முகமது அலி ஒரு குத்து சண்டை வீரர். அவருக்கு லைலா என்றொரு பெண் இருக்கிறார். அவரும் ஒரு குத்து சண்டை வீரர் தான். முகமது அலி பார்கின்சன் நோயால் அவதி பட்டார். இவ்வளவு தான் முகமது அலியை பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர் சமிபத்தில் இறந்ததும் செய்தி தாள்களிலும், தொலைகாட்சியிலும், வலை பக்கங்களிலும் வந்த இரங்கல்களையும், முக்கியத்துவத்தையும் கவனித்தால் ஒரு விளையாட்டு வீரர் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார் என்று ஆச்சர்யம் வந்தது.
முகமது அலி இறந்தது செய்தி தாள்களில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தி. பி.பி.சி வலை பக்கத்தில் கூட பெரும்பாலும் இந்த செய்தியை தான் காண முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். நம்ம ஊர் செய்தி தாள்களில் கூட முகமது அலி, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை பார்க்க முடிந்தது. கருணாநிதியே தனது இரங்கல் செய்தியில், அவரின் வீட்டிற்கும், அறிவாலயத்திருக்கும் 1990 இல் முகமது அலி சென்றிருப்பதை குறிப்பிட்டிருந்ததை கண்டவுடன் ஒரு குறுகுறுப்பே வந்து விட்டது.
ஒரு குத்து சண்டை வீரருக்கு இவ்வளவு பேரும், புகழும் எப்படி கிடைத்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது மைக் டைசன் என்னும் குத்து சண்டை வீரர் புகழ் பெற்றிருந்தார். இவர் நாக் - அவுட்டுக்கு பேர் போனவர். இவரது சண்டையை டி.வியில் நேரடியாக ஒளிப்பரப்பினார்கள். அதை பார்த்து விட்டு அடுத்த நாள் பள்ளிகூடத்தில் ஆஹா ஓஹோ என்று பேசியது ஞாபகம் இருக்கிறது. ஆனால் இது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான். பிறகு மைக் டைசனொ அல்லது குத்து சண்டையோ தலை தூக்கவேயில்லை. குத்து சண்டையை விட நாங்கள் டென்னிசை அதிகம் ரசித்திருக்கிறோம். இவான் லென்டில், போரிஸ் பெக்கர், ஆண்ட்ரிவ் அகாசி போன்றவர்கள் அப்போது டென்னிஸில் மிகவும் பிரபலம். ஆனால் இவர்கள் யாரும் முகமது அலி அவர்களுக்கு புகழ் வாய்ந்தவர்களா என்று தெரியவில்லை. சச்சின் டெண்டுல்கர் எல்லாம் இந்தியா போன்ற கிரிக்கெட் பைத்தியம் உள்ள நாட்டில் தான் பிரபலம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கால்பந்து தான் மிகவும் பிரபலம். இப்படி இருக்க, முகமது அலியை பற்றி வலை பக்கங்களில் அலசியதில் கிடைத்த தகவல்கள்:
- அமெரிக்காவில் பிறந்த கருப்பர் இனத்தை சேர்ந்த முகமது அலி பிறப்பால் கிறிஸ்தவர். பின்பு முஸ்லிமாக மாறியவர்.
- உலகத்திலேயே முதல் முறையாக ஹெவி வெயிட் பிரிவில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அதுவும் வெவேறு காலக்கட்டத்தில் வென்றார்.
- முகமது அலி எளிமையாக பழக கூடியவர். பெண்களுக்கு பிடித்தமானவர். நான்கு பெண்களை மணந்து ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தை.
- வியட்நாம் போரை எதிர்த்தவர். இந்த காரணத்தால் தனது பட்டத்தை இழக்க வேண்டியிருந்தது. கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
- பார்கின்சன் நோயால் பாதிக்க பட்டிருந்தாலும் பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சமுக பணியாற்றியிருக்கிறார்.
- பத்திரிக்கைகளுக்கு சுவாரசியமாக பேட்டி கொடுப்பார். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
இப்படியும், மற்றும் அவர் விளையாடி ஜெயித்த போட்டிகளை பற்றியும் தகவல்கள் கிடைத்தன. மேலும், இவரை விட குத்து சண்டை போட்டியில் வலுவானவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிந்தது. இதை எல்லாம் பார்த்த பிறகு, உண்மையை சொல்ல வேண்டுமானால் எதனால் இவர் இத்தனை பிரபலமானார் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. என்ன தான் சாதித்தாலும் சிலர் மட்டும் தான் பிரபலமாக வேண்டி பிறந்திருக்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது. எல்லோரும் அவரை புகழ்வதால் அவர் நல்லவராகவே இருக்க கூடும். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக