சில நாட்களுக்கு முன் கங்கை அமரனின் பேட்டி ஒன்றை பார்த்தேன். இளையராஜா, தாரை தப்பட்டை படத்திற்காக பின்னணி இசை பிரிவில் தனக்கு கொடுத்த தேசிய விருதை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பற்றி, கங்கை அமரன் வேதனையோடு பேட்டி கொடுத்தார். அந்த வேதனைக்கு முக்கியமாக இரு காரணங்கள் தெரிந்தன. ஒன்று, தான் விருது தேர்வுக் குழுவில் இருந்தும் அண்ணன் அந்த விருதை வாங்க வில்லை என்பது. இன்னொன்று, மிக நாட்களாக இருக்கும் சகோதர பொறாமை (sibling rivalry). இதற்கு முன் நிறைய பேட்டிகளில் இளையராஜாவும், தானும் (ஆமாம், தன்னையும் சேர்த்துக்கொள்வார்) எப்படி நிறைய பழைய பாடல்களிலிருந்து காப்பி அடித்து இருக்கிறோம் என்று விலாவரியாக விளக்கி இருக்கிறார். இந்த முறை, விருதை புறக்கணித்த இளையராஜாவை நேரடியாக சாடிய அவர், தாரை தப்பட்டை படத்தில் பாடல்கள் நன்றாகயில்லை, அதனால் பாடல்கள் பிரிவில் தேசிய விருது கொடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார். இவர் என்ன தான் ராஜாவை பற்றி இப்படி சொன்னாலும், ராஜா அளவிற்கு இவரால் வெற்றி பெறவில்லை என்ற இயலாமை இவர் பேச்சில் தெரிந்தது. முன்னளவிற்கு, ராஜாவால் ஹிட் பாடல்கள் கொடுக்க முடியவில்லை என்பதும் உண்மை தான். 80 களிலும், 90 களிலும் எந்த நல்ல பாடல்களை கேட்டாலும் அது இளையராஜவாகத்தான் இருக்க கூடும் என்ற எண்ணம் இருக்கும்.
அந்த சமயத்திலும், மற்ற இசையமைப்பாளர்கள் போட்ட சில மிக இனிய பாடல்கள் இளையராஜா போட்டது போலவே இருக்கும். நான் கூட வெகு காலம் இளையராஜா தான் இந்த பாடல்களை போட்டவர் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது இல்லை என்று தெரிய வந்த போது மிகவும் ஆச்சர்யம். சில தீவிர இளையராஜா ரசிகர்கள் கூட இந்த பாடல்களை இசை ஞானி தான் போட்டார் என்று பெருமிதம் கொள்வதை பார்த்திருக்கிறேன். டி.வி சேனல்களிலும் ராகதேவனின் பாடல்கள் என்று தலைப்பு கொடுத்து விட்டு மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை தெரியாமல் சேர்த்து விடுவார்கள். ஏனென்றால் அந்த பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
உதாரணத்திற்கு வாழ்வே மாயம் படத்தில் வரும் "நீல வான ஓடையில்" என்னும் பாடல் கங்கை அமரன் இசையமைத்தது. வேதம் புதிது படத்தில் வரும் "புத்தம் புது ஓலை வரும்" என்னும் பாடல் தேவேந்திரன் இசையமைத்தது. அண்ணா நகர் முதல் தெரு படத்தில் வரும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்னும் பாடலை சந்திர போஸ் இசையமைத்தார். அழகன் படத்தில் வரும் "ஜாதி மல்லி பூச்சரமே" - மரகதமணி. இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன. சரி, இசைஞானியின் பாடல்கள் அல்லாத, அதே காலக்கட்டத்தில் பாடல்களின் பட்டியல் ஒன்று எடுக்கலாம் என்று தோன்றியது. அப்படி பட்டியல் எடுத்ததை தரவிறக்கம் செய்து கேட்டதில் ஆஹா!! என்ன இனிமை!!! அந்த பட்டியலை இன்னொரு பதிவில் தருகிறேன்.
அப்படி சில பாடல்களை you tube இல் கேளுங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக