ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள்  இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியது தவறில்லையா?  பாப்பாவிடம் சாதிகள் இல்லையடி என்றால், சாதி என்றால் என்னப்பா என்று தான் கேட்கும். எந்த குழந்தைக்கு சாதி பற்றி தெரியும்? பள்ளிக்கூடம் முடித்து, கல்லூரி செல்லும் போது தான் பெரும்பாலும் பிள்ளைகள் சாதி என்றால் என்னவென்றும், சமுதாயத்தில் சாதிக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.  

அப்படியென்றால், சாதிகள் இல்லையடா தோழா என்று தானே பாரதி பாடியிருக்க வேண்டும்.   பிள்ளைகள் வளர்ந்த பின் எப்படியெல்லாம் சாதியை பற்றிக் கொள்கிறார்கள்.  அவர்கள் என்ன செய்வார்கள்?கல்லூரியில் சேரும் போதும், வேலை தேடும் போதும் சாதி அவர்களை என்னவெல்லாம் பாடாய் படுத்துகிறது.  காதலும் சும்மா விட்டு வைப்பதில்லை. பாரதிராஜா படத்தில் வரும் காதலும் சாதி மோதலும் நன்றாக நினைவு இருக்கிறது.  காதல் ஜோடி  ஓடி போவதும் அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் தீ பந்தம் ஏந்தி துரத்துவதும் சாதியை பற்றி பயத்தை கிளப்பி இருக்கிறது.  அந்த கால படங்களில் தான் இப்படி காட்டினார்கள் என்றால் இப்போதும் காதல் ஜோடிகளை (கலப்பு) துரத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று ஏட்டினில் எழுதி விட்டு சாதி தீயை கொழுந்து விட்டு வளர்த்துக்கொண்டு இருக்கிறோம்.  கல்யாணத்திற்கு சாதி வேண்டும்.  வேலைக்கு சாதி வேண்டும்.  ஓட்டுக்கும் சாதி வேண்டும். அதாவது அரசாட்சிக்கும் சாதி வேண்டும்.  பின் சாதி எப்படி ஒழியும்.  கடந்த அறுபது வருடங்களில் அழிக்க முடியாத சாதி எப்போது அழியும்?  நம்பிக்கை இருக்கிறதா? உயர்ந்த சாதி மாணவர்களுக்கு அதிக மார்குகள் எடுக்க வேண்டிய கட்டாயம்.  தாழ்ந்த சாதி மாணவர்களுக்கு தன் சாதியை தன் வட்டாரத்தில் கூட தெரிய படுத்திக்க  முடியாத ஒரு கஷ்டம்.

ஆனால் சாதி ஒழிந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  எப்போது என்றால், இந்தியாவின் சனத்தொகை குறைந்து நம் அரசாங்கம் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் சக்தி கொள்ளும் போது... குறைந்த மக்கள் தொகை, நிறைய மக்கள் சேவை என்று வரும் போது, வேலை வாய்ப்பில்  சாதி சலுகைகளை எடுத்து விடலாம்.  இப்போது இருக்கும் மக்கள் தொகைக்கு, மக்களுக்கு தேவையான உணவு கொடுப்பதே அரசாங்கத்துக்கு பெரும் பளுவாக இருக்கிறது.  இதில் சாலைகள் போடுவது, குடிநீர், மின்சாரம் கொடுப்பது எல்லாம் கோடி கணக்கான மக்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. இதில் அரசியல்வாதிகள் ஊழலுக்கு வேறு சில கோடிகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.  மக்கள் தொகை சரியும் போது, ஏழை எளிய மக்களை நன்றாக கவனிக்க முடியும். நல்ல கல்வியை அளிக்க முடியும். சாதியை வைத்து வேலை சலுகைகளை கொடுப்பதை தூக்கிவிட முடியும்.

இந்திய சனத்தொகை 2050 இல் இருந்து  குறையுமாம்.  அதுவரை சாதி சார்ந்த பிரச்சினைகள் இருந்துக்கொண்டு தான் இருக்கும். வேண்டுமானால் அரசாங்கம் சனத்தொகையை குறைக்க விரைவு நடவடிக்கை எடுத்தால் சாதியின் தாக்கத்தை குறைக்கலாம்.  இது என்னோட தனிப்பட்ட கருத்து. இப்பொது நாட்டில் சாதி சார்ந்த போராட்டங்களும், முக நூல் மற்றும், whatsapp போன்றவற்றிலும் கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதால் இந்த பதிவை எழுத தோன்றியது. மக்கள் சனதொகைக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றலாம்.  அதில் அரசாங்கத்தை மையப் படுத்தி யோசித்து பாருங்களேன்.











2 கருத்துகள்:

  1. சிறந்த பதிவு.
    இந்தியாவின் ஜனதொகை பெருக்கம் என்பது மிகவும் அபயகரமானதே. இந்தியாவின் முன்னேற்றத்திலிருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை கூட இல்லாம செய்து விடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தங்களின் புரிதல் எனக்கு சந்தோசம் அளிக்கிறது.

      நீக்கு