கண்ட கண்ட பொது இடங்களில் Mr. பொது ஜனம் உச்சா போறதை இந்த ஸ்வட்ச் பாரத் நிறுத்தி விட்டதா? காத்தாட வெளியே போறத விட்டுட்டு இந்த தண்ணி வராத கழிப்பறைக்கு யாரு போவாங்கன்னு பேசுகிற பொது ஜனத்தை இந்த திட்டம் மாற்றி விட்டதா? ஆனால் சூரியன் F.M இல், ஸ்வட்ச் பாரத் பற்றிய விளம்பரம் அடிக்கடி வருகிறது. அதுவும் ஹிந்தியில்!! எப்படி பட்ட காம்பினேஷன் பாருங்கள்!! விளம்பரம் கொடுப்பவர்க்கு இது தமிழ்நாடு, ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் யாருக்கும் புரியாது என்பது புரியவில்லை. அந்த விளம்பரத்தை போடும் சூரியன் அலைவரிசைக்கோ ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் தங்கள் கழகத்தின் தமிழ் காவலர் இமேஜ் கெட்டு போகுமோ என்று கவலையில்லை. எல்லாம் பணம் ஐயா பணம்...
எது எப்படியோ, இந்த திட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. ஆரம்பத்தில், வி.ஐ.பி என்று அறியப்படும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் கையில் துடைப்பத்தோடு காட்சி கொடுத்தனர். நம் கமல்ஹாசன் கூட அந்த மாதிரி பத்திரிக்கை புகைப்படங்களில் வந்தார். ஆனால் கையில் பக்கெட்டோடு ஏரியை சுத்தபடுத்துவதற்காக.
இப்படி இவர்கள் எல்லாம் கையில் துடைப்பத்தோடும் பக்கெட்டோடும் போட்டோவிற்கு போஸ் கொடுத்ததற்கு யாரும் துட்டு கொடுக்க வில்லையோ என்னவோ, ஸ்வட்ச் பாரத் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். நான் இருக்கும் சிங்கார சென்னையை பார்க்கிறேன். குப்பை கூளங்களும், சாலையில் சாக்கடை ஒழுகி ஓடுவதும், ரோட்டில் எச்சில் துப்புவதும், குப்பையை வீசுவதும் எதுவும் நிற்கவில்லை. இப்போது தான் ஸ்வட்ச் பாரத் திட்டம் பிகார், உத்தர் பிரதேஷ் போன்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது தமிழ்நாடு வருமென்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் நம்மூருக்கும் ஸ்வட்ச்பாரத் வரியென்று 0.5% வரி போட்டு விட்டார்கள்.
இந்த திட்டத்தின் படி 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பதை அடியோடு நிறுத்துவதே முதல் நோக்கமாகும். இதற்காக 12 கோடி கழிப்பறைகளை கிராமங்களில் கட்ட வேண்டும் என்ற மத்திய அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக டாட்டா, மகிந்திரா போன்ற நிறுவனங்களும், உலக வங்கியும் பொருளுதவி செய்கின்றன. முக்கியமாக பெண்கள் கழிப்பறை தேடி வீட்டிற்கு வெளியே செல்வது மோடி அவர்களுக்கு அதிக கவலை கொடுத்திருக்கிறது. மோடியின் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம். நான் கூட, சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் காந்தி, நேரு முதற்கொண்டு அப்துல் கலாம் வரை யாரும் சுத்தம் சுகாதாரம் பற்றி பெரிதாக சீர் திருத்தம் கொண்டு வரவில்லையே என்று யோசித்ததுண்டு. ஆனால் முதன்முறையாக தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்த மோடியை பாராட்டுகிறேன். அவர் கனவு நனவாக இன்னும் சில வருடம் காத்திருப்போம். கழிப்பறை மட்டுமில்லாமல் அதற்கும் மேலே பொது இடங்களில் சுகாதாரம் பற்றியும் அவரது திட்டம் அமையும் என்றும் எதிர்பார்ப்போம்.
அனால் நம் Mr. பொது ஜனமும் கொஞ்சம் மனசு வந்து பொது இடங்களில் உச்சா போறது, எச்சில் துப்புறது, லுங்கி கட்டிக்கொண்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து ரோட்டோரத்தில் உருண்டு கிடப்பது, வாங்கின பிளாஸ்டிக் கவரை கண்ட இடங்களில் போட்டு விடுவது போன்றவற்றை நிறுத்தவும் இந்த ஸ்வட்ச்பாரத் திட்டம் இப்போதே வகை செய்ய வேண்டும். இதற்காக பொறுத்திருந்து 2025 லேயா திட்டமிடமுடியும்? நம் நாட்டில் எதற்குமே கொஞ்சம் அதிகம் போராட வேண்டும் போலிருக்கிறது. சுதந்திரம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். அது போல சுகாதாரம் வாங்கவும் கஷ்டப்பட வேண்டும் போலிருக்கிறது. முன்னது வெள்ளைக்காரனிடமிருந்து வாங்க போராட வேண்டியிருந்தது. பின்னது, நம்மிடமிருந்து நாமே வாங்க போராட வேண்டியிருக்கிறது. பொதுநலம் நம் சுயநலமாக இருக்கட்டுமே !!!
சரி!! ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ? இன்னும் ஒரு வருடம் கழித்து பார்ப்போம்.
சரி!! ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ? இன்னும் ஒரு வருடம் கழித்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக