சென்னை மாநகராட்சிக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று சாலைகளை (ரோடு) தோண்டுவது. தமிழில் வினைத்தொகை என்று படித்திருப்பீர்கள். அதாவது ஊறுகாய் என்பதை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என்று சொல்லலாம். அது போல் சென்னை ரோடுகளை - தோண்டிய ரோடு, தோண்டுகின்ற ரோடு, தோண்டும் ரோடு என்றும் சொல்லலாம்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகையில், எப்போதும் வரும் சாலையை தோண்டி இருந்ததால் மாற்று சாலையை பயன்படுத்தி வந்தேன். இப்படி செய்து இரண்டு மூன்று மாதம் ஆகிவிட்டதால், இன்று மறுபடியும் வழக்கமான சாலையில் வரலாம் (தோண்டியதை சரி பண்ணி இருப்பார்கள் என்ற நப்பாசை) என்று வந்து பார்த்தால் முன்பை விட ஆழமாக தோண்டி இருந்தார்கள். அப்போது உதித்தது தான் மேலே சொன்ன ஊறுகாய் சமாச்சாரம். ரோடு தோண்டுவதற்கான காரணங்களை இப்போது ஆராய போவதில்லை. ஆனால் இப்படி தோண்டிக்கொண்டே இருப்பதால் மக்கள் படும் அவஸ்தை இருக்கிறதே...அதை எழுத்தால் முழுமையாக எழுத முடியாது.
பாரிஸ், ரோம் போன்ற நகரங்களில் சில இடங்களில் அரசாங்கத்திடம் அனுமதி வாங்காமல் எங்கேயும் தோண்ட கூடாது. புராதன காலத்தில் போட்ட ரோடுகளாம் அவை. இங்கே எங்கள் வீட்டு ரோட்டை தோண்டினால் பல புராதன ரோடுகள் உள்ளே புதையுண்டு கிடைக்கும். பல சமயங்களில் ரோட்டை தோண்டும் தொழிலாளர்களுக்கு அதை ஏன் தோண்டுகிறோம் என்றே தெரிவதில்லை. போன மாசம் தானே தோண்டுனீங்க, மறுபடி ஏன் தோண்டுறீங்க என்று கேட்டால் வெள்ளந்தியாக சிரிப்பார்கள். அது போன மாசம். இது இந்த மாசம் என்ற பதிலை மானசீகமாக நினைத்துக் கொள்வேன்.
சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் இருக்க ஆட்டோ காரர்கள் வளைந்து வளைந்து ரோட்டின் மீது இன்னொரு ரோட்டை போடுவார்கள். அவர்கள் போடும் புது ரூட்டை பின் தொடர்ந்து நாம் போய் விடலாம். என்ன, அலுவலகத்திற்கு கொஞ்சம் லேட்டாக போக வேண்டும். சில ரோடுகளுக்கு பள்ளங்களிலிருந்து சாப விமோசனமே கிடையாது. 365 நாட்கள் 24 மணி நேரம் தோண்டப் பட்டே இருக்கும். மக்களும் லேசு பட்ட ஆட்கள் இல்லை. நீ தோண்டிகிட்டே இருக்கியா அதை பற்றி எனக்கென்ன கவலை என்பது மாதிரி மக்கள் குறுக்கும் நெடுக்கும் சாலைகளை கடக்க வண்டியில் போகும் எங்களுக்கு சரக்கே அடிக்காமல் போதையில் வண்டி ஓட்டுவது போல நடுங்கும்.
இன்று, தோண்ட பட்ட சாலைகளை பற்றி ரொம்ப தோண்டிவிட்டேன். இன்னும் தோண்டினால் பள்ளத்திலிருந்து சாக்கடை, குப்பை போன்ற இன்னும் பல வஸ்துகள் வெளிவந்து விடும் என்பதால் இத்தோடு முடித்து விடுகிறேன். நாளை தோண்டப்படாத இன்னொரு ரோட்டை கண்டு பிடிக்க வேண்டும்.