தீபாவளி முடிந்து, புத்தாண்டும் முடிந்து அவ்வளவு தானா பண்டிகை, கொண்டாட்டங்கள் என்று நினைக்கும் வேளையில் வருவது தான் பொங்கல்.
வழக்கமாக பொங்கல் புது படங்கள் தான் சூடான பேச்சாக இருந்தாலும் இந்த முறை ஜல்லிக்கட்டு முந்திகொண்டது. கடைசி வரை ஜல்லிகட்டை நடத்தவிடாமல் கட்டை போட்டு விட்டார்கள். கால காலமாக இருந்து வந்த உரிமையை பறித்து விட்டார்கள் என்ற உணர்வு தமிழரிடையே மேலோங்கி உள்ளது. நீ யாருடா என்னை சொல்றது என்ற கோபமும் அதில் உள்ளது. அவர்கள் நம்மை ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். இதில் பல பிரச்சனைகள் சிக்கி கொண்டு உள்ளன.
போகி பண்டிகையின் போது விடியற்காலையில் எழுந்து பழைய குப்பைகளை எரிப்பது குளிருக்கு மிகவும் இதமாக இருக்கும். எரிப்பதற்கு குப்பைகள் தீர்ந்து போனால், வீட்டில் தேடி கண்டுபிடித்து பழைய புத்தகங்கள், மர சாமான்கள் கொண்டு வருவோம். போகி பண்டிகையின் போது சில சிறுவர்கள் தார் குச்சியை வைத்துகொண்டு சிறு மேளத்தை அடித்துக்கொண்டு "போகி போச்சு பொங்கல் போச்சு!! அய்யரு குடுமி எகிறி போச்சு " என்று பாடிக் கொண்டு போவார்கள். இப்போது நிஜமாகவே போகி போயே போச்சு!!
பொங்கலுக்கு முந்தின இரவு, அம்மாவோ மனைவியோ கோலம் போடும் போது ஆண் பிள்ளைகள் தான் காவல். அவர்கள் அழகாக போடும் கோலத்தை அங்கே அழி இங்கே மாற்று என்று சொல்லி குழப்பினாலும் அவர்கள் கோலத்தை அழகாக கொண்டு வந்து விடுவார்கள். நம் வீட்டு கோலம் தான் அழகு என்று நினைக்கையில், அடுத்த நாள் காலை, வீதிகளில் நடக்கும் போது தெரியும் அழகான கோலங்களை வரைந்து விட்டு நம் வீட்டு பெண்மணிகள் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார்கள் என்று!!!
வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை கட்டும் வேட்டி ஆதலால் அது எங்கே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பெல்ட் போட்டு கட்டி நானும் தமிழன்டா என்று வலம் வருவதும், பெண்ணுக்கு பாவாடை சட்டை போட்டு அழகு பார்த்து அவளையும் கூட்டிக் கொண்டு கரும்பு வாங்க போவதும் வாடிக்கை. ஒவ்வொரு பொங்கலுக்கும் கரும்பின் விலை அதிகமானாலும், அதன் Size மட்டும் குறைந்துகொண்டே போவது போல தோன்றும். இந்த முறை பென்சில் Size க்கு கொஞ்சம் அதிகம்.
காலை சன் டி.வி யில் அரட்டை அரங்கம். வாழ்க்கைக்கு தேவையானது ஞாபக சக்தியா? ஞாபக மறதியா? என்று ஒரு மாதிரியான தலைப்பு. ஆனால் அதிலும் பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஏமாற்ற வில்லை. ராஜாவுக்கு பேச ஸ்கிரிப்ட் தேவையில்லை போல. எதிர் அணியினர் பேசுவதை வைத்தே points தயார் செய்துகொள்கிறார். நாங்கள் பேசியதை ராஜா மறந்து விடுவார். எங்கள் பேச்சுக்கு எதிர்வாதம் வைக்க மாட்டார். ஏனென்றால் அவர் தான் ஞாபக மறதி அணியில் இருக்கிறாரே என்று பாரதி பாஸ்கர் சொல்ல, ராஜாவோ பாரதி பாஸ்கர் சொன்னதையெல்லாம் நான் மறந்து விட்டேன் என்று பேச ஆரம்பித்தது ரொம்பவே சிரிப்பு வெடி.
மற்றபடி காதில் வந்து விழுந்தவை!! பொங்கலில் வந்த படங்களில் ரஜினி முருகன் நன்றாக இருக்கிறது!! தாரை தப்பட்டை குடும்பமாக பார்க்க முடியாது!!! கதகளி சுமார். கெத்து சுமாருக்கும் சுமார்!!! நான் இன்னும் பசங்க 2 பார்க்க வில்லை. அதற்கு பிறகு தான் ரஜினி முருகன் பார்க்க வேண்டும்.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்கழி விழாவென்று கர்னாடக கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கையில், பொங்கல் விழாக்களும் கொண்டாட பட வேண்டும் (முன்பு சங்கமம் விழா நடந்தது போன்று ). அரசாங்கம் தமிழ்நாடு முழுவதும் வீதிகளை அழகு படுத்த வேண்டும். அலங்காரங்கள் வைக்க வேண்டும். எப்படி என்றால்? கீழே உள்ள படங்களை பாருங்களேன். பண்டிகைகள் மனித வாழ்க்கையின் வெற்றிடங்களை போக்கும். சண்டை சச்சரவுகளை குறைக்கும். மனிதர்களிடையே ஒரு நல்லிணக்கத்தை உண்டு பண்ணும்.
இதெல்லாம் ஆடம்பரமா? நிறைய செலவு ஆகுமா? அப்படியென்றால் இது எல்லாம் என்னதுங்க??
Amudhan,
பதிலளிநீக்குYou have captured the normal person's feeling and activity on the day of pongal.Good narration.
Regards
Thiaga
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியாகா!!!
பதிலளிநீக்கு