ஞாயிறு, மே 15, 2016

நம் மீது திணிக்க படும் தேர்தல் அராஜகங்கள்

தேர்தல் முடியும் வரை தேர்தல் பற்றிய பதிவுகள் தாங்க... இந்த தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் அராஜகங்களைப் பற்றி யோசிக்கையில் முதல் அராஜகமாய் மனதில் தோன்றுவது இந்த இரு கட்சிகளுக்கே மாற்றி மாற்றி ஓட்டு போட வேண்டி இருக்கிறதே அது தான்.  மூன்றாவது மாற்றாக ஒரு நல்ல கட்சி இல்லாதது  நம் இப்போதைய தலைவிதி.  

இரண்டாவது அராஜகம் பணம் கொடுத்து ஓட்டு  வாங்கி விடலாம் என்று கட்சிகள் நினைப்பது.  பணம் கொடுப்பதை  நடைமுறையே படுத்தி விட்டார்கள்.  570 கோடி பணத்தை திருப்பூர் அருகே கைப்பற்றி அதை ஏதோ வங்கி பணம் என்று உட்டாலக்கடி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  இரவு கரண்ட் கட் ஆகும்.  அப்போது உங்கள் வீட்டு வாசல் அருகே பூனை மியாவ் மியாவ் என்று   கத்தும்.  உடனே கேட் அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளுங்கள் போன்ற பல செட் அப் உண்டு.   

மூன்றாவது அராஜகம் இலவசங்களை அள்ளி விடுறது!!! இலவசங்கள் கொடுப்பதற்கு எங்கிருந்து பணம் வரும் என்ற கேள்விக்கெல்லாம் பதில் இன்னும் யோசிக்கவில்லை.  பிளஸ் 2 பரீட்சைக்கு வினாத்தாள் தயாரிப்பது மாதிரி தேர்தல் அறிக்கையில் யோசித்து யோசித்து மண்டையை பிய்த்து Grinder கொடுக்கலாமா? இல்லை Fridge கொடுக்கலாமா, அவன் என்ன கொடுக்கிறான் நாம் என்ன கொடுக்கலாம் என்று போட்டா போட்டி போடுகிறார்கள்.  முதல்ல எல்லோருக்கும் வேலை வாய்ப்பை கொடுங்கப்பா!!

நான்காவது அராஜகம் நடக்க சாத்தியம் இல்லாத அல்லது கடினமான வாக்குறிதிகளை கொடுப்பது.  லோகாயுக்தா அமைப்போம், நதிகளை இணைப்போம், கூவத்தை சுத்தப்படுத்துவோம்,  ஏரிகளை தூர் வாருவோம், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் மெட்ரோ ரயில் விடுவோம் என்று வாயிலேயே ரயில் விடுவது.  பிறகு வெற்றி பெற்று விட்டால் இந்த திட்டங்களுக்கு பெரிய நிதி ஒதுக்கி அதை ஸ்வாகா பண்ணிவிடுவது.  பின் இந்த திட்டங்கள் அடுத்த தேர்தல் அறிக்கையில் தொடரும்.  எப்படின்னா, டிவி சீரியலுக்கு கூட முற்றும் உண்டு.  ஆனால் இந்த திட்டங்களுக்கு எல்லாம் முடிவே இல்லை.

ஐந்தாவது அராஜகம் கடந்த ஐந்து வருடங்கள் தொகுதியில் தலையையே காட்டாமல் இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் தலைக்காட்டுவது.    பழைய படங்களில் வருவது மாதிரி முகத்தில் மரு வைத்து போனாலும் மக்கள் அடையாளம் கண்டு பின்னி எடுத்துவிடுவார்கள் என்று இப்போது பயந்து தொகுதி மாற்றி நிற்கிறார்கள்.  

இப்படி அராஜகங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதையெல்லாம் நாம் சும்மா ரஸ்க்கு சாப்பிடுவதை போன்று எடுத்துக்கொண்டு நம் தின வேலையை தொடர்ந்து வருகிறோம். இவற்றை எதிர்த்தால் நம்மை அரசாங்கம் நாம் கேள்வியே படாத வகைகளில் துன்புறுத்தும்.  அது ஒரு பெரிய அராஜகம்.  சரி! நாம் இந்த முறை ஓட்டு போட்டு இந்த அராஜகங்களை ஜெயிக்கும் கட்சி செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக!!
நம்பிக்கை ஒன்று தான் இப்போது நம்மிடம் உள்ள ஒரே நல்ல விஷயம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக