ஞாயிறு, ஜனவரி 31, 2016

கோடம்பாக்கத்தின் டாப் ஹீரோக்கள் !!

ரஜினி, கமல் படங்கள் எப்படி இருந்தாலும் பார்த்து விடுகிறோம்.  அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி  படங்களுக்கு அவர்களது தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள்.  அதே போல் ஜீவா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்புவுக்கும் ரசிகர்கள் உண்டு. இந்த மாதிரி ஹீரோக்கள் மத்தியில் அதிக ஆரவாரமின்றி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் சில ஹீரோக்கள்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், விஜய் அண்டோனி, அட்ட கத்தி தினேஷ் போன்றோர்களை தான் சொல்கிறேன்.  இவர்களது படங்கள் போரடிக்காது.  நல்ல கதைகளையும், இயக்குனர்களையும் இவர்கள் முன்பே தேர்ந்தெடுத்து நடித்து விடுவதால், நமக்கு வேலை மிச்சம். இவர்களது படம் என்றால் குடும்பம் சகிதமாக எந்த விமர்சனங்களையும் படிக்காமல் நேராக தியேட்டர் போகலாம்.   ஐநூறு, ஆயிரம் என்று  செலவு செய்து படம் சூர மொக்கை என்று தெரிந்து மனம் நொந்து  வீடு திரும்ப வேண்டியதில்லை.  

Image result for sivakarthikeyanImage result for vijay sethupathi

இவர்கள் வளரும் நடிகர்கள்.  ஆரம்ப கட்ட ரஜினி, கமல், சத்யராஜ் மாதிரி. எந்தவொரு பந்தாவும் அலட்டலும் கிடையாது.   தங்களது நடிப்பால் சுமாரான திரைக்கதையையும் சூப்பர் ஆகி விடுவார்கள்.   தமிழ் சினிமாவை சிறந்த இயக்குனர்களைக் கொண்டு சிகரத்துக்கு கொண்டு செல்பவர்கள்.


Image result for vishnu vishalImage result for vijay antony

விஜய்யும், அஜித்தும், சூர்யாவும், தனுஷும் இவர்களைத் தான் போட்டியாக கருத வேண்டும்.  கதை சரியில்லை என்றால் சூப்பர் ஸ்டார் படம் கூட  ஊத்திக்கொண்டதே.

Image result for attakathi dinesh


இவர்கள் நடித்த சில நல்ல படங்களின் பட்டியல் கீழே: (எதையாவது நீங்கள் பார்க்க தவற விட்டிருந்தால் பார்த்து விடுங்கள்).

சிவகார்த்திகேயன்: மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்த படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் 

விஜய் சேதுபதி:  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான்.

விஷ்ணு விஷால்:  வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை, முன்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை

விஜய் அண்டோனி:  நான், சலீம், இந்திய பாகிஸ்தான்.

அட்டகத்தி தினேஷ்:  அட்டகத்தி, குக்கூ, திருடன் போலீஸ்.

இவர்களது சில ஓடாத படங்களை விட்டு விட்டேன்.  ஒன்றிரண்டு படங்கள் ஓடியதற்கே கருப்பு கண்ணாடி மாட்டிக்கொண்டு பெரிய நடிகன் மாதிரி Acting கொடுப்பவர்கள் மத்தியில் இவர்களது Hit list நீளம் தான்.  ரசிகர்களே ரெடி ஆகிக்கோங்க.  கட் அவுட்,  நற்பணி மன்றம், பால் அபிஷேகம், பண அபிஷேகம் எல்லாமே இவர்களுக்கும் அமோகமாக அமையட்டும்.








சனி, ஜனவரி 30, 2016

பழ. கருப்பையா!! என்ன இப்படி சொல்லிட்டீங்க!!!

பழ. கருப்பையாவின் பேட்டியை படித்திருப்பீர்கள்.  படித்ததும் என்ன நினைத்துக்கொண்டீர்கள்? இத்தனை  வளைந்த முதுகுகள் மத்தியில் தோள் நிமிர்ந்த  அ.தி.மு.க காரர்.  ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே மேலிடத்தை எதிர்த்து பேசியவர்.  நெஞ்சத்தில் பட்டதை தைரியமாக சொன்னவர்.  எனக்கு இவரைப் பற்றி எழுத தோன்றியது.   அதுவும் இவர் சொன்ன சில கருத்துக்கள் எல்லோர் மனதிலும் குமுறிக் கொண்டிருந்தது தான்.  




அரசியல் என்றால் பணத்தை கொள்ளை அடிப்பது.  ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்.  மூன்று கீப்கள்.  இரண்டு கார்கள். கவுன்சிலரை பார்க்க வேண்டிய விதத்தில் பார்க்காவிட்டால் நாம் வீட்டில் கிரகப்பிரேவசம் நடத்த முடியாது.  கவுன்சிலரே இப்படி என்றால் எம்.எல்.ஏ க்கள் எப்படி இருப்பார்கள். மந்திரிகள் எப்படி இருப்பார்கள்.  அதிகாரிகளும் கிடைத்த வரை கொள்ளை அடிக்கிறார்கள்.  சட்ட விரோத நபர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி -க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் துணை நிற்கிறார்கள்.

இப்படியெல்லாம் பொங்கி இருக்கிறார்.  மேலும், தன் தொகுதியில் எவ்வளவோ நல்லது செய்ய முயற்சி செய்ததாகவும் எதுவுமே நடக்க வில்லை என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.  இவர் பேசியது எல்லாம் யாருக்கும் தெரியாதது இல்லை. புதுசா என்னய்யா பேசி இருக்காருன்னு தோணலாம்.  ஆனால், இப்போது இருக்கும் ஆளுங்கட்சி அரசியல் அடக்குமுறைகளில் இவ்வளவு பேசுவதே பெருசுங்க.   யாரும் அவ்வளவு எளிதாக தலைமையை விமர்சிக்காத போது துணிந்து தன கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அது தான் முக்கியம்.  இவ்வளவு தைரியம் யாருக்கு வரும்.  அதனால் தான்,  இப்போது இவர் வீட்டை தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

யார் இந்த பழ. கருப்பையா?

-  காரைக்குடிகாரர்.  எழுத்தாளர். பேச்சாளர்.  சினிமா தயாரிப்பாளர். காங்கிரஸில் இருந்து அ.தி.மு.க வில் சேர்ந்தவர்.

- சென்னை துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு           எம்.எல்.ஏ வாக இருப்பவர்.

- தமிழக கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் கேஸ் போட்டவர்.

-   அரசியல் மற்றும் சமுதாயம் சார்ந்த புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

-  நான் தமிழன்.  என் மதம் சைவமோ வைணவமோ இருக்கலாம்.  ஆனால் ஹிந்து அல்ல என்று  சொன்னவர். 

ஆனால் இந்த தைரியத்துக்கு பின்னால், வேறு மாதிரியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பழ. கருப்பையா அவர்களே!! எல்லாம் சரி.  ஐந்து வருடங்கள் அ.தி.மு.க வில் எம்.எல்.ஏ வாக இருந்து விட்டு இப்போது ஐந்தாவது வருடம் தான் உங்களுக்கு நியாங்கள் புரிய வருகிறதோ ?

இதற்கு முன் உங்களுக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாதா?  கவுன்சிலர்கள், மந்திரிகள்  என்றால் எப்படி என்று தெரியாதா?  இத்தனை வருடங்கள் ஏன்  ஊமையாக நடித்தீர்கள்.  தேர்தல் வருகிறது என்பதால் கட்சி மாற சமயம் பார்கிறீர்களோ?

எப்படி இருந்தாலும், நியாய வாதங்களும், போராட்டங்களும் மௌனித்து போன இந்த காலத்தில் உங்கள் குரல் சில மனங்களில் சிந்தனை விதையை விதைத்திருக்கும். அட! துக்ளக் விழாவில் அவர் பேச்சை கேட்ட நாலு பேர், ஆனந்த விகடனில் அவர் பேட்டியை படிச்ச நாலு பேர் யோசிக்க மாட்டாங்களா??



திங்கள், ஜனவரி 25, 2016

வியாபாரத்திற்காக விஜயம் செய்யும் பிரதமர்கள்

பிரதமர்களுக்கும், ஜனாதிபதிகளுக்கும் பல நாடுகளுக்கு விஜயம் செய்வது ஒரு முக்கியமான வேலை!!  நம் பிரதமர் மோடியை தானே மனதில் நினைதுக்கொள்கிறீர்கள்.  அவரை மட்டும் சொல்லவில்லை. பெரும்பாலும் அனைத்து பிரதமர்களும், ஜனாதிபதிகளும் இப்படி தான். ஏதோ ஒரு விஷயத்தை வைத்து அந்த பிராயணம் இருந்தாலும்,  அதற்கு பின் ஒரு வியாபார நோக்கம் இருக்கும்.
Image result for hollande visit to india
Image result for angela merkel visit to india

குடியரசு தினத்திற்கு விஜயம் செய்வது மாதிரி French அதிபர் ஹாலண்ட் இந்தியா வருகிறார்.  ஆனால் இதற்கு பின்னால், தங்களது Rafale போர் ரக விமானங்களை விற்பதும், அணு நிலையம் அமைப்பதும், ஸ்மார்ட் சிட்டி கட்டி கொடுப்பது முக்கிய காரணங்களாக இருக்கிறது. போன வருடம், ஜெர்மனியின் பிரதமர் அஞ்ஜெலா மெர்கல் இந்தியா வந்தார்.  இது நேரடியாக வியாபாரத்திற்கான விஜயம்.  ரசாயனம், இயந்திரம், மின்சார பொருட்கள், சூரிய ஒளி சக்தி போன்றவற்றில் 14,600 கோடி முதலீடுக்காண கையொப்பம் போட்டு இருக்கிறார்கள்.  இதே போல் தான் சீனாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் பிரதமர்கள் நம் நாட்டுக்கு விஜயம் செய்வது.

இது எல்லாம் சரி தானே.  அவர்கள் நாட்டில் தொழில்நுட்பம் இருக்கிறது. அதிக அளவில் உற்பத்தி நடக்கிறது.  எங்கேயாவது விற்க தானே வேண்டும்.  நம் நாட்டில் கொண்டு வந்து எதை வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம். விற்கலாம்.  அவற்றையெல்லாம் வாங்க தான் நாம் எவ்வளவு மக்கள் தொகை கொண்டுள்ளோம்.  அவர்கள் இந்திய பணத்தை அள்ளிக் கொண்டு செல்லலாம்.  வெள்ளையன் காலம் தொட்டு இது தானே நடக்கிறது. இப்போது ஒரு மாறுதல்.  நம் பிரதமரும் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்கிறார்.  ஆனால் நம் பொருட்களை உலக சந்தையில் விற்பதற்காக   அல்ல.   வெளிநாட்டுகாரர்களை கெஞ்சி கூத்தாடி நம் நாட்டுக்கு அழைத்து தொழில் செய்ய வைப்பதற்கு. யோசித்தால், நம்முடைய வளத்தையும், செல்வத்தையும் அவர்களுக்கே தாரை வார்த்து  கொடுக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்ச  வைக்கிறது இந்த பயணங்கள்.   பெரும்பாலும் வெளிநாடுகள் தங்களது மொக்கையான காலாவதியான தொழில்நுட்பங்களை கொண்டே இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கிறார்கள்.  சில விதிவிலக்குகளை தவிர.  

இதையெல்லாம்  பார்க்கும் போது  ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.  
எள்ளு எண்ணைக்காக காய்கிறது.  எலி புழுக்கை ஏன் சேர்ந்து காய்கிறது ???

ஆனால் நம் பிரதமர் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரோ என்னமோ? என் சிறிய அறிவுக்கு எட்டாத வாறு?




 


புதன், ஜனவரி 20, 2016

எங்களில் யாரது!!

பையன்களுக்கு மீசை அரும்பியதும் கண்களும் குறுகுறுக்க ஆரம்பித்து விடும். இளசுகள் மத்தியில் சொல்லுவார்கள்.  ஒன்னு விட மாட்டான்டா. குச்சிக்கு சுடிதார் போட்டாக்கூட போதும். வச்ச கண்ண எடுக்க மாட்டான்.   பள்ளிக்கூடம் விட்டாச்சுன்னா விளையாடுறது, பிறகு ஊர சுத்துரது (எந்த வகுப்பு என்று கண்டு பிடித்து கொள்ளுங்கள்).   ஊர சுத்தரதுன்னா எப்படி? இப்படி தான்.

எங்களில் யாரது ?? 

அப்போதெல்லாம் எங்களுக்கு 
மீசை அரும்பும் வயசு 
ஆசை அடங்காத மனசு 
கண்களில் காதல் நிரப்பிக் 
கொண்டு சில தேவதைகளின் 
தரிசனத்திற்காய் எங்கள் 
வீதிவலம் விளக்கு வைக்கும் வரை 
தொடர்ந்திருக்கும்.

வாசல் தெளிப்பவளாய்....
செடிக்கு நீர் வார்ப்பவளாய்....
எங்கோ செல்வதற்கு 
வெளிவருபவளாய் 
எப்படியோ எங்கள் 
தேவதைகள் முகம் காட்டும் - அந்த 
ஓரக்கண் பார்வையும் 
வாயோர புன்னகையும் எங்களில் 
யாரையோ ஒருவரை பார்த்து...

இன்று 
வெறிச்சோடி போன அதே தெருக்களில் 
எங்கள் தேவதைகளை தேடி 
பார்க்கிறேன்.
எங்கேனும் குழந்தையோடும் 
கணவனோடும் தென்படும் போது 
அன்றைய 
ஓரக்கண் பார்வையும் 
வாயோர புன்னகையும் மனதை 
வாட்டும் ஒரு 
பெருமூச்சோடு...

சனி, ஜனவரி 16, 2016

பொங்கல், கரும்பு, பட்டிமன்றம்


தீபாவளி முடிந்து, புத்தாண்டும் முடிந்து அவ்வளவு தானா பண்டிகை, கொண்டாட்டங்கள் என்று நினைக்கும் வேளையில் வருவது தான் பொங்கல். வழக்கமாக பொங்கல் புது படங்கள் தான் சூடான பேச்சாக இருந்தாலும் இந்த முறை ஜல்லிக்கட்டு முந்திகொண்டது.  கடைசி வரை ஜல்லிகட்டை நடத்தவிடாமல் கட்டை போட்டு விட்டார்கள்.  கால காலமாக இருந்து வந்த உரிமையை பறித்து விட்டார்கள் என்ற உணர்வு தமிழரிடையே மேலோங்கி உள்ளது.  நீ யாருடா என்னை சொல்றது என்ற கோபமும் அதில் உள்ளது. அவர்கள் நம்மை ஹிந்தி  கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.  இதில் பல பிரச்சனைகள் சிக்கி கொண்டு உள்ளன.


போகி பண்டிகையின் போது விடியற்காலையில் எழுந்து பழைய குப்பைகளை எரிப்பது குளிருக்கு மிகவும் இதமாக இருக்கும்.  எரிப்பதற்கு குப்பைகள் தீர்ந்து போனால், வீட்டில் தேடி கண்டுபிடித்து பழைய புத்தகங்கள், மர சாமான்கள் கொண்டு வருவோம்.  போகி பண்டிகையின் போது சில சிறுவர்கள் தார் குச்சியை வைத்துகொண்டு சிறு மேளத்தை அடித்துக்கொண்டு "போகி போச்சு பொங்கல் போச்சு!! அய்யரு குடுமி எகிறி போச்சு " என்று பாடிக் கொண்டு போவார்கள்.  இப்போது நிஜமாகவே போகி போயே போச்சு!!


பொங்கலுக்கு முந்தின இரவு, அம்மாவோ மனைவியோ கோலம் போடும் போது ஆண் பிள்ளைகள் தான் காவல்.  அவர்கள் அழகாக போடும் கோலத்தை அங்கே அழி இங்கே மாற்று என்று சொல்லி குழப்பினாலும் அவர்கள் கோலத்தை அழகாக கொண்டு வந்து விடுவார்கள்.   நம் வீட்டு கோலம் தான் அழகு என்று நினைக்கையில், அடுத்த நாள் காலை, வீதிகளில் நடக்கும் போது தெரியும்  அழகான கோலங்களை வரைந்து விட்டு நம் வீட்டு பெண்மணிகள் எவ்வளவு அடக்கி வாசிக்கிறார்கள் என்று!!!

வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை கட்டும் வேட்டி ஆதலால் அது எங்கே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பெல்ட் போட்டு கட்டி நானும் தமிழன்டா என்று வலம் வருவதும், பெண்ணுக்கு பாவாடை சட்டை போட்டு அழகு பார்த்து அவளையும் கூட்டிக் கொண்டு கரும்பு வாங்க போவதும்  வாடிக்கை. ஒவ்வொரு பொங்கலுக்கும் கரும்பின் விலை அதிகமானாலும், அதன் Size மட்டும் குறைந்துகொண்டே போவது போல தோன்றும்.  இந்த முறை பென்சில் Size  க்கு  கொஞ்சம் அதிகம்.

காலை சன் டி.வி யில் அரட்டை அரங்கம். வாழ்க்கைக்கு தேவையானது ஞாபக சக்தியா? ஞாபக மறதியா? என்று ஒரு மாதிரியான தலைப்பு.  ஆனால் அதிலும்  பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஏமாற்ற வில்லை.  ராஜாவுக்கு பேச ஸ்கிரிப்ட் தேவையில்லை போல.   எதிர் அணியினர் பேசுவதை வைத்தே points தயார் செய்துகொள்கிறார்.  நாங்கள் பேசியதை ராஜா மறந்து விடுவார். எங்கள் பேச்சுக்கு எதிர்வாதம் வைக்க மாட்டார். ஏனென்றால் அவர் தான் ஞாபக மறதி அணியில் இருக்கிறாரே  என்று பாரதி பாஸ்கர் சொல்ல, ராஜாவோ பாரதி பாஸ்கர் சொன்னதையெல்லாம் நான் மறந்து விட்டேன் என்று பேச ஆரம்பித்தது ரொம்பவே சிரிப்பு வெடி.


மற்றபடி காதில் வந்து விழுந்தவை!!  பொங்கலில் வந்த படங்களில் ரஜினி முருகன் நன்றாக இருக்கிறது!! தாரை தப்பட்டை குடும்பமாக பார்க்க முடியாது!!! கதகளி சுமார்.  கெத்து சுமாருக்கும் சுமார்!!!  நான் இன்னும் பசங்க 2 பார்க்க வில்லை. அதற்கு பிறகு தான் ரஜினி முருகன் பார்க்க வேண்டும்.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்கழி விழாவென்று கர்னாடக கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கையில், பொங்கல் விழாக்களும் கொண்டாட பட வேண்டும் (முன்பு சங்கமம் விழா நடந்தது போன்று ).  அரசாங்கம் தமிழ்நாடு முழுவதும் வீதிகளை அழகு படுத்த வேண்டும்.  அலங்காரங்கள் வைக்க வேண்டும். எப்படி என்றால்? கீழே உள்ள படங்களை பாருங்களேன்.  பண்டிகைகள் மனித வாழ்க்கையின் வெற்றிடங்களை போக்கும்.  சண்டை சச்சரவுகளை குறைக்கும்.  மனிதர்களிடையே ஒரு நல்லிணக்கத்தை உண்டு பண்ணும்.

Image result for singapore pongal street decoration





Image result for christmas street decorationImage result for christmas street decoration







இதெல்லாம் ஆடம்பரமா? நிறைய செலவு ஆகுமா?  அப்படியென்றால்  இது எல்லாம் என்னதுங்க??