இளையராஜாவை ஆராதிக்க அப்போதெல்லாம் யாருக்கும் தோன்றியிருக்காது. நான் சொல்வது 80களில், 90 களில்.... இசை ஞானியின் பாடல்கள் just like that, எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும். டீ கடைகளிலும், காசெட்டு விற்கும் கடைகளிலும், மக்களின் குடும்ப நிகழ்சிகளிலும் ராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மக்களின் வாழ்வோடு கலந்து விட்ட இசை அது. அன்றாடம் நாம் உண்ணும் உணவை பற்றியும் உடுத்தும் உடையை பற்றியும் பேசிக் கொண்டிருப்போமா? அது போல தான் அவர் இசையும். இப்படி அவர் பாடல்களை கேட்டு வளர்ந்தே இப்போது வயதாகி விட்டது. சினிமா படங்களில் ஒரு பாடலில் ஹீரோ பணக்காரன் ஆவது போல, வேகமாக சென்று விட்டன நாட்கள்.
எதற்கு சொல்கிறேன் என்றால், இப்போது ராஜாவிற்கு பாராட்டு விழா என்றதும் அந்த உள்ளங்கள் எல்லோருக்கும் ஒன்று தோன்றி இருக்கும். இத்தனை வருடங்களாக அவருக்கு நாம் எவ்வளவு நன்றிகடன் பட்டிருக்கிறோம் என்று... இசை கடவுளுக்கு பாராட்டு விழா என்றதும் திரண்டு வந்து விட்டார்கள். Y.M.C.A நந்தனம் மைதானம் நிரம்பி வழிந்தது. இரவு 12.00 மணிக்கும் கடந்து சென்றுக் கொண்டிருந்த விழாவை கூட்டம் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தது.
இசைஞானி ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கு பாராட்டு விழா (இப்போது மூன்று படங்களுக்கு இசை அமைத்து விட்டு அதே இசையை முப்பது படங்களுக்கு போடுகிறார்கள்). நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாடலின் இசையை மட்டும் போடும் போது அந்த பெரிய மைதானத்தில், மாலை இருட்டும் வேளையில் எல்லோர் கண்களும் ஈரமாகி இருக்கும்.
முதல் இருபது நிமிடத்திற்கு அவர் பாடல்களின் முன்னே (prelude ) நடுவே (interlude) வரும் இசையை மட்டும் தொகுத்து போட்டார்கள். ஆஹா, அதுவே எல்லோரையும் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றிருக்கும். இளையராஜா வந்ததும் தன இருக்கையில் போய் உட்கார வில்லை. மக்களின் நடுவே மைதானத்தில் நடக்க ஆரம்பித்து விட்டார். கேட்கவா வேண்டும். மக்கள் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். தரையில் நிற்க வில்லை. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் முதல் இருக்கையின் மேலேயே எழுந்து நின்று அவரைப் பார்த்தார்கள். இசை ஞானி அத்தனை கூட்டத்தை பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரிய வில்லை.
சில டைரக்டர்களையும் (பாலா, பால்கி, கெளதம் வாசுமேனன், மிஷ்கின், வாசு, பாக்யராஜ்), நடிகர்களையும் (ஜெயராம், பிரகாஷ்ராஜ்), நடிகைகளையும் (ராதா, பூர்ணிமா, மீனா, கௌதமி), பாடகிகளையும் (ஜென்சி, சுசிலா, உமா ரமணன், சைலஜா, சித்ரா) மேடை மேல் அழைத்து ராஜாவை பற்றிப் பேச சொன்னார்கள். எல்லோரும் பேசிக்கொண்டே இருக்க ரசிகர்கள் பொறுமை இழந்தார்கள். பாட்ட போடுப்பா. பாட்ட போடுப்பா என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்நேரம் கமலையும் பேச வருமாறு மேடைக்கு அழைத்தார்கள். அவர் இது பேச வேண்டிய நேரமில்லை, ராஜாவின் பாடல்களை கேட்க வேண்டிய நேரம் என்று பட்டென்று சொல்லி, எல்லோருக்கும் விடுதலை வாங்கி கொடுத்தார். பிறகு இளையராஜா அருகே போய் அமர்ந்து கொண்டார். இருவரும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
SPB, மனோ, சித்ரா நிறைய பாடல்களை பாடினார்கள். மக்கள் அதை தலையை ஆட்டியும், ஊஹூ என்று கத்தியும், கை தட்டி ஆரவாரம் செய்தது அழகாக இருந்தது. என் பக்கத்தில் காலேஜ் படிக்கிற வயதில் அழகான சின்ன பெண் ஒருவள் தனியாக Concert கேட்க வந்து விட்டாள். இளையராஜாவை பார்க்கும் போதெல்லாம், பாட்டு ஆரம்பிக்கும் போதெல்லாம், oh my God என்றும், ஊ ஹூ வென்று கத்தியும் ரகளை செய்துக் கொண்டிருந்தாள். 11.30க்கு மேல் வீட்டுக்கு செல்ல அப்பாவிடம் அழைத்துக்கொண்டு போக செல்போனில் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
நிகழ்ச்சிக்கு 25,000, 10,000, 5000, 1000, 500 என்று டிக்கெட்டுகள் விலை மிக அதிகம் என்றாலும், நான் முன்பே சொன்ன மாதிரி, இளையராஜாவின் பாட்டை தினம் தினம் அனுபவிப்பதற்கு இந்த விலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் அமைந்திருந்தது கூட்டம். நிகழ்ச்சி விஜய் டிவி யில் வரும் போது தவற விடாதீர்கள்.
Amudhan,
பதிலளிநீக்குGood narration about the event.
Thiaga
Thank you!!
பதிலளிநீக்கு