திங்கள், மே 30, 2016

இளையராஜா போடாத இனிய பாடல்கள்!!!

சில நாட்களுக்கு முன் கங்கை அமரனின் பேட்டி ஒன்றை பார்த்தேன். இளையராஜா, தாரை தப்பட்டை படத்திற்காக பின்னணி இசை பிரிவில் தனக்கு கொடுத்த தேசிய விருதை பெற்றுக் கொள்ளவில்லை  என்பதை பற்றி, கங்கை அமரன் வேதனையோடு பேட்டி கொடுத்தார்.  அந்த வேதனைக்கு  முக்கியமாக இரு காரணங்கள் தெரிந்தன.  ஒன்று, தான் விருது தேர்வுக் குழுவில் இருந்தும் அண்ணன் அந்த விருதை வாங்க வில்லை என்பது.  இன்னொன்று, மிக நாட்களாக இருக்கும் சகோதர பொறாமை (sibling rivalry).  இதற்கு முன் நிறைய பேட்டிகளில் இளையராஜாவும், தானும் (ஆமாம், தன்னையும் சேர்த்துக்கொள்வார்) எப்படி நிறைய பழைய பாடல்களிலிருந்து காப்பி அடித்து இருக்கிறோம் என்று விலாவரியாக விளக்கி இருக்கிறார். இந்த முறை, விருதை புறக்கணித்த இளையராஜாவை நேரடியாக சாடிய அவர், தாரை தப்பட்டை படத்தில் பாடல்கள் நன்றாகயில்லை, அதனால் பாடல்கள் பிரிவில் தேசிய விருது கொடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார்.   இவர் என்ன தான் ராஜாவை பற்றி இப்படி சொன்னாலும், ராஜா அளவிற்கு இவரால் வெற்றி பெறவில்லை என்ற இயலாமை இவர் பேச்சில் தெரிந்தது. முன்னளவிற்கு, ராஜாவால் ஹிட் பாடல்கள் கொடுக்க முடியவில்லை என்பதும்  உண்மை தான்.  80 களிலும், 90 களிலும் எந்த நல்ல பாடல்களை கேட்டாலும் அது இளையராஜவாகத்தான் இருக்க கூடும் என்ற எண்ணம் இருக்கும். 

Image result for chandrabose music directorImage result for shankar ganeshImage result for maragathamaniImage result for hamsalekha

அந்த சமயத்திலும், மற்ற இசையமைப்பாளர்கள் போட்ட சில மிக இனிய பாடல்கள்  இளையராஜா போட்டது போலவே இருக்கும்.  நான் கூட வெகு காலம் இளையராஜா தான் இந்த பாடல்களை போட்டவர் என்று நினைத்து கொண்டிருந்தேன்.  ஆனால் அது இல்லை என்று தெரிய வந்த போது மிகவும் ஆச்சர்யம்.  சில தீவிர இளையராஜா ரசிகர்கள் கூட இந்த பாடல்களை இசை ஞானி தான் போட்டார் என்று பெருமிதம் கொள்வதை பார்த்திருக்கிறேன்.   டி.வி சேனல்களிலும் ராகதேவனின் பாடல்கள் என்று தலைப்பு கொடுத்து விட்டு மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை தெரியாமல் சேர்த்து விடுவார்கள். ஏனென்றால் அந்த பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

உதாரணத்திற்கு வாழ்வே மாயம் படத்தில் வரும் "நீல வான ஓடையில்" என்னும் பாடல் கங்கை அமரன் இசையமைத்தது.  வேதம் புதிது படத்தில் வரும் "புத்தம் புது ஓலை வரும்" என்னும் பாடல் தேவேந்திரன் இசையமைத்தது.  அண்ணா நகர் முதல் தெரு படத்தில் வரும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்னும் பாடலை சந்திர போஸ் இசையமைத்தார்.  அழகன் படத்தில் வரும் "ஜாதி மல்லி பூச்சரமே" - மரகதமணி.  இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.  சரி, இசைஞானியின் பாடல்கள் அல்லாத,  அதே காலக்கட்டத்தில்     பாடல்களின் பட்டியல் ஒன்று எடுக்கலாம் என்று தோன்றியது.  அப்படி பட்டியல் எடுத்ததை தரவிறக்கம் செய்து கேட்டதில் ஆஹா!! என்ன இனிமை!!!  அந்த பட்டியலை இன்னொரு பதிவில் தருகிறேன். 

அப்படி சில பாடல்களை  you tube  இல் கேளுங்களேன்.










வியாழன், மே 19, 2016

தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?

இந்த தேர்தல் முடிவு ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்தி உள்ளது. எத்தனை பேர், எத்தனை ஊடகங்கள், எத்தனை கட்சிகள் இதை கண்டுக் கொண்டுள்ளார்கள்  என்று தெரியவில்லை. அது என்னவென்றால், அ.தி.மு.க, தி.மு.க தவிர மற்ற கட்சிகளால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பதே!!! விஜயகாந்த், அன்புமணி, வை.கோ, சீமான், திருமாவளவன், பி.ஜே.பி யை மக்கள் ஏன் நிராகரித்து விட்டார்கள்?

Image result for periyar anna kamarajImage result for periyar anna kamaraj

திராவிட கட்சி உருவான போதும், தி.மு.க உருவான போதும், பிறகு அ.தி.மு.க உதயமான போதும் அந்த கட்சிகள் கொள்கை ரீதியாக மக்களிடம் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தி இருந்தன.  ஹிந்தி எதிர்ப்பு, சமுதாய நலம் சார்ந்த பிரசார கூட்டங்கள், சீர்திருத்த நாடகங்கள், சினிமா படங்கள் போன்ற விஷயங்கள் மூலமாக மக்களை தங்கள் கட்சியின் உண்மையான தொண்டர்களாக்கி வைத்திருந்தன.  வெகு நாட்களுக்கு இந்த கொள்கைகள் மூலம்  தங்கள் வோட்டு வங்கியை இவர்கள் தக்க வைத்திருந்தார்கள்.  இந்த உண்மையான தொண்டர்களும் அவர்களுடைய குடும்பமும் எப்போதும் அவர்களுடைய அபிமான கட்சிக்கே ஒட்டு போடுவார்கள்.   ஆனால்  ஒரு கால கட்டத்துக்கு பின், கலைஞர் சர்க்காரியா கமிஷன் ஊழல் வழக்கில் சிக்கிய காலத்துக்கு பின், தி.மு.க வும் , அ.தி.மு.க வும் மெல்ல தங்கள் கொள்கைகளில் இருந்து விலகி பணம் சேர்ப்பதையே முழு நேர கொள்கையாக்கி கொண்டன.  இந்த கொள்கை படி தேர்தலின் போது லட்சம் லட்சமாக செலவு செய்வது.  ஜெயித்த பின் அதையே கோடி கோடியாக அறுவடை செய்வது என்பது தொடர்ந்து வருகிறது.   இன்று வரை இந்த இரண்டு கட்சிகளும் இதைத் தான் செய்து வருகிறது.  மக்களும் வேறு வழியே இல்லாமல் இவற்றுக்கு தான் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள்.

Image result for vijayakanth vaiko anbumani seeman thirumavalavanImage result for seemanImage result for anbumani ramadoss

இதற்கு பிறகு வந்த விஜயகாந்த், அன்புமணி, சீமான், வை.கோ. போன்றோர்கள் எந்த ஒரு கொள்கையும் இல்லாமலும் கட்சி ஆரம்பித்தார்கள்.   ஆனால், முன்பே கெட்டு போய் விட்ட தி.மு.க, அ.தி.மு.க வை பார்த்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே தங்கள் கொள்கையாக கற்றுக் கொண்டுவிட்டார்கள்.  இவர்களது தேர்தல் அணுகுமுறை தேர்தலின் போது லட்சம் லட்சமாக செலவு செய்வது, பின்பு ஜெயித்தால் அதை சம்பாதித்து கொள்வது. இதை அடைவதற்கு தரம் கெட்டு போய் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்.  தமிழ் நாட்டுக்கு தொழிற்சாலைகள் கொண்டு வருவது, லோகாயுக்தா கொண்டு வருவது, ஊழலை ஒழிப்பது இவையெல்லாம் இந்த புது கட்சிகளின் கொள்கைகளில் இல்லை.  ஏற்கனவே, தி.மு.க, அ.தி.மு.க வின் இந்த மோசமான கொள்கைகளினால் கடுப்பில் இருக்கும் மக்கள், இதே கொள்கைகளையே புது கட்சிகளும் கடைபிடிப்பதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்?.

எடுத்த எடுப்பிலேயே, கட்சி  ஆரம்பித்தவுடன் பணம் மட்டுமே குறிகோளாய் அரசியல் பண்ணும் இந்த கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.  ஆனால் இந்த கட்சி தலைவர்களுக்கு, தாங்கள் ஏன் தோற்றோம் என்று தெரியுமோ தெரியாதோ? புதிதாய் உருவாகும் கட்சிகள் தங்கள் கொள்கைகளினால் மக்களை கவர வேண்டும். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கொள்கை வகுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்.  பிறகு இவர்களுக்கு நல்ல வாக்கு வங்கியும், நிரந்திர தொண்டர்களும் கிடைப்பார்கள்.  ஓரளவுக்கு, அரவிந்த் கேஜ்ரிவால் இந்த அணுகுமுறையை கொண்டு வெற்றியும் பெற்று விட்டார். புதிய கட்சிகள் யோசிப்பார்களா? இந்த தேர்தல் முடிவு எனக்கு இதை தான் உணர்த்தியது. கொள்கை இல்லாத கெட்ட எண்ணம் கொண்ட கட்சிகளை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.  நல்லதொரு மூன்றாவது கட்சி வந்தால், கொள்கை மாறிய அ.தி.மு.க, தி.மு.க வையும் நிராகரித்து விடுவார்கள்.  அந்த காலமும் வராமல் போகாது!!!

ஞாயிறு, மே 15, 2016

நம் மீது திணிக்க படும் தேர்தல் அராஜகங்கள்

தேர்தல் முடியும் வரை தேர்தல் பற்றிய பதிவுகள் தாங்க... இந்த தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் அராஜகங்களைப் பற்றி யோசிக்கையில் முதல் அராஜகமாய் மனதில் தோன்றுவது இந்த இரு கட்சிகளுக்கே மாற்றி மாற்றி ஓட்டு போட வேண்டி இருக்கிறதே அது தான்.  மூன்றாவது மாற்றாக ஒரு நல்ல கட்சி இல்லாதது  நம் இப்போதைய தலைவிதி.  

இரண்டாவது அராஜகம் பணம் கொடுத்து ஓட்டு  வாங்கி விடலாம் என்று கட்சிகள் நினைப்பது.  பணம் கொடுப்பதை  நடைமுறையே படுத்தி விட்டார்கள்.  570 கோடி பணத்தை திருப்பூர் அருகே கைப்பற்றி அதை ஏதோ வங்கி பணம் என்று உட்டாலக்கடி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  இரவு கரண்ட் கட் ஆகும்.  அப்போது உங்கள் வீட்டு வாசல் அருகே பூனை மியாவ் மியாவ் என்று   கத்தும்.  உடனே கேட் அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளுங்கள் போன்ற பல செட் அப் உண்டு.   

மூன்றாவது அராஜகம் இலவசங்களை அள்ளி விடுறது!!! இலவசங்கள் கொடுப்பதற்கு எங்கிருந்து பணம் வரும் என்ற கேள்விக்கெல்லாம் பதில் இன்னும் யோசிக்கவில்லை.  பிளஸ் 2 பரீட்சைக்கு வினாத்தாள் தயாரிப்பது மாதிரி தேர்தல் அறிக்கையில் யோசித்து யோசித்து மண்டையை பிய்த்து Grinder கொடுக்கலாமா? இல்லை Fridge கொடுக்கலாமா, அவன் என்ன கொடுக்கிறான் நாம் என்ன கொடுக்கலாம் என்று போட்டா போட்டி போடுகிறார்கள்.  முதல்ல எல்லோருக்கும் வேலை வாய்ப்பை கொடுங்கப்பா!!

நான்காவது அராஜகம் நடக்க சாத்தியம் இல்லாத அல்லது கடினமான வாக்குறிதிகளை கொடுப்பது.  லோகாயுக்தா அமைப்போம், நதிகளை இணைப்போம், கூவத்தை சுத்தப்படுத்துவோம்,  ஏரிகளை தூர் வாருவோம், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் மெட்ரோ ரயில் விடுவோம் என்று வாயிலேயே ரயில் விடுவது.  பிறகு வெற்றி பெற்று விட்டால் இந்த திட்டங்களுக்கு பெரிய நிதி ஒதுக்கி அதை ஸ்வாகா பண்ணிவிடுவது.  பின் இந்த திட்டங்கள் அடுத்த தேர்தல் அறிக்கையில் தொடரும்.  எப்படின்னா, டிவி சீரியலுக்கு கூட முற்றும் உண்டு.  ஆனால் இந்த திட்டங்களுக்கு எல்லாம் முடிவே இல்லை.

ஐந்தாவது அராஜகம் கடந்த ஐந்து வருடங்கள் தொகுதியில் தலையையே காட்டாமல் இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் தலைக்காட்டுவது.    பழைய படங்களில் வருவது மாதிரி முகத்தில் மரு வைத்து போனாலும் மக்கள் அடையாளம் கண்டு பின்னி எடுத்துவிடுவார்கள் என்று இப்போது பயந்து தொகுதி மாற்றி நிற்கிறார்கள்.  

இப்படி அராஜகங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதையெல்லாம் நாம் சும்மா ரஸ்க்கு சாப்பிடுவதை போன்று எடுத்துக்கொண்டு நம் தின வேலையை தொடர்ந்து வருகிறோம். இவற்றை எதிர்த்தால் நம்மை அரசாங்கம் நாம் கேள்வியே படாத வகைகளில் துன்புறுத்தும்.  அது ஒரு பெரிய அராஜகம்.  சரி! நாம் இந்த முறை ஓட்டு போட்டு இந்த அராஜகங்களை ஜெயிக்கும் கட்சி செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக!!
நம்பிக்கை ஒன்று தான் இப்போது நம்மிடம் உள்ள ஒரே நல்ல விஷயம்.

 

சனி, மே 14, 2016

தேர்தல் நிமிடங்கள்!!!

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது.  இந்நேரம் மக்கள் தங்கள் மனதில் யாருக்கு ஒட்டு போட வேண்டுமென்று முடிவே செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இன்று முழுவதும்  கட்சி தொண்டர்கள் சைக்கிளில் ஒரு கொடியை கட்டிக்கொண்டு அங்கிட்டும் இங்கிட்டுமாய் தாறுமாறாய் அலைந்து கொண்டிருந்தார்கள்.  காலையிலேயே இரண்டு ஆட்டோ எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு கட்சி பாடல்களை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாம் தேவா போட்ட உல்ட்டா பாடல்களின் உல்ட்டா.  வீட்டு காம்பௌண்ட் சுவருக்குள் கலர் கலராய் விளம்பர பேப்பர்கள் வந்து விழுந்தன.  பொறுக்கி எடுத்து பழைய பேப்பர் கட்டுக்குள் வைத்து விட்டோம்.  சில பேப்பர்களில் எங்கள் பேருக்கே கடிதம் போன்று அச்சிடப்பட்டிருந்ததை கண்டு கொஞ்சம் திகிலாய் வேறு இருந்தது.



இவ்வளவு கூத்திலும் எங்கள் சாலையில் எந்த வேட்பாளரும் ஓட்டு கேட்க வந்ததாய் தெரியவில்லை. ஜெயித்து விடுவோம் என்ற Confidence லெவல் எக்குத்தப்பாய் இருக்கிறது போல... அதே போல் பணம் கொடுப்பது மாதிரியும் தெரிய வில்லை. இது வரை வந்த கருத்து கணிப்பையெல்லாம் பார்த்தால் எந்த கருத்து கணிப்பு சரியான கருத்து கணிப்பு என்று இன்னொரு கருத்து கணிப்பு வைக்க வேண்டும் போலிருக்கிறது.  அட போங்கப்பா நீங்களும் உங்கள் கருத்து கணிப்புமென்று இறுதியில் இவை எல்லாம் போரடித்து விட்டது.  இன்றைய தினம் பொதுஜனம் என்ன செய்து கொண்டு இருந்தது என்றறிய போன் செய்து நண்பர்களை விசாரிக்கையில் பெரும்பாலும் எல்லோரும் சினிமாவுக்கு போய் இருந்தார்கள்.  தேர்தல் புண்ணியத்தில் மூன்று நாள் லீவ் கிடைத்ததில் அப்படி ஒரு நிம்மதி. எல்லோரும் ஆள் ஆளுக்கு இந்த கட்சிக்கு ஓட்டு போடு இவங்களுக்கு போடாதே என்று உபதேசம் செய்ய நானும் பதில் உபதேசம் செய்து வைத்தேன்.  நான் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் முடிவு செய்ய வில்லை.  3G ஊழலும், சென்னை வெள்ளமும் மறக்க வில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் சாலையின் குண்டு குழிகளும், குப்பைகளும் அப்படியே தான் இருக்கிறது. இதில் யார் வந்தால் என்ன?  ஆனாலும் தமிழக மக்கள் தங்கள் பரிதாபத்துக்குரிய தலைவிதியை நன்றாக உணர்ந்து வைத்துள்ளனர்.  அதன்படி மாறி மாறி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்பது என் ஊகம்.

பல வருடங்களுக்கு முன்பெல்லாம்,  டி.வியில் ஓட்டு எண்ணிக்கையின் போது நிறைய படங்கள் போடுவார்கள்.  நடு நடுவே ஓட்டு எண்ணிக்கை விபரம் சொல்லுவார்கள்.  மிகவும் விறு விறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.   சில பெரியவர்கள் அலுவலகத்துக்கு லீவ் கூட  போட்டு விடுவார்கள்.   ஆனால் இப்போது காலை பதினோரு மணியளவிலேயே முடிவு தெரிந்து விடுவதால் விறுவிறுப்பு மிஸ்ஸிங்.  ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் எல்லாம் அமைதியாக வரிசையில் நின்று ஓட்டு போடுவதை  பத்திரிக்கைகள்  அடுத்த நாள் படம் போட, அதை பார்த்து அவர்களின் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சி கொள்வார்கள்.  தேர்தல் முடிவுக்கு பின்  அம்மாவின் சொத்து குவிப்பு வழக்கு என்னாகும் என்ற விறுவிறுப்பு எங்கள் ஆபீஸ் அரட்டை கச்சேரியில் தொற்றிக் கொள்ளும்.  இப்படியே ஊழலும், வழக்குமாய் பேசி பேசி அடுத்த தேர்தல் வந்து விடும்.  அம்மாவும், ஐயாக்களும் மட்டும் மாறவே மாட்டார்கள்.


  


வெள்ளி, மே 06, 2016

ஹலோ! முஜே ஹிந்தி நஹி ஆத்தா ஹை!!!

அலுவலகத்தில் அவ்வப்போது செல் போனில் சில தொந்தரவு  கால்கள் வரும். பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும் அனுபவம் தான்.  சில போன் கால்கள் வட இந்தியாவில் இருந்து வரும்.   டெல்லி, நொய்டா, லக்னா, பட்னா இது மாதிரி. இவர்களுக்கு தாம் சென்னையில் உள்ள ஆளுக்கு தான் போன் பண்றோமா என்பதே தெரியாது.  போன் பண்ணியவுடனே ஹிந்தியில் தான் ஆரம்பிப்பார்கள்.  சம்பாஷனை இப்படி போகும்.

எதிர் முனை:  ஹலோ, ஆப் ஷேர் மார்கெட் மே Trading கர்தே ஹே க்யா ? (நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் trading செய்கிறீர்களா?) இதற்கு,

நான்:  ஆப் அங்க்ரேசி மே பாத் கீஜியே.  ஹம்கோ ஹிந்தி நஹி ஆத்தா ஹை   அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். எனக்கு ஹிந்தி தெரியாது என்று ஹிந்தியிலேயே சொல்லுவேன். 

எதிர்முனையும் விடாமல்:  அப்கோ தோ ஹிந்தி அச்சி தரப் ஆத்தா  ஹை என்பார்கள் (உங்களக்கு தான் ஹிந்தி நன்றாக பேச வருகிறதே!!).  எனக்கு ஹிந்தி தெரியாது என்பதை ஹிந்தியில் தான் சொல்வேன்.  அவர்களை கொஞ்சம் கடிக்க வேண்டும் என்பதற்காக.  முதலில் அலுவலக நேரத்தில் போன் செய்வது சரியில்லை.  பிறகு தமிழ் மக்களிடம் ஹிந்தியில் பேசுவதும் சரியில்லை என்பதால். 

விஷயம் என்னவென்றால் வட இந்தியாவில் நிறைய பேருக்கு சென்னை எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.  அப்புறம் திருச்சி, தஞ்சாவூர் என்றால் அது என்ன என்பதெல்லாம் சுத்தம்.  அவர்களுக்கு தென் இந்தியா முழுதும் மெட்ராஸ் தான்.  இங்கு எல்லோரும் மதராசி தான்.   சில வட இந்தியர்கள் மதராசிகள் என்றால் கருப்பாக இருப்பார்கள் என்று வேறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் விமானத்தில் மதுரை போயிருக்கும் போது, விமானத்தில் மருந்துக்கு கூட தமிழில் அறிவுரைகள் கொடுக்க வில்லை.  எல்லாம் ஹிந்தியும் ஆங்கிலமும் தான். மத்தியில் B.J.P அரசு சேமிப்பு திட்டங்களுக்கும் இன்னும் பல மக்கள் நல திட்டங்களுக்கும் ஹிந்தி பெயர்களையும், சமஸ்க்ரத பெயர்களையும் வைக்கிறது.  ஒன்றுமே புரிவதில்லை.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாட்டில் ஹிந்தியை கொண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.


வட இந்திய அரசியல்வாதிகளுக்கும், ஹிந்தி பண்டிதர்களுக்கும் கேரளா, கர்நாடகம் மாதிரி தமிழ் நாட்டுலேயும் ஹிந்தி பேசும் மொழியாக்க வேண்டும் என்று பெரும் ஆசை உண்டு.  ஆனால் நம் பய மக்கள் தான் இன்னும் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா என்ற லெவெலேயே இருக்கிறார்கள்.  ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.  நாம் தமிழ் நாட்டில் இருந்துக் கொண்டு ஹிந்தி கற்பதில்லை.  மும்பையோ, டெல்லியிலேயோ வாழ போனால் ஒரு மாதத்தில் ஹிந்தி கற்றுக் கொண்டு விடுவோம். நம் ஷாப்பிங் மால்களில் வேலை செய்யும் பிற மாநிலத்துவரை கவனியுங்களேன்.  அஞ்சு வருஷம் ஆனாலும் ஆனா, ஊனா தெரியாது.

தேசிய அளவில் ஹிந்தியும், மாநில அளவில் தாய் மொழியும்  இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்கிறார்கள்.  நாம் தேசிய அளவில் ஆங்கிலம் இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைக்கிறோம்.  தமிழும் ஆங்கிலமும் கற்றுக் கொண்டு விட்டால் அடுத்ததாக நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம்.  அப்போது தான், வட இந்தியர் நம்மிடம் ஹிந்தியில் பேசும் போது, முஜே ஹிந்தி நஹி ஆத்தா ஹை என்று தெளிவாக பதில் சொல்ல முடியும்.