இந்த முறை தேர்தலில் உண்மையாகவே அனல் பறக்கிறது. சூரியனின் உக்கிரத்தால் வெப்பம் இப்பவே 41 deg C ஆக கொதிக்கிறது. தேர்தல் தினத்தில் (மே 16) எவ்வளவு செல்சியஸ் சென்று ஓட்டு சதவீதத்தை பாதிக்க போகிறதோ தெரியவில்லை. பிரச்சாரத்தில் தலைவர்கள் சூட்டை கிளப்புகிறார்களோ இல்லையோ, சூரியன் கிளப்பும் சூட்டில் நாலைந்து பேர் இறந்து போனது பரிதாபம். தமிழா! பிரியாணி பொட்டலத்துக்கும், குவாட்டருக்கும் சொச்ச பணத்துக்கும் இப்படி வெயிலில் மாண்டு போனாயே...
ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குறுதிகளில் இலவசங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. மிக்சி, Fan, Grinder, கணினி என்று ஆரம்பித்து இப்போது fridge, வாஷிங் மெஷின் என்று போய்க்கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் வாங்கினாலும், அதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் நம் மக்கள் என்பதை அரசியல் வாதிகள் புரிந்து வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்களுக்கு மாத சம்பளமே இலவசமாக கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள். மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டில் நடக்கும் இலவச திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டு போகிறார்களாம். நாட்டை கெடுப்பதில் தமிழ்நாடு எப்படி முன்னோடியாக இருக்கிறது பாருங்கள்!! தேர்தல் வாக்குறுதி என்றால் எவ்வளவு பெரிய விஷயம் என்பது போய், அதை காமெடி அறிக்கை ஆக்கி விட்டார்கள்.
கையில் கேமரா சகிதம் போலீஸ்காரர்கள் அங்காங்கே வண்டிகளை நிறுத்தி சோதனை செய்கிறார்கள். காருக்குள் என் மனைவியும், மகளும் இருந்தும் கூட என் வண்டி பலமுறை நிறுத்தி சோதனை செய்யப் பட்டது. என்னடா இப்படி தொல்லை கொடுக்கிறார்கள் என்று அலுத்துக்கொள்ளும் போது, இன்று கரூர் மாவட்டத்தில் நிறைய இடங்களில் பதுக்கி வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்த போது, தன் கடமையை தான் அவர்கள் செய்கிறார்கள் என்று புரிந்தது. ஆனால் பிரச்சாரம் என்ற பெயரில் பொது சாலைகளை அடைத்து மேடை போட்டு வண்டிகளை அந்த சாலையில் விடாமல் வேறு சாலைகளில் திருப்பி விட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள். இதற்கெல்லாம் அதிகாரம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று தெரிய வில்லை.
இந்த முறை பிரதான இரண்டு கட்சிகளை தவிரவும் பிற கட்சி கூட்டணிகள் இருப்பது ஒரு ஆறுதலும், விறுவிறுப்பும் கூட. சில கட்சி தலைவர்களுக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தலாகவும், வரும் ஆண்டுகளில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர வழி செய்யும் தேர்தலாகவும் இது இருக்கக் கூடும். இந்த தேர்தலில் வெற்றி பெரும் கட்சியும், இது வரை இருக்கும் அரசியல் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்களை செய்து மக்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தேர்தலில் நிற்கும் கட்சிகளும், அவர்களின் பிரச்சார முறைகளும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், இலவச வாக்குறுதிகளும் எதுவும் இந்த தேர்தலில் மாற வில்லை. ஆனால் மக்கள் தங்களுக்குள் எழுப்பும் கேள்விகளும், அரசியல் தலைவர்களை ஆழ்ந்து பார்ப்பதிலும், நையாண்டி செய்வதிலும் நல்ல மாற்றங்கள் தெரிகிறது. இந்த தேர்தலின் முடிவிலும் அதன் தொடர்ச்சியான ஆட்சியிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்காவிட்டாலும், அடுத்த தேர்தல் தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் தேர்தலாக இருக்கும் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.
இருந்தும், அம்மாவின் வேட்பாளர் மாற்றங்களும், கலைஞரின் குற்றசாட்டுகளும், விஜயகாந்தின் புரியாத பேச்சும், வைகோவின் கூட்டணிகளும், ராமதாஸின் தேர்தல் அணுகுமுறைகளும், பா.ஜ.க வின் பரிதவித்தலும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக whatsapp, facebook இவற்றில் வரும் memes மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் விவாதங்களும் இந்த தேர்தலை விறுவிறுப்பான தேர்தலாக்கி இருக்கிறது. தேர்தல் 2016 - பந்தயம் ஜோர்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக