புதன், அக்டோபர் 05, 2016

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன!!!

சில மாதங்களாக இந்தியாவிலும், தமிழ் நாட்டிலேயும் நடக்கும் விஷயங்களை கவனித்து வந்ததில் மக்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளின் மேல் கொஞ்சமும் அதிகாரமோ, கட்டுப்பாடோ கிடையாது என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் இது தான் இத்தனை வருடங்களாக இந்தியாவில் நடக்கிறது என்றாலும், இப்போது தான் சில விஷயங்கள் தெளிவாக புரிகிறது.                                                                                                                                                       தலைப்பில் சொன்னது போல், எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.  ஆனால், அதில், நாட்டு பிரச்சினையை பற்றியும், மக்களின் பிரச்சினையை பற்றியும் எழுதுவதால் என்ன பயன் வந்துவிட போகிறது என்ற அலுப்பு வந்து விடுகிறது.  சென்னை நகரத்தில் புதிது புதிதாக குடியிருப்பு கட்டிடங்கள் எழுப்பி ஏற்கனவே மக்கள் கூட்டத்தால் மூச்சு திணறும் நகரத்தை மேலும் திணறடிக்கிறார்கள் என்று ஒரு வருடம் முன்பு எழுதினேன்.  அதற்கு அப்புறமும் எத்தனையோ குடியிருப்பு ப்ராஜெக்ட் சென்னைக்குள் வந்து விட்டது.  இங்கு பிரச்னையை பற்றிய வருத்தமும் கோபமும் எதனை பேரிடம் இருக்கும் என்று தெரியவில்லை.   காலையில் சாலையில் செல்லும் போது ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும், மழை பெய்தால் ஏற்படும் வெள்ளமும்  சென்னையை விட்டு நகர வாழ்க்கை புலம் பெயர வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்த்துகிறது.   ஆனால், அரசாங்கத்தால் இயக்க படும் C M D A போன்ற அலுவலகங்கள் மீது நமக்கு இருக்கும் அதிகாரம் என்ன?  குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு எதிராக போராடிய ஒரு சமூக ஆர்வலருக்கு நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும்.                                                                                                                                                                                                                                  ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யும் முதலமைச்சர் தமிழகத்தின் அணைத்து தொகுதிகளுக்கும் ஒரு முறை சென்று பார்க்கிறாரா?  குறைந்த பட்சம் சென்னையிலாவது அணைத்து பகுதிகளும்  எப்படி இருக்கிறது என்று சென்று பார்க்கிறார்களா?  வெளிநாடு பல சென்றிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏன் நம் நாட்டு அடிப்படை வசதிகளை தரம் படுத்த தோணுவதில்லை.  சாலை வசதி, சாக்கடை வடிகால், மின்சாரம், பொது மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் போன்ற விஷயங்களை பற்றி எந்த முதலமைச்சராவது கவனம் கொண்டிருக்கிறார்களா?   ஆனால் மக்களுக்கு TASMAC வசதி, இலவச செல்போன், லேப்டாப், உணவு இதிலெல்லாம் அதிகம் கவனம் கொண்டிருக்கிறார்கள்.  இது போன்ற முதலமைச்சர்களுக்கும், பிரதம மந்திரிகளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிட்டால் மக்கள் காட்டும் அனுதாபம் இருக்கிறதே...  மக்களின் இரக்க உணர்ச்சியை கண்டால் புல்லரிக்கிறது.                                                                                                                                                                                                                       இப்போது இருக்கும் காவிரி பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை எல்லாம் அரசியல்வாதிகளால் ஊடகங்கள் உதவியோடும், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் உதவியோடும் திட்டமிட்டு நன்றாக நடத்த படுகிறது.  பெரும்பாலான மக்களுக்கு இதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுக்கும், நேரம் கடத்தவும் பயன் படுகிறது.  சில முட்டாள்கள்  போராட்டம், எதிர்ப்பு என்ற பெயரில் அடி வாங்கியும், உயிரையும் விடுகிறார்கள்.                                                                                                                                                                                                                                                                     2ஜி, க்ரானைட், மணல் தாது கொள்ளைகள், BCCI, ஹரியானா நில விவகாரம், நேஷனல் ஹெரால்ட், Bofors  எல்லாம் பேசி பேசி அலுத்து போன விஷயங்கள்.  இவை எல்லாம் நிலைமைக்கேற்ப அரசியல் வாதிகளால் முன்பே சொன்னது போல் நீதிமன்றங்கள், மற்றும் ஊடகங்கள் உதவியோடும் நடத்த படும் நாடகங்கள்.  மக்கள் பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.  இதில் எல்லாம் தலையிட முடியாது.  தலையிட்டால் தலை இருக்காது.                                                                                                                                                                                                       சினிமா, கதை, கவிதை, இலக்கியம், குடும்ப பிரச்சனைகள், சமையல், விளையாட்டு, அறிவியல், சுற்றுலா, மருத்துவம், பண்டிகை, நடனம், பாட்டு, குழந்தை வளர்ப்பு  என்று ஆஹா ...எழுதுவதற்கு எத்தனை விஷயங்கள்  உள்ளன.  இவை மட்டுமே நம் மக்களை உயிர்ப்போடு வைத்திருப்பவை.  சுஜாதா போன்ற புத்திசாலி எழுத்தாளர்கள் இந்த தலைப்பில் தான் எழுதி வந்தார்கள். ஏனென்றால் நம் நாடு மக்களால் நடத்த படும் நாடல்ல !!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக