ஞாயிறு, நவம்பர் 01, 2015

அந்தக் காலத்து பயணங்கள்

உங்களுக்கு அரச புரசலான விஷயம் பிடிக்கும் என்றால் மேற்கொண்டு படியுங்கள்.  இது சுவையான பழைய விஷயங்களை தேடிக் கண்டு பிடித்து இடும் பதிவு.

நாம் இப்போதெல்லாம் வெளியூர் பயணம் செல்வதற்கு சுலபமாக விமானம் , ரயில் , பஸ் என்று எல்லா வசதியும் இருக்கிறது.  அந்த காலத்தில் இவை எதுவும் இல்லாத போது என்ன செய்து இருப்பார்கள்?  நடையாய் நடந்து இருப்பார்கள். இல்லை மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் பிராயணம் செய்து இருப்பார்கள். வசதி இல்லை என்று வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள் அல்ல அவர்கள். அனாயாசமாக பல காத தூரம் (திருச்சி, மதுரை, சிதம்பரம் , காசி போன்று ) தேசாந்திரம் போனவர்கள். காடு, மலை, இருட்டு, திருடர் பயம் எல்லாம் தாண்டி எப்படி போயிருப்பார்கள்.  இப்போது கூட நாம் ஊர் பகுதிகளில் சாலையோரம் அந்தக் கால சத்திரங்களை சிதிலமடைந்த நிலையில் பார்க்கலாம்.  அந்தக் காலத்தில் அவை வழி போக்கர்கள் தங்கி செல்லும் இடமாக சுறுசுறுப்பாக இருந்திருக்கும். இரவில், இருட்டில் மின்விளக்கு இல்லாத காலத்தில் எப்படி பிரயாணம் செய்து இருப்பார்கள்?    மேலே  படியுங்கள்.

நான் குறுகிய காலத்துக்கு எப்போது வெளியூர் சென்றாலும் படிப்பதற்கென்று ஏதாவது  ஒரு புத்தகம் கொண்டு செல்வதுண்டு. அப்படி ஒருமுறை வெளிநாடு செல்லும் போது விமானநிலையம் சென்று சேர்ந்த போதுதான், எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததை அறிந்தேன்.   எனவே, விமான நிலையத்தில்  உள்ள கடையில் ஒரு புத்தகம் வாங்கினேன். "தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்" என்பதே அதன் பெயராகும். எழுதியவர் - ஏ .கே . செட்டியார் .  அந்த காலத்தில் வெளி வந்த பல கட்டுரைளை திரட்டி தொகுத்திருந்தார். .

தமிழ் மொழியில் பயண இலக்கியம் மற்ற தேச மொழிகளில் உள்ளது போல் இல்லையே என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரை தொகுப்பு இயற்றப்பட்டுள்ளது. அவற்றில் எனக்கு பிடித்த சில :



சங்கரநாயினார் கோயில் யாத்திரை 
(செல்லமாள் - பாரதியார் மனைவி, கதாமாலிகா - சுதேசமித்திரன் வெளியீடு,
10-11-1920)

நான் சிறு குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாள் சாயங்காலம் நாலு மணிக்கு சங்கர நாயினார் கோயிலுக்கு போக, நான், அம்மா, என் தம்பியொன்று சின்னக் குழந்தை, அக்கா, அக்கா புருஷன் ஐந்து பேரும் புறப்பட்டோம். அந்த ஊருக்கு போக ரயில் கிடையாதாதனால் மாட்டு வண்டி வைத்துக் கொண்டு போகிறோம்.

எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் போனவுடன் இறைபனை என்றொரு கிராமம் சேர்ந்தோம். அதனருகே ஒரு பெரிய பனந்தோப்பு உண்டு. அது ஒரு சிறிய மலைக்குப் பக்கத்திலிருக்கிறது. தோப்புக்கும் அந்த மலைக்கும் நடுவழியாக ஒரு பாதையுண்டு. அதைச் சரிபடுத்த முடியவில்லை.

கொஞ்ச தூரம் போனதும் எங்கள் வண்டிச் சக்கரத்தின் பட்டை கழன்று துண்டு துண்டாகக் கீழே விழுந்து விட்டது. வண்டி கொஞ்சம் சாய்ந்ததும் எல்லோரும் கீழே குதித்து விட்டோம். வண்டிக்காரன் என்னென்னவோ செய்து பார்த்தான். அதை சரிபடுத்த முடியவில்லை.

"நீங்கள் கொஞ்சம் இங்கே இருங்கள். நான் திரும்பி ஊருக்குப் போய் ஒரு வண்டி கொண்டு வருகிறேன். அந்த வண்டியில் நாம்  போகலாம்.  இந்த வண்டியை இங்கே போட்டுவிட்டுப் போய் விடலாம். பின்பு என் ஆள் வந்து எடுத்துக் கொண்டு போவான்" என்று சொன்னான்.  சரி, என்றோம். அவன் போய் விட்டான். நாங்கள் அங்கேயே மணலில் உட்கார்ந்திருந்தோம்.

அவன் போய் வெகு நேரம் வரவில்லை.  இருட்டிப் போய் விட்டது. நாங்கள் திரும்பி ஊரை நோக்கிப் போகிறோம். எங்கள் ஊருக்குப் பெயர் கடவூர். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள எங்கள் கடவூரிலிருந்து சங்கரனாயினார் கோயில் ஸ்தலம் சுமார் 50 கல் இருக்கலாம். நாங்கள் இறைபனையிலிருந்து திரும்பி ஊரை நோக்கிப் போகிறோம். எதிரே, பாதி தூரத்தில் வண்டிக்காரன் வண்டி கொண்டு வந்தான்.

நாங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு கடவூருக்கு போகாமல் யாத்திரையை நிறுத்த வேண்டாம் என்றெண்ணி, மறுபடி இறைபனைத் தோப்புக்கு வந்து சேர்ந்தோம்.  இதற்குள் நிரம்ப இருட்டிப் போய்விட்டது.

இறைபனைக்கும் மத்தளப்  பாறைக்கும் நடுவில் தான் அடித்துப் பறிக்கிற இடம்.  அங்கே திருடர் ஒளிந்து கொள்ள சௌகர்யமான இடம் இருக்கிறது.  இரவில் நல்ல இரவில், நாங்கள் அந்த வழி போகும் படி நேரிட்டது.  அந்தக் கோமதிதான் காப்பாற்ற வேண்டும் என்றெண்ணிப் போகிறோம்.  கொஞ்ச தூரம் போனவுடன் நாலைந்து பேர் பேசுகிற சத்தம் கேட்டது.

'திருடன் வந்து விட்டான் ' என்று பதறிப் போய் எங்களிடமிருந்த நகைகளைக் கழற்றித் துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி வண்டியில் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டோம்.  வண்டிக்காரனை வண்டியின் பின்னால் நடந்துவரச் சொல்லிவிட்டு, அக்கா புருஷன் வண்டியை விரைவாக ஒட்டிக் கொண்டு போனார்.  கொஞ்ச தூரம் போனவுடன் பத்துப் பேர் எதிரே வந்தார்கள்.  அவர்கள் வண்டியை  நிறுத்தச் சொன்னார்கள். நிறுத்தினோம்.

"நீங்கள் ஏன் இந்த இருளில் வந்தீர்கள்? இரண்டு நாழிகைக்கு முன் இங்கே கொள்ளையடித்தார்கள். சமீபத்தில் சத்திரமிருக்கிறது.  சீக்கிரம் போய்ச் சேருங்கள்" என்று சொல்லிவிட்டு போனார்கள்.

நாங்கள் வண்டியை ஒட்டிக் கொண்டு சத்திரம் போய்ச் சேர்ந்தோம். அப்போது மணி இராத்திரி பன்னிரண்டிருக்கும்.

சத்திரத்துக் கதவு சாத்தியாய் விட்டது.  கதவைத் திறக்கச் சொல்லி, உள்ளே போய் நாங்கள் கொண்டு போயிருக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டோம்.  எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. விடியற்காலை நாலு மணிக்கு அங்கிருந்து வண்டி கட்டினோம்.  இரவில் எட்டு மணிக்குச் சங்கரனாயினார் கோயில் போய்ச்சேர்ந்தோம்.  ஒரு  பாட்டியம்மா வீட்டில் இறங்கினோம்.  அங்கு ஜலக் கஷ்டம்.  கோவில் வாசலில் ஒரு பெரிய குளம். அதற்குப் பெயர் நாகர் சுனை என்பார்கள்.  அதில் முக்கால் பங்கு பாசியும் கால் பங்கு ஜலமுமாக இருக்கும்.  ஒரு பெரிய துணியை நாலைந்தாக மடித்து வடிகட்டி ஜலம் எடுப்பார்கள்.  அந்த ஜலமே சகலத்துக்கும் உபயோகம்.

மறுநாள் காலையில் நாகர் சுனையில் ஸ்நானம் பண்ணிவிட்டுக் கோவிலுக்குப் போனோம்.  சுவாமி தரிசனம் பண்ணினோம்.  அக்கோவில் பெரும் புகழ்ப் படைத்தது.  பேய் பிடித்தவர் எல்லாம் அங்கு வந்து ஆடுவார்கள்.  அதெல்லாம் அதிக வேடிக்கையாக இருக்கும். மூன்று நாள் அங்கிருந்தோம்.

நாங்கள் ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் செய்ய வேண்டியனவெல்லாம் செய்துவிட்டு, கோமதி சமேத சங்கர நாராயண மூர்த்திக்கு நாங்கள் அடிமைச் சீட்டெழுதிக் கொடுத்துவிட்டு, ஊருக்கு புறப்பட்டு வருகிறோம்.  வரும் வழியில் ஒரு பெரிய குளம் இருந்தது.  அதில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கொரு பெரிய மரத்தடியில் படுத்துக் கொண்டிருந்தோம்.  சாயங்காலம் நாலு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.


கட்டை வண்டிப் பயணம் 
(1944 ஆண்டு வெளி வந்தது )
அந்நாளில் கல்யானங்களுக்காக கல்யாண ஊருக்கு கூட்டமாய்க் கட்டை வண்டியில் மூன்று நாள் பயணம் கூடப் போவார்கள். நெருக்கி உட்கார்ந்தாலும் கூட எல்லோருக்கும் இடம் இராது. மாற்றி மாற்றிக் கொஞ்சம் தூரம் சிலர், கொஞ்ச தூரம் வேறு சிலர் என்று பிரித்துக் கொள்வார்கள்.  பெண்டுகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் வேறு வண்டிகள்; புருஷர்களுக்கு வேறு வண்டிகள் உண்டு. இரண்டும் கெட்டான் என்ற வயசுப் பையன்கள் அங்கும் இங்குமாக சௌகர்யம்போல் சேர்ந்து கொள்வார்கள்.

வாய்க்கால், பள்ளம், மேடு முதலிய இடையூறுகள் நேர்ந்தால் மாடும், வண்டிக்காரனும், நிர்வாகிகளான புருஷர்களும் படும்பாடு அதிகமாக இருக்கும். சிலர், 'நமக்கு என்ன ?' என்று உதாசீனமாய் அதைப் பார்க்காதவர் போல் நழுவுவார்கள். திருட்டு பயம் உண்டு. இதற்காகப் பெண்டுகளும், குழந்தைகளும் நகை போடாமல் வருவார்களா? மேலே நகை மிகுதியா இருக்க இருக்க, உள்ளே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இருட்டினதும் பலமுள்ள புருஷர்களில், முந்திச் சிலரும் வண்டியை ஒட்டிச் சிலரும், பின்னால் சிலருமாகப் பாதுகாப்பார்கள்.

குளக்கரையைக் கண்டதும் சிறுவர்கெல்லாம் பசியும் தாகமும் தாங்கவே முடியாது.  தோசைக்கும், இட்டலிக்கும், புளியஞ் சாதத்துக்கும், தயிர்ச் சாதத்துக்கும் மன்றாடுவது வேடிக்கையாக இருக்கும். மிளகாய் பொடியும், வேப்பில்லை கட்டியும், வெல்லம் பட்ட பாடு படும். சிறுமிகள் தாம்பூலம் போட்டு 'உன் நாக்கு அதிகச் சிவப்பா, என் நாக்கு அதிகச் சிவப்பா? என்று நாக்கை நீட்டிக் கண்ணைக் குறுக்கிப் பார்ப்பதும், புல்லாக்கை நக்குவதும் போட்டோ பிடித்தால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்.






4 கருத்துகள்:

  1. பெயரில்லா5:50 PM

    Amudhan,
    It is good one. We can understand the difference in narration between 1920 and 1944.
    Thiagarajan.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9:30 PM

    Nice to read about travel details...good Amudhan write more on this.
    Bala

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7:54 PM

    Very nice Amudhan...keep writing..Selvan

    பதிலளிநீக்கு
  4. Thanks Thiagarajan, Bala and Selvan..Ancient period travel always amuse me....Its a good book that I recommend...

    பதிலளிநீக்கு