இந்த தேர்தல் முடிவு ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்தி உள்ளது. எத்தனை பேர், எத்தனை ஊடகங்கள், எத்தனை கட்சிகள் இதை கண்டுக் கொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. அது என்னவென்றால், அ.தி.மு.க, தி.மு.க தவிர மற்ற கட்சிகளால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பதே!!! விஜயகாந்த், அன்புமணி, வை.கோ, சீமான், திருமாவளவன், பி.ஜே.பி யை மக்கள் ஏன் நிராகரித்து விட்டார்கள்?
திராவிட கட்சி உருவான போதும், தி.மு.க உருவான போதும், பிறகு அ.தி.மு.க உதயமான போதும் அந்த கட்சிகள் கொள்கை ரீதியாக மக்களிடம் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தி இருந்தன. ஹிந்தி எதிர்ப்பு, சமுதாய நலம் சார்ந்த பிரசார கூட்டங்கள், சீர்திருத்த நாடகங்கள், சினிமா படங்கள் போன்ற விஷயங்கள் மூலமாக மக்களை தங்கள் கட்சியின் உண்மையான தொண்டர்களாக்கி வைத்திருந்தன. வெகு நாட்களுக்கு இந்த கொள்கைகள் மூலம் தங்கள் வோட்டு வங்கியை இவர்கள் தக்க வைத்திருந்தார்கள். இந்த உண்மையான தொண்டர்களும் அவர்களுடைய குடும்பமும் எப்போதும் அவர்களுடைய அபிமான கட்சிக்கே ஒட்டு போடுவார்கள். ஆனால் ஒரு கால கட்டத்துக்கு பின், கலைஞர் சர்க்காரியா கமிஷன் ஊழல் வழக்கில் சிக்கிய காலத்துக்கு பின், தி.மு.க வும் , அ.தி.மு.க வும் மெல்ல தங்கள் கொள்கைகளில் இருந்து விலகி பணம் சேர்ப்பதையே முழு நேர கொள்கையாக்கி கொண்டன. இந்த கொள்கை படி தேர்தலின் போது லட்சம் லட்சமாக செலவு செய்வது. ஜெயித்த பின் அதையே கோடி கோடியாக அறுவடை செய்வது என்பது தொடர்ந்து வருகிறது. இன்று வரை இந்த இரண்டு கட்சிகளும் இதைத் தான் செய்து வருகிறது. மக்களும் வேறு வழியே இல்லாமல் இவற்றுக்கு தான் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள்.
இதற்கு பிறகு வந்த விஜயகாந்த், அன்புமணி, சீமான், வை.கோ. போன்றோர்கள் எந்த ஒரு கொள்கையும் இல்லாமலும் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால், முன்பே கெட்டு போய் விட்ட தி.மு.க, அ.தி.மு.க வை பார்த்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே தங்கள் கொள்கையாக கற்றுக் கொண்டுவிட்டார்கள். இவர்களது தேர்தல் அணுகுமுறை தேர்தலின் போது லட்சம் லட்சமாக செலவு செய்வது, பின்பு ஜெயித்தால் அதை சம்பாதித்து கொள்வது. இதை அடைவதற்கு தரம் கெட்டு போய் கூட்டணி வைத்துக்கொள்வார்கள். தமிழ் நாட்டுக்கு தொழிற்சாலைகள் கொண்டு வருவது, லோகாயுக்தா கொண்டு வருவது, ஊழலை ஒழிப்பது இவையெல்லாம் இந்த புது கட்சிகளின் கொள்கைகளில் இல்லை. ஏற்கனவே, தி.மு.க, அ.தி.மு.க வின் இந்த மோசமான கொள்கைகளினால் கடுப்பில் இருக்கும் மக்கள், இதே கொள்கைகளையே புது கட்சிகளும் கடைபிடிப்பதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்?.
எடுத்த எடுப்பிலேயே, கட்சி ஆரம்பித்தவுடன் பணம் மட்டுமே குறிகோளாய் அரசியல் பண்ணும் இந்த கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். ஆனால் இந்த கட்சி தலைவர்களுக்கு, தாங்கள் ஏன் தோற்றோம் என்று தெரியுமோ தெரியாதோ? புதிதாய் உருவாகும் கட்சிகள் தங்கள் கொள்கைகளினால் மக்களை கவர வேண்டும். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கொள்கை வகுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும். பிறகு இவர்களுக்கு நல்ல வாக்கு வங்கியும், நிரந்திர தொண்டர்களும் கிடைப்பார்கள். ஓரளவுக்கு, அரவிந்த் கேஜ்ரிவால் இந்த அணுகுமுறையை கொண்டு வெற்றியும் பெற்று விட்டார். புதிய கட்சிகள் யோசிப்பார்களா? இந்த தேர்தல் முடிவு எனக்கு இதை தான் உணர்த்தியது. கொள்கை இல்லாத கெட்ட எண்ணம் கொண்ட கட்சிகளை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். நல்லதொரு மூன்றாவது கட்சி வந்தால், கொள்கை மாறிய அ.தி.மு.க, தி.மு.க வையும் நிராகரித்து விடுவார்கள். அந்த காலமும் வராமல் போகாது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக