சனி, மே 14, 2016

தேர்தல் நிமிடங்கள்!!!

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது.  இந்நேரம் மக்கள் தங்கள் மனதில் யாருக்கு ஒட்டு போட வேண்டுமென்று முடிவே செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இன்று முழுவதும்  கட்சி தொண்டர்கள் சைக்கிளில் ஒரு கொடியை கட்டிக்கொண்டு அங்கிட்டும் இங்கிட்டுமாய் தாறுமாறாய் அலைந்து கொண்டிருந்தார்கள்.  காலையிலேயே இரண்டு ஆட்டோ எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு கட்சி பாடல்களை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாம் தேவா போட்ட உல்ட்டா பாடல்களின் உல்ட்டா.  வீட்டு காம்பௌண்ட் சுவருக்குள் கலர் கலராய் விளம்பர பேப்பர்கள் வந்து விழுந்தன.  பொறுக்கி எடுத்து பழைய பேப்பர் கட்டுக்குள் வைத்து விட்டோம்.  சில பேப்பர்களில் எங்கள் பேருக்கே கடிதம் போன்று அச்சிடப்பட்டிருந்ததை கண்டு கொஞ்சம் திகிலாய் வேறு இருந்தது.



இவ்வளவு கூத்திலும் எங்கள் சாலையில் எந்த வேட்பாளரும் ஓட்டு கேட்க வந்ததாய் தெரியவில்லை. ஜெயித்து விடுவோம் என்ற Confidence லெவல் எக்குத்தப்பாய் இருக்கிறது போல... அதே போல் பணம் கொடுப்பது மாதிரியும் தெரிய வில்லை. இது வரை வந்த கருத்து கணிப்பையெல்லாம் பார்த்தால் எந்த கருத்து கணிப்பு சரியான கருத்து கணிப்பு என்று இன்னொரு கருத்து கணிப்பு வைக்க வேண்டும் போலிருக்கிறது.  அட போங்கப்பா நீங்களும் உங்கள் கருத்து கணிப்புமென்று இறுதியில் இவை எல்லாம் போரடித்து விட்டது.  இன்றைய தினம் பொதுஜனம் என்ன செய்து கொண்டு இருந்தது என்றறிய போன் செய்து நண்பர்களை விசாரிக்கையில் பெரும்பாலும் எல்லோரும் சினிமாவுக்கு போய் இருந்தார்கள்.  தேர்தல் புண்ணியத்தில் மூன்று நாள் லீவ் கிடைத்ததில் அப்படி ஒரு நிம்மதி. எல்லோரும் ஆள் ஆளுக்கு இந்த கட்சிக்கு ஓட்டு போடு இவங்களுக்கு போடாதே என்று உபதேசம் செய்ய நானும் பதில் உபதேசம் செய்து வைத்தேன்.  நான் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் முடிவு செய்ய வில்லை.  3G ஊழலும், சென்னை வெள்ளமும் மறக்க வில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் சாலையின் குண்டு குழிகளும், குப்பைகளும் அப்படியே தான் இருக்கிறது. இதில் யார் வந்தால் என்ன?  ஆனாலும் தமிழக மக்கள் தங்கள் பரிதாபத்துக்குரிய தலைவிதியை நன்றாக உணர்ந்து வைத்துள்ளனர்.  அதன்படி மாறி மாறி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்பது என் ஊகம்.

பல வருடங்களுக்கு முன்பெல்லாம்,  டி.வியில் ஓட்டு எண்ணிக்கையின் போது நிறைய படங்கள் போடுவார்கள்.  நடு நடுவே ஓட்டு எண்ணிக்கை விபரம் சொல்லுவார்கள்.  மிகவும் விறு விறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.   சில பெரியவர்கள் அலுவலகத்துக்கு லீவ் கூட  போட்டு விடுவார்கள்.   ஆனால் இப்போது காலை பதினோரு மணியளவிலேயே முடிவு தெரிந்து விடுவதால் விறுவிறுப்பு மிஸ்ஸிங்.  ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் எல்லாம் அமைதியாக வரிசையில் நின்று ஓட்டு போடுவதை  பத்திரிக்கைகள்  அடுத்த நாள் படம் போட, அதை பார்த்து அவர்களின் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சி கொள்வார்கள்.  தேர்தல் முடிவுக்கு பின்  அம்மாவின் சொத்து குவிப்பு வழக்கு என்னாகும் என்ற விறுவிறுப்பு எங்கள் ஆபீஸ் அரட்டை கச்சேரியில் தொற்றிக் கொள்ளும்.  இப்படியே ஊழலும், வழக்குமாய் பேசி பேசி அடுத்த தேர்தல் வந்து விடும்.  அம்மாவும், ஐயாக்களும் மட்டும் மாறவே மாட்டார்கள்.


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக