சனி, ஜனவரி 30, 2016

பழ. கருப்பையா!! என்ன இப்படி சொல்லிட்டீங்க!!!

பழ. கருப்பையாவின் பேட்டியை படித்திருப்பீர்கள்.  படித்ததும் என்ன நினைத்துக்கொண்டீர்கள்? இத்தனை  வளைந்த முதுகுகள் மத்தியில் தோள் நிமிர்ந்த  அ.தி.மு.க காரர்.  ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே மேலிடத்தை எதிர்த்து பேசியவர்.  நெஞ்சத்தில் பட்டதை தைரியமாக சொன்னவர்.  எனக்கு இவரைப் பற்றி எழுத தோன்றியது.   அதுவும் இவர் சொன்ன சில கருத்துக்கள் எல்லோர் மனதிலும் குமுறிக் கொண்டிருந்தது தான்.  




அரசியல் என்றால் பணத்தை கொள்ளை அடிப்பது.  ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்.  மூன்று கீப்கள்.  இரண்டு கார்கள். கவுன்சிலரை பார்க்க வேண்டிய விதத்தில் பார்க்காவிட்டால் நாம் வீட்டில் கிரகப்பிரேவசம் நடத்த முடியாது.  கவுன்சிலரே இப்படி என்றால் எம்.எல்.ஏ க்கள் எப்படி இருப்பார்கள். மந்திரிகள் எப்படி இருப்பார்கள்.  அதிகாரிகளும் கிடைத்த வரை கொள்ளை அடிக்கிறார்கள்.  சட்ட விரோத நபர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி -க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் துணை நிற்கிறார்கள்.

இப்படியெல்லாம் பொங்கி இருக்கிறார்.  மேலும், தன் தொகுதியில் எவ்வளவோ நல்லது செய்ய முயற்சி செய்ததாகவும் எதுவுமே நடக்க வில்லை என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.  இவர் பேசியது எல்லாம் யாருக்கும் தெரியாதது இல்லை. புதுசா என்னய்யா பேசி இருக்காருன்னு தோணலாம்.  ஆனால், இப்போது இருக்கும் ஆளுங்கட்சி அரசியல் அடக்குமுறைகளில் இவ்வளவு பேசுவதே பெருசுங்க.   யாரும் அவ்வளவு எளிதாக தலைமையை விமர்சிக்காத போது துணிந்து தன கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அது தான் முக்கியம்.  இவ்வளவு தைரியம் யாருக்கு வரும்.  அதனால் தான்,  இப்போது இவர் வீட்டை தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

யார் இந்த பழ. கருப்பையா?

-  காரைக்குடிகாரர்.  எழுத்தாளர். பேச்சாளர்.  சினிமா தயாரிப்பாளர். காங்கிரஸில் இருந்து அ.தி.மு.க வில் சேர்ந்தவர்.

- சென்னை துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு           எம்.எல்.ஏ வாக இருப்பவர்.

- தமிழக கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் கேஸ் போட்டவர்.

-   அரசியல் மற்றும் சமுதாயம் சார்ந்த புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

-  நான் தமிழன்.  என் மதம் சைவமோ வைணவமோ இருக்கலாம்.  ஆனால் ஹிந்து அல்ல என்று  சொன்னவர். 

ஆனால் இந்த தைரியத்துக்கு பின்னால், வேறு மாதிரியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பழ. கருப்பையா அவர்களே!! எல்லாம் சரி.  ஐந்து வருடங்கள் அ.தி.மு.க வில் எம்.எல்.ஏ வாக இருந்து விட்டு இப்போது ஐந்தாவது வருடம் தான் உங்களுக்கு நியாங்கள் புரிய வருகிறதோ ?

இதற்கு முன் உங்களுக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாதா?  கவுன்சிலர்கள், மந்திரிகள்  என்றால் எப்படி என்று தெரியாதா?  இத்தனை வருடங்கள் ஏன்  ஊமையாக நடித்தீர்கள்.  தேர்தல் வருகிறது என்பதால் கட்சி மாற சமயம் பார்கிறீர்களோ?

எப்படி இருந்தாலும், நியாய வாதங்களும், போராட்டங்களும் மௌனித்து போன இந்த காலத்தில் உங்கள் குரல் சில மனங்களில் சிந்தனை விதையை விதைத்திருக்கும். அட! துக்ளக் விழாவில் அவர் பேச்சை கேட்ட நாலு பேர், ஆனந்த விகடனில் அவர் பேட்டியை படிச்ச நாலு பேர் யோசிக்க மாட்டாங்களா??



2 கருத்துகள்:

  1. பெயரில்லா10:47 PM

    Amudhan,
    Your questions are very straight forward.I also agree why he is asking after 5 yrs.

    Regards
    Thiaga

    பதிலளிநீக்கு