால் பையன் தேறி விடுவான் போன்ற அவசரத்தனம் தான் தெரிகிறது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், தனுஷ் போன்றோர் பெரும்பாலான படங்களில் வேலைவெட்டி இல்லாத படிக்காத பையனாக தான் வருகிறார்.  ஆனால் காதலிப்பதோ அழகான பணக்கார பெண்ணை.  இதில் அட்றா அவளை, வெட்றா அவளை என்று பாட்டு வேறு.  அவர் அண்ணன் செல்வராகவன் தான் இந்த வகையறா படங்களை ஆரம்பித்து வைத்தது.  படங்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டுக்கு ஒரு வேண்டுகோள்.  இனி மேல் படங்களை ஆரம்பிக்கும் முன்பே திரைக்கதையை (Script) என்னவென்று ஆராய்ந்து செர்டிபிகேட் செய்யுங்கள்.

என்னை பொறுத்த வரை குழந்தைகளை குழந்தைகளாக வைத்திருந்தாலே அவர்களை நன்றாக வளர்ப்பது போலாகும். பிஞ்சுலேயே பழுத்து விடுவதால் அதனால் தொல்லைகள் அதிகம். அப்படியானால் எப்படி வளர்க்கலாம்?
12ஆம் வகுப்பு வரை செல்போன் வாங்கி கொடுக்காதீர்கள்.  காலேஜ் முடிக்கும் வரை பைக் வாங்கிக் கொடுக்காதீர்கள்.  அதிகமாக டி.வி, சினிமா பார்க்க விடாதீர்கள்.  ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்கள் கண்டிப்பாக பழக்க படுத்துங்கள். பிள்ளைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களை திட்டுவது, பொய் சொல்வது, பிறரை அவ மரியாதை செய்வது, ஏமாற்றுவது போன்றவற்றை செய்யாதீர்கள்.  ஆண் பிள்ளைகளையும் கோயிலுக்கு அழைத்து போங்கள்.

நாங்கள் சின்ன வயதில் Bubble gum மென்று முட்டை விட்ட வயதில் இப்போது சிகரெட்டு புகை விட்டு வட்டம் விடுகிறார்கள். புத்தக பை தூக்கும் வயதில் கத்தி ஆயுதம் தூக்குகிறார்கள்.  பெற்றோர்களின், மற்றும் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந்த காலம் அப்போது.  இப்போது சின்னஞ்சிறு பிள்ளைகள் நமக்கு அறிவுரை சொல்லும் காலம்.   தனக்கென்று ஒரு உலகத்தை உண்டாக்கி வாழும் பிள்ளைகள் பெற்றோரை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள்.   ஏதாவது விபரிதம் நடந்த பின் தான் அது எவ்வளவு தூரம் என்று தெரிய வருகிறது.  அதனால், பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தை கெடுத்து விடாதீர்கள். அவர்கள் மனநிலை பக்குவம் அடைய கால அவகாசம் கொடுங்கள். பெரிய பெரிய விஷயத்தையெல்லாம் அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.  குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற முதிர்ச்சி தேவை!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக