ஞாயிறு, மார்ச் 06, 2016

மெட்ராஸ் ஆட்டோகாரன்


Image result for chennai auto

சென்னையில் பெரிய மால்கள் வந்து விட்டன.  மெட்ரோ ரயில் ஓடுகிறது. பெரிய பாலங்கள் கட்டி இருக்கிறார்கள்.  இவற்றுக்கு மத்தியில் மூணு சக்கர தேரு... அதாங்க.. ஆட்டோ!!, சென்னையின் பள்ள மேடான சாலைகளில், காதை  Puncture ஆக்கும் சத்தத்தோடு சதா ஓடிக் கொண்டிருக்கிறது. அணைத்து விஷயங்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டு அடுத்த நிலையை அடையும் போது, இந்த மெட்ராஸ் ஆட்டோவும், ஆட்டோக்காரர்களும் முப்பது வருடங்களாக அப்படியே இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆட்டோ ஓட்டுகிறார்கள்.  என்றாலும், மெட்ராஸ் ஆட்டோக்காரன் என்றால்  அது தனி.   தமிழ்நாட்டிலேயே கூட இவர்கள் வித்தியாசமானவர்கள்.   முக்கால்வாசி ஆட்டோக்கள் கருப்பு புகையை கக்கிக் கொண்டிருக்கும்.  அந்த புகையில் கொசு மருந்தும் கலந்திருந்தால் சென்னையில் கொசு தொல்லையாவது தீரும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை.  அந்த புகையை சுவாசிக்கும் இரு சக்கர வாகனக்காரர்களுக்கு சளித் தொல்லை தான் வருகிறது.

மெட்ராஸ் ஆட்டோகாரர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருவது இவை:

- காக்கி சட்டை அழுக்கு ரொம்ப தாங்கும் என்பதால், அதை அழுக்காகவே
  போட்டுக் கொள்வது
- தலையை சீவாமல், வாயில் எப்போதும் எதையாவது மென்று துப்பிக்
கொண்டே இருப்பது.
-  எந்த ஊருக்கு போகணும்னு சொன்னாலும், முதல் முறை இரு மடங்கு
   பணம் கேட்பார்கள்.
-  பாஷா படத்திற்கு பிறகு ஆட்டோகாரன் பாட்டு இவர்களது தேசிய கீதம்.
-  சந்து பொந்து என்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  சைக்கிள் கேப்பில் 
  புகுந்து போய்விடுவான் என்பார்களே.  இவர்களது ஆட்டோ புகுந்து போய் 
  விடும்.  
- சென்னையில் கார் வைத்து இருப்பவர்கள் எல்லாம் அவர்களது காரில் 
  ஒன்றிரண்டு விழுப்புண்ணாவது (சிராய்ப்புகள்) வைத்திருப்பார்கள்.  அது 
  எல்லாமே ஆட்டோகாரர்கள் போட்டது தான்.
- பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுப்பவர்கள் இவர்கள் தான்.  ஆட்டோவில் வயதான பெண்மணிகள் இருந்தாலும் கூட சாலையில் போவோரை கெட்ட வார்த்தைகள் போட்டு வசை பாடுவார்கள். 
- நாளில் எந்த நேரத்தில் ஆட்டோவில் ஏறினாலும் சில்லறை இல்லை என்பார்கள்.  நீ தாம்பா முதல் போனி என்பார்கள்.  
- ஆட்டோவை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு இருப்பார்கள்.  நான் எல்லாம் ஆபீசில் வேலை செய்ய வேண்டிய ஆள் சார். என் போதாத காலம் ஆட்டோ ஓட்ட வந்துட்டேன் என்பார்கள்.

இங்கே ஆட்டோ ஓட்டுவதை ஒரு நல்ல தொழிலாக கருதி ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.  சென்னையில் எந்த ஒரு ஆட்டோக்காரனையாவது கேட்டு பாருங்கள்.  நான் சும்மா டெம்பரவரியா ஆட்டோ ஓட்டுறேன் சார்.  அடுத்த மாதம் துபாய போய் விடுவேன் என்றோ, அல்லது பெரிய இடத்தில் கார் டிரைவராக வேலைக்கு போவதாகவும், இல்லை வேறு வேலைக்கு போக போவதாகவும் சொல்வார்கள்.   சிலர் ஆட்டோ ஒட்டி கொண்டே படித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வார்கள். அப்படியே படித்து கலெக்டர் ஆகப் போவதாக பில்ட் அப் வேறு!!  ஆட்டோவை விட்டு விட்டு எப்போது டாக்ஸி க்கு மாறுவார்கள் என்று எதிர்பார்த்தால், ஆட்டோவின் இன்னுமொரு மோசமான அவதாரமான ஷேர் ஆட்டோவை உருவாக்கியிருக்கிறார்கள்.  அரசாங்கம் இவர்களுக்கு பயணத்திற்கான கட்டணத்தை முறை படுத்துவதை விட்டு விட்டு, இவர்களை டாக்ஸி ஓட்ட வைத்தார்களானால் என் ஆதரவு அவர்களுக்கு தான்.

இவை அனைத்தையும் மீறி நல்ல உடை உடுத்தி,  எங்கேயும் துப்பாமல், சரியான கட்டணம் வாங்கும் நல்ல ஆட்டோகாரர்களும் உண்டு.  ஆனால், அத்தி பூத்தாற் போல் நமக்கு நல்ல நேரம் என்றால் அப்படியொரு ஆட்டோ சவாரி வாய்ப்பதுண்டு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக