திங்கள், டிசம்பர் 21, 2015

சிம்பு + சினிமா + ஆபாசம்

இந்த பீப் பாடல் பற்றியும், சிம்பு அவர்களைப் பற்றியெல்லாம் எதற்கு எழுத வேண்டும் என்று தான் இருந்தேன்.  ஆனால் இந்த கெட்ட வார்த்தைகள் என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் எப்படி எடுத்து கொள்கிறோம் என்று யோசித்தேன்.

சிறு வயதில் நண்பர்கள் மத்தியில் பழகும் பொது, பல கெட்ட வார்த்தைகள் சர்வ சாதரணமாக வாயில் வந்து விளையாடும்.  அந்த வார்த்தைகள் போட்டு பேசாதவனை பழம் என்று அழைத்து விடுவார்களோ என்று பயந்தே சிலர் கெட்ட வார்த்தைகளை பேசுவார்கள்.  அவற்றை வீட்டில் பேசாதவாறு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வோம்.  எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் இப்படி தான் பேசுவான்.

"...த்தா.. அந்த  பொண்ணு..த்தா ..த்தா...  செம்ம figure மாமா....த்தா.. அவ மட்டும் கிடைச்சா...த்தா....அவ்ளோ தான் ..த்தா....."  
இங்கே நான் "...த்தா.." என்பதை சிறிதளவே போட்டு இருக்கிறேன்.  

இந்த "..த்தா." என்பதை பொண்ணுக்காக மட்டுமில்லை.  
"..த்தா.. எவ்வள்ளவோ படிச்சு பார்த்தேன் மச்சான்  ...த்தா....மண்டையில.. த்தா..ஏறவே மாட்டேங்குது ...." இப்படி கூட பயன்படுத்துவார்கள்.    ஆனால் இதை வீட்டில் அம்மா அப்பா தம்பி தங்கை முன்னாடி பேச மாட்டார்கள்.  ஏனென்றால் குடும்பம் என்றால் ஒரு கண்ணியம் உண்டு. பயமும் உண்டு.

சினிமாவில் பீப் சத்தம் பயன்படுத்தி திட்டுவது ரொம்ப நாள் தொட்டு நிலவி வருவது தான்.  சென்சர் போர்டுக்கு நன்றி.  தமிழில் வரும் சினிமா டூயட் பாடல்கள் எல்லாம் கெட்ட ரகம் தான்.  90% நல்ல ஹிட்டான டூயட் பாடல்கள் கூட ஒரே அர்த்தத்தை நோக்கி தான் இருக்கும்.  அதை பற்றி எல்லாம் விலாவரியாக விவாதிக்க முடியாது.  ஆனால் குழந்தைகள் கூட அவற்றை டி.வி நிகழிச்சிகளில் பாடலாம்.  தப்பில்லை.  தமிழர் பண்பாடு அப்படி. 

சிம்பு அவர்களின் அப்பா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  யாரோ ஒருவன் சிம்பு அவர்களின் பாட்டை திருட்டுத்தனமாக you tube இல் வெளியிட்டு விட்டானாம்.  ஆக மொத்தம் மகன் இப்படி பட்டவர்த்தனமாக கெட்ட வார்த்தையை போட்டு எழுதியதை அவர் கண்டிக்கவில்லை.  அவர் குடும்பம் இதை எப்படி எடுத்துகொள்கிறதோ ? இந்த பாடலை பதிவு செய்ய குறைந்தது ஒரு பத்து பேர் கடும் உழைப்பை தந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  எதற்காக இந்த உழைப்பு?, எதற்காக இந்த பாடல் பதிவு என்பதெல்லாம் சிம்பு அவர்களுக்கே வெளிச்சம்.  ஒரு பொழுதுபோக்குக்கு என்று அவர் சொல்லி இருக்கிறார்.  அப்படி என்றால் அந்த பாடலை விவாதிப்போதோடு நிறுத்தி இருக்காலாமே.  எதற்கு பதிவு செய்ய வேண்டும்? 

கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்று.  முதல் ஆண்டு மாணவன் ஒருவனை ragging செய்துகொண்டு இருந்தார்கள்.  ஏதாவது ஒரு கெட்ட  வார்த்தை சொல்ல சொன்னார்கள்.  எவ்வளவோ மிரட்டியும் அவன் ஒன்றும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியாது என்று அழுதான்.  நீ ஏதாவது சொல்லியே ஆகா வேண்டும், இல்லை என்றால் அடி விழும் என்று மிரட்டியதும், அவன் சொன்ன கெட்ட வார்த்தை "ஆய் ".



   

திங்கள், டிசம்பர் 07, 2015

விடாத மழை

மழையும் சென்னையும் என்று சில நாட்களுக்கு முன் பதிவு எழுதி விட்டு மழைக்கு முற்றுபுள்ளி போட முடியவில்லை.  மழை சீசன் 1, சீசன் 2 என்று போய் கொண்டு இருக்கிறது.  இந்த முறை மழை அதிக பலம். அடையாறும், கூவமும் நாங்கள் வெறும் சாக்கடை கால்வாய்கள் இல்லை, பெரிய ஆறுகள் என்று நிருபித்து விட்டன. பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஏரிகள் எங்கெங்கு இருந்தன என்பதை மழை அதன் இருப்பிடத்தை காட்டிகொடுத்து விட்டது.  

தமிழக மக்கள் உணர்ச்சிமயமானவர்கள்.  அது நல்லதுக்காகவும் இருக்கலாம். உபயோகமில்லாத விஷயத்துக்காகவும் இருக்கலாம்.  இயற்க்கை சீற்றம் வந்துவிட்டால் பதற்றமடைவது, மற்றவர்களை பதற்றமடைய வைப்பது, புரளிகளை கிளப்புவது, தமிழ் நாடே  அழிய போகுது என்று பிரச்சாரம் செய்வது ஒரு பக்கம்.  இன்னோர்  பக்கம் தன்  உயிரை  பார்க்காமல் வெள்ளத்தில் நீந்தி மற்றவர்களை காப்பாற்றியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  தன்  குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று கூட தெரியாமல் பிறர்க்கு பகல் இரவு என்று பார்க்காமல்  உதவி செய்தவர்களும் ஏராளம்.  தமிழனின் இந்த உணர்ச்சிவசப்படுதலை அரசாங்கம் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.



உணவு பொட்டலங்கள், ஆடை, இருப்பிடம் போன்ற அத்தியாச பொருட்களுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து விட்டது.  இன்னும் நல்ல உள்ளம் படைத்த தனி மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ அள்ளி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால்  இது மட்டும் போதுமா? இந்த  மாதிரி மறுபடியும் மழை வந்தால் அன்றாட வேலைகளும்,  மக்களின் வாழ்வாதாரமும் முடங்காதவாறு அரசாங்கம் திட்டமிட்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எப்படி என்றால், 

1.  போன பதிவில் நான் சொன்ன மாதிரி சென்னையின் மக்கள் நெருக்கடியை குறைக்க வேண்டும்.  சென்னை நகருக்குள்ளே அடுக்கு மாடி குடியிருப்புக்கு  இனிமேல் அனுமதி கொடுக்க கூடாது.  புற நகர் பகுதிகளுக்கு கழிவு நீர் வடிகால், மின்சார வசதி, நல்ல சாலைகள் என்று வசதி ஏற்படுத்தவேண்டும்.  கூடுவாஞ்சேரி, ஒரகடம், கேளம்பாக்கம், திருவள்ளூர் போன்ற இடங்களில் மக்கள் குடியேற அரசாங்கம் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 

2.  துறை வல்லுனர்களைக் கொண்டு இப்போதைய சென்னை நகர கழிவு நீர் கால்வாய்கள் கூவத்திலும், அடையாரிலும் கலக்காமல் இருக்க நல்ல திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 

3. இருக்கும் வெள்ள  நீர் வாய்க்கால்கள் பெரிது படுத்த வேண்டும்.

4.  சாலைகளில் நீர் தேங்காதவாறு செய்ய வேண்டும்.  சாலை ஓரங்களில் மண் தெரியாதவாறு கல் பதிக்கலாம் (Tiles). ஏனென்றால் இந்த மண் தான் மழைக்காலத்தில் வெள்ள நீர் கால்வாய்களில்  போய் அடைத்துக்கொள்கிறது. 

5.  ஆறுகளின் ஓரத்தில் யாரையும் குடியேற அனுமதிக்க கூடாது.

இதை எல்லாம் விட்டு விட்டு, அந்த நடிகர் இவ்வளவு கொடுத்தாரு, இந்த நடிகர் அவ்வளவு கொடுத்தாரு என்று வெட்டி பேசுவது, மழை முடிஞ்சதும் கூவம் கரையிலும், அடையாறு கரையிலும் குடி போவது, ரோட்டில் உள்ள குண்டு குழியில் கல்களை கொண்டு நிரப்புவது, ஒன்றுமே நடக்காதது போல் அடுத்து தேர்தல் போஸ்டர் ஓட்ட போய் விடுவது, மறுபடியும் CMDA ஏரிகளில் வீடு கட்ட அனுமதி கொடுப்பது, கூவத்திலும், அடையாறிலும் சென்னை மாநகராட்சியே கழிவை கொட்டுவது என்று போய்க் கொண்டிருந்தால், நம்மை யாராலும் ஒழுங்கு படுத்த முடியாது.


ஞாயிறு, நவம்பர் 29, 2015

நகர்ந்து கொள் நகரமே!!!

சென்னையின் தற்போதைய (2015) மக்கள் தொகை 48 லட்சம்.  ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 14 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.  மக்கள் தொகை நெருக்கத்தில் உலகத்திலேயே எட்டாவது இடம்.  இந்த நகரத்தில் 144  போட்டால் கூட மக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டு இருப்பார்கள். 

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்.  வண்டி ஓட்டும் போது, குறுக்கில் புகுந்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர் என்று.  ஓட்டுவதற்கு பதில் வண்டியை தள்ளிக்கொண்டே போய்விடலாம் என்று தோன்றும்.   ஞாயிற்று கிழமைகளில் கூட இப்போதெல்லாம் மக்கள் நடமாட்டத்தை சாதாரணமாக  சாலைகளில் பார்க்கலாம்.  முன்னெல்லாம் தி. நகர் ரங்கநாதன் சாலை, புரசைவாக்கம் சாலை போன்றவை தான் கூட்டமாக இருக்கும்.  இப்போதெல்லாம் எல்லா சாலைகளும் ரங்கநாதன் சாலை தான்.

சென்னை மக்கள் அப்படி அலைந்து திரிந்து சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்.  ஜன நெருக்கடி தான்.   பல வருடங்களாக ஒற்றை (single) வீடுகளாக இருந்தவை எல்லாம் இப்போது இருபது வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகி விட்டன. ஒரு குடும்பம் வசித்த இடத்தில் ஒன்பது குடுபங்கள்.  குடி நீர் குழாய்களும், சாக்கடை குழாய்களும், மின்சார இணைப்புகளும், சாலையின் அகலங்களும், தரமும் அப்போது இருந்த மக்கள் தொகைக்காக போடப்பட்டது.  இப்போது, கூடுதலாக வந்து குடியேறிய மக்களுக்காக வசதிகள் செய்யும் போது  அடிக்கடி சாலையை தோண்ட வேண்டியிருக்கிறது.   மின்சார இணைப்பை பெரிது படுத்த வேண்டியிருக்கிறது.  சாக்கடை அடைத்துக்கொள்கிறது.  சாலைகள் போக்குவரத்தை தாங்குவதில்லை. காற்று மாசு பட்டு குழந்தைகள் எல்லாம் Nebulizer பயன்படுத்துவது சாதாரணமாகி விட்டது. மக்கள் முகமுடி திருடர்கள் போல முகத்தை மூடிக்கொண்டு பயணிக்கிறார்கள்.  தெருக்கு தெரு டாக்டர்களின் கிளினிக்குகள் பார்க்கிறோம்.   அந்தக் காலம் போன்று டாக்டர்கள் வீடு தேடி வந்து சிகிச்சை அளித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதெல்லாம் தெரிஞ்சது தானே என்கிறீர்களா? கீழே உள்ள விளம்பரத்தை பாருங்கள்.


இது மாதிரி நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகள் சென்னையில் வந்துக்கொண்டே இருக்கின்றன.  பில்டர்கள் வாங்க ஆள் கிடைத்தால்  விற்றுக்கொண்டு தான் இருப்பார்கள்.  ஆனால் இதற்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கத்தை (CMDA) என்ன சொல்ல?  புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கிண்டி, பெசன்ட் நகர் என்று நகரத்தின் முக்கிய இடங்களில் நூறு இருநூறு என்று அடுக்கு மாடி வீடுகள் வந்த வண்ணம் இருகின்றன.  அத்தனை வீடுகளிலும் கார் வைத்திருப்பார்கள்.  அவை அத்தணையும் சாலைக்கு வரும் போது வாகன நெரிசலை எண்ணிப் பாருங்கள்.  ஆபிஸ்க்கு நேரத்தில் போக முடியுமா??

போதுங்க...இனிமேலும் சென்னை தாங்காதுங்க.. கொஞ்சம் நகர்ந்து ஒரகடம், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் பக்கம் சென்னை விரிவடைய வேண்டும்.  அரசாங்கம் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் இடம் பெயருவார்கள்.  சென்னை சுத்தமான காற்றை சுவாசிக்கும்.  கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களாக !!!

சென்னை நகரமே கொஞ்சம் 
நகர்ந்து போ  - இல்லையெனில் 
நீ நகரமில்லை நரகமே !!!
















புதன், நவம்பர் 25, 2015

மழையும் சென்னையும் ....

போதும் போதும் என்று இந்த முறை (2015) மழை பெய்து விட்டது.  சென்னையில் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதுமே.... இது சம்பந்தமாக  மழை வெள்ளம், வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள், அடித்து செல்லப்பட்ட மனிதர்கள், உடைந்த பாலங்கள், அறுந்த மின் கம்பிகள், சிதைந்த சாலைகள், ஆர்ப்பரித்து செல்லும் ஆறுகள், நிரம்பிய ஏரிகள், திறக்காத பள்ளிகூடங்கள்  என்று பல தரப்பட்ட செய்திகளும், வீடியோக்களும் பார்த்தோம். 

இதற்கான காரணங்களாக ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், இருக்கும் ஏரியை சரியாக தூர் வாராதது என்று பலவற்றை செய்தி தாள்களும், இன்னும் பல ஊடகங்களும் அலசி ஆராய்ந்தன.  



எனக்கு நான் ஐந்தாம் வகுப்பு (1985) படிக்கும் போது சென்னையில் பெய்த அடை  மழை ஞாபகம் வந்தது.  காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் முன்னரே பள்ளி விடுமுறை என்று தெரிந்தும் கூட, இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே பள்ளிக்கூடம் போனதும், பள்ளி முழுக்கவே தண்ணீரில் மிதப்பதை பார்த்து பிரமித்ததும், பின் ஆனந்தப்பட்டதும் நினைத்து பார்த்தேன்.  சாலைகளில் ஆங்காங்கே லுங்கி கட்டிய மனிதர்கள் நின்று கொண்டு, இந்த வழியில் போக முடியாது, அந்த வழியில் போக முடியாது (blocku Sir!!) என்று கொஞ்ச நஞ்ச கடமை உணர்ச்சி மனிதர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.  செடிகளும், மரங்களும் ரோட்டில் விழுந்து கிடக்கும்.  வீட்டில் நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது.  நாங்கள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு நாள் முழுவதும் விளையாடிகொண்டே இருப்போம்.  

இதே ஞாபகங்கள் 1995 போதும், 2005 போதும், இப்போது 2015 போதும் வந்தன.  மேலும் இப்படி மழை பெய்யும் போதெல்லாம் வரும்.  அதற்கு தமிழகத்தை ஆளும் கட்சிகள், ஆளபோகிற கட்சிகள் வழி செய்துகொண்டே இருக்கும்.  மற்ற நாடுகளும், ஏன் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்கள் கூட முன்னேற்ற பாதையில் போகும் போது, தமிழ் நாடு பின்னோக்கியே போவது ஏன்?  அதற்கு காரணம், நம் அரசியல் வாதிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல, கடைந்தெடுத்த முட்டாள்கள்.  அட அயோக்கியர்களே, நீங்கள் காசு அடித்து விட்டு போங்கள்.  கொஞ்சம் புத்திசாலிதனமாகவும்  யோசித்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்களேன்.  யாராவது ஒரு நல்ல மனிதரை தமிழகத்தை வழி நடத்த  கடவுள் அனுப்பி வைப்பார் என்று பிராத்திக்கிறேன்.

செவ்வாய், நவம்பர் 10, 2015

தீபாவளி

சென்னையில் இரண்டு தீபாவளி மழை இல்லாமல் இருந்தால் மூன்று தீபாவளிக்கு மழை வந்து கெடுத்து விடும்.  இந்த முறை மழை வந்து விட்டது. ஆனால் திங்கள் கிழமையே நல்ல மழை வந்து விட்டதால், நிறைய பேர் ஆபீஸ்க்கு லீவ் போட்டு விட்டார்கள் (நான் மட்டும் விதிவிலக்கா என்ன?). அதனால் ஒரு நாலு ஐந்து நாள் லீவ் போட்டு மனைவி பிள்ளைகளை Bore அடிக்க வைத்து விட்டு, நிறைய தூக்கம் போட்டு, வயிறு கலங்க பலகாரம் சாப்பிட்டு, கொஞ்சம் பட்டாசு வெடித்து, whatsapp பார்த்து தீபாவளியை கழித்தாகி  விட்டது.

தீபாவளி என்றால் Festival of lights என்று சொல்லுவார்கள்.  ஆனால் எங்கள் ஏரியாவில் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை. அதனால் கிடைத்த அனுகூலம்  டிவி பார்க்கவில்லை. பட்டாசு வெடிக்க சாலைக்கு சென்றால் மழை வருவதும், வீட்டுக்குள் வந்தால் மழை நிற்பதுமாக இருந்தது.

சென்னையில் தீபாவளி என்றால் இப்போதைய Trend;  காலையில் லேட்டாக எழுந்துகொள்வது, பட்டாசு வெடிப்பது (ஒற்றை வெடிகள் எல்லாம் மலை ஏறி விட்டன. சர வெடிகளும் இரவில் வெடிக்கும் வானவெடிகளும் தான் இப்போது latest), புது படங்கள் பார்ப்பது, நண்பர்கள் கூட சேர்ந்து ஊரை சுற்றுவது , காலையிலேயே சரக்கு அடிப்பது (new trend!!) போன்றவை.

90களில், ரஜினி கமல் படம் பார்ப்பதற்கு டிக்கெட்டுக்காக அலைந்தது, புது படப் பாடல்களுக்காக டிவி முன் (தூர்தர்ஷன்) நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது, கலர் கலராக ஆடை உடுத்தி கலருக்காக கால் கடுக்க வீதிகளில் அலைந்தது, நூறு ஊசி வெடிகள் கொண்ட பிஜிலி பாக்கெட்டை ஒவொன்றாய் மணிக்கணக்கில் வெடித்தது, ஆடை தைக்க டெய்லரிடம் கடைசி நாட்களில் சண்டை போட்டது, பட்டாசு வெடித்த குப்பைகளை வைத்து நம் வீட்டில் நிறைய பட்டாசுகள் வெடித்தோம்  என்று பெருமை கொண்டது என்று நிறைய பழைய நினைவுகள் வந்து போகின்றது.

தீபாவளி பண்டிகைகளின் சூப்பர் ஸ்டார் !! வெளிநாட்டுகாரர்களுக்கு கிறிஸ்துமஸ் போன்று நமக்கு தீபாவளி என்று கூட சொல்லலாம். ஆனால் விடுமுறை விடுவதில்?? வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, பள்ளி கூடங்கள் முதற்கொண்டு அலுவலகங்கள் வரை இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். இங்கும் தீபாவளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கலாமே.  போஸ்டர், கட்-அவுட் வைக்கும் செலவில் தீபாவளிக்கு பொது இடங்களில் மின்சார அலங்காரங்கள் வைக்கலாமே.

தீபாவளி முடிந்து போன பின், என் பிள்ளையை பார்த்து பண்டிகையெல்லாம் முடிஞ்சு போச்சு.  நாளையிலிருந்து படிக்க வேண்டும் என்று சொன்ன பின் தான், இதையே தான் என் அப்பா அப்போது சொல்லி கடுப்பேத்துவார் என்று ஞாபகம் வந்தது. உடனே குழந்தையிடம் ஓகே, நாளைக்கும் பட்டாசு வெடிக்கலாம் என்று குஷிபடுத்தினேன்.






ஞாயிறு, நவம்பர் 01, 2015

அந்தக் காலத்து பயணங்கள்

உங்களுக்கு அரச புரசலான விஷயம் பிடிக்கும் என்றால் மேற்கொண்டு படியுங்கள்.  இது சுவையான பழைய விஷயங்களை தேடிக் கண்டு பிடித்து இடும் பதிவு.

நாம் இப்போதெல்லாம் வெளியூர் பயணம் செல்வதற்கு சுலபமாக விமானம் , ரயில் , பஸ் என்று எல்லா வசதியும் இருக்கிறது.  அந்த காலத்தில் இவை எதுவும் இல்லாத போது என்ன செய்து இருப்பார்கள்?  நடையாய் நடந்து இருப்பார்கள். இல்லை மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் பிராயணம் செய்து இருப்பார்கள். வசதி இல்லை என்று வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள் அல்ல அவர்கள். அனாயாசமாக பல காத தூரம் (திருச்சி, மதுரை, சிதம்பரம் , காசி போன்று ) தேசாந்திரம் போனவர்கள். காடு, மலை, இருட்டு, திருடர் பயம் எல்லாம் தாண்டி எப்படி போயிருப்பார்கள்.  இப்போது கூட நாம் ஊர் பகுதிகளில் சாலையோரம் அந்தக் கால சத்திரங்களை சிதிலமடைந்த நிலையில் பார்க்கலாம்.  அந்தக் காலத்தில் அவை வழி போக்கர்கள் தங்கி செல்லும் இடமாக சுறுசுறுப்பாக இருந்திருக்கும். இரவில், இருட்டில் மின்விளக்கு இல்லாத காலத்தில் எப்படி பிரயாணம் செய்து இருப்பார்கள்?    மேலே  படியுங்கள்.

நான் குறுகிய காலத்துக்கு எப்போது வெளியூர் சென்றாலும் படிப்பதற்கென்று ஏதாவது  ஒரு புத்தகம் கொண்டு செல்வதுண்டு. அப்படி ஒருமுறை வெளிநாடு செல்லும் போது விமானநிலையம் சென்று சேர்ந்த போதுதான், எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததை அறிந்தேன்.   எனவே, விமான நிலையத்தில்  உள்ள கடையில் ஒரு புத்தகம் வாங்கினேன். "தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்" என்பதே அதன் பெயராகும். எழுதியவர் - ஏ .கே . செட்டியார் .  அந்த காலத்தில் வெளி வந்த பல கட்டுரைளை திரட்டி தொகுத்திருந்தார். .

தமிழ் மொழியில் பயண இலக்கியம் மற்ற தேச மொழிகளில் உள்ளது போல் இல்லையே என்ற ஆதங்கத்தில் இந்த கட்டுரை தொகுப்பு இயற்றப்பட்டுள்ளது. அவற்றில் எனக்கு பிடித்த சில :



சங்கரநாயினார் கோயில் யாத்திரை 
(செல்லமாள் - பாரதியார் மனைவி, கதாமாலிகா - சுதேசமித்திரன் வெளியீடு,
10-11-1920)

நான் சிறு குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாள் சாயங்காலம் நாலு மணிக்கு சங்கர நாயினார் கோயிலுக்கு போக, நான், அம்மா, என் தம்பியொன்று சின்னக் குழந்தை, அக்கா, அக்கா புருஷன் ஐந்து பேரும் புறப்பட்டோம். அந்த ஊருக்கு போக ரயில் கிடையாதாதனால் மாட்டு வண்டி வைத்துக் கொண்டு போகிறோம்.

எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் போனவுடன் இறைபனை என்றொரு கிராமம் சேர்ந்தோம். அதனருகே ஒரு பெரிய பனந்தோப்பு உண்டு. அது ஒரு சிறிய மலைக்குப் பக்கத்திலிருக்கிறது. தோப்புக்கும் அந்த மலைக்கும் நடுவழியாக ஒரு பாதையுண்டு. அதைச் சரிபடுத்த முடியவில்லை.

கொஞ்ச தூரம் போனதும் எங்கள் வண்டிச் சக்கரத்தின் பட்டை கழன்று துண்டு துண்டாகக் கீழே விழுந்து விட்டது. வண்டி கொஞ்சம் சாய்ந்ததும் எல்லோரும் கீழே குதித்து விட்டோம். வண்டிக்காரன் என்னென்னவோ செய்து பார்த்தான். அதை சரிபடுத்த முடியவில்லை.

"நீங்கள் கொஞ்சம் இங்கே இருங்கள். நான் திரும்பி ஊருக்குப் போய் ஒரு வண்டி கொண்டு வருகிறேன். அந்த வண்டியில் நாம்  போகலாம்.  இந்த வண்டியை இங்கே போட்டுவிட்டுப் போய் விடலாம். பின்பு என் ஆள் வந்து எடுத்துக் கொண்டு போவான்" என்று சொன்னான்.  சரி, என்றோம். அவன் போய் விட்டான். நாங்கள் அங்கேயே மணலில் உட்கார்ந்திருந்தோம்.

அவன் போய் வெகு நேரம் வரவில்லை.  இருட்டிப் போய் விட்டது. நாங்கள் திரும்பி ஊரை நோக்கிப் போகிறோம். எங்கள் ஊருக்குப் பெயர் கடவூர். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள எங்கள் கடவூரிலிருந்து சங்கரனாயினார் கோயில் ஸ்தலம் சுமார் 50 கல் இருக்கலாம். நாங்கள் இறைபனையிலிருந்து திரும்பி ஊரை நோக்கிப் போகிறோம். எதிரே, பாதி தூரத்தில் வண்டிக்காரன் வண்டி கொண்டு வந்தான்.

நாங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு கடவூருக்கு போகாமல் யாத்திரையை நிறுத்த வேண்டாம் என்றெண்ணி, மறுபடி இறைபனைத் தோப்புக்கு வந்து சேர்ந்தோம்.  இதற்குள் நிரம்ப இருட்டிப் போய்விட்டது.

இறைபனைக்கும் மத்தளப்  பாறைக்கும் நடுவில் தான் அடித்துப் பறிக்கிற இடம்.  அங்கே திருடர் ஒளிந்து கொள்ள சௌகர்யமான இடம் இருக்கிறது.  இரவில் நல்ல இரவில், நாங்கள் அந்த வழி போகும் படி நேரிட்டது.  அந்தக் கோமதிதான் காப்பாற்ற வேண்டும் என்றெண்ணிப் போகிறோம்.  கொஞ்ச தூரம் போனவுடன் நாலைந்து பேர் பேசுகிற சத்தம் கேட்டது.

'திருடன் வந்து விட்டான் ' என்று பதறிப் போய் எங்களிடமிருந்த நகைகளைக் கழற்றித் துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி வண்டியில் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டோம்.  வண்டிக்காரனை வண்டியின் பின்னால் நடந்துவரச் சொல்லிவிட்டு, அக்கா புருஷன் வண்டியை விரைவாக ஒட்டிக் கொண்டு போனார்.  கொஞ்ச தூரம் போனவுடன் பத்துப் பேர் எதிரே வந்தார்கள்.  அவர்கள் வண்டியை  நிறுத்தச் சொன்னார்கள். நிறுத்தினோம்.

"நீங்கள் ஏன் இந்த இருளில் வந்தீர்கள்? இரண்டு நாழிகைக்கு முன் இங்கே கொள்ளையடித்தார்கள். சமீபத்தில் சத்திரமிருக்கிறது.  சீக்கிரம் போய்ச் சேருங்கள்" என்று சொல்லிவிட்டு போனார்கள்.

நாங்கள் வண்டியை ஒட்டிக் கொண்டு சத்திரம் போய்ச் சேர்ந்தோம். அப்போது மணி இராத்திரி பன்னிரண்டிருக்கும்.

சத்திரத்துக் கதவு சாத்தியாய் விட்டது.  கதவைத் திறக்கச் சொல்லி, உள்ளே போய் நாங்கள் கொண்டு போயிருக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டோம்.  எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. விடியற்காலை நாலு மணிக்கு அங்கிருந்து வண்டி கட்டினோம்.  இரவில் எட்டு மணிக்குச் சங்கரனாயினார் கோயில் போய்ச்சேர்ந்தோம்.  ஒரு  பாட்டியம்மா வீட்டில் இறங்கினோம்.  அங்கு ஜலக் கஷ்டம்.  கோவில் வாசலில் ஒரு பெரிய குளம். அதற்குப் பெயர் நாகர் சுனை என்பார்கள்.  அதில் முக்கால் பங்கு பாசியும் கால் பங்கு ஜலமுமாக இருக்கும்.  ஒரு பெரிய துணியை நாலைந்தாக மடித்து வடிகட்டி ஜலம் எடுப்பார்கள்.  அந்த ஜலமே சகலத்துக்கும் உபயோகம்.

மறுநாள் காலையில் நாகர் சுனையில் ஸ்நானம் பண்ணிவிட்டுக் கோவிலுக்குப் போனோம்.  சுவாமி தரிசனம் பண்ணினோம்.  அக்கோவில் பெரும் புகழ்ப் படைத்தது.  பேய் பிடித்தவர் எல்லாம் அங்கு வந்து ஆடுவார்கள்.  அதெல்லாம் அதிக வேடிக்கையாக இருக்கும். மூன்று நாள் அங்கிருந்தோம்.

நாங்கள் ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் செய்ய வேண்டியனவெல்லாம் செய்துவிட்டு, கோமதி சமேத சங்கர நாராயண மூர்த்திக்கு நாங்கள் அடிமைச் சீட்டெழுதிக் கொடுத்துவிட்டு, ஊருக்கு புறப்பட்டு வருகிறோம்.  வரும் வழியில் ஒரு பெரிய குளம் இருந்தது.  அதில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கொரு பெரிய மரத்தடியில் படுத்துக் கொண்டிருந்தோம்.  சாயங்காலம் நாலு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.


கட்டை வண்டிப் பயணம் 
(1944 ஆண்டு வெளி வந்தது )
அந்நாளில் கல்யானங்களுக்காக கல்யாண ஊருக்கு கூட்டமாய்க் கட்டை வண்டியில் மூன்று நாள் பயணம் கூடப் போவார்கள். நெருக்கி உட்கார்ந்தாலும் கூட எல்லோருக்கும் இடம் இராது. மாற்றி மாற்றிக் கொஞ்சம் தூரம் சிலர், கொஞ்ச தூரம் வேறு சிலர் என்று பிரித்துக் கொள்வார்கள்.  பெண்டுகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் வேறு வண்டிகள்; புருஷர்களுக்கு வேறு வண்டிகள் உண்டு. இரண்டும் கெட்டான் என்ற வயசுப் பையன்கள் அங்கும் இங்குமாக சௌகர்யம்போல் சேர்ந்து கொள்வார்கள்.

வாய்க்கால், பள்ளம், மேடு முதலிய இடையூறுகள் நேர்ந்தால் மாடும், வண்டிக்காரனும், நிர்வாகிகளான புருஷர்களும் படும்பாடு அதிகமாக இருக்கும். சிலர், 'நமக்கு என்ன ?' என்று உதாசீனமாய் அதைப் பார்க்காதவர் போல் நழுவுவார்கள். திருட்டு பயம் உண்டு. இதற்காகப் பெண்டுகளும், குழந்தைகளும் நகை போடாமல் வருவார்களா? மேலே நகை மிகுதியா இருக்க இருக்க, உள்ளே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இருட்டினதும் பலமுள்ள புருஷர்களில், முந்திச் சிலரும் வண்டியை ஒட்டிச் சிலரும், பின்னால் சிலருமாகப் பாதுகாப்பார்கள்.

குளக்கரையைக் கண்டதும் சிறுவர்கெல்லாம் பசியும் தாகமும் தாங்கவே முடியாது.  தோசைக்கும், இட்டலிக்கும், புளியஞ் சாதத்துக்கும், தயிர்ச் சாதத்துக்கும் மன்றாடுவது வேடிக்கையாக இருக்கும். மிளகாய் பொடியும், வேப்பில்லை கட்டியும், வெல்லம் பட்ட பாடு படும். சிறுமிகள் தாம்பூலம் போட்டு 'உன் நாக்கு அதிகச் சிவப்பா, என் நாக்கு அதிகச் சிவப்பா? என்று நாக்கை நீட்டிக் கண்ணைக் குறுக்கிப் பார்ப்பதும், புல்லாக்கை நக்குவதும் போட்டோ பிடித்தால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்.






ஞாயிறு, அக்டோபர் 04, 2015

Make in India - மனித பண்ணை யாகும் இந்தியா !!!

Make in India - இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் !!!
நம் பிரதமர், இந்தியா மேம்படைய கையில் எடுத்திருக்கும் ஆயுதம்.  ஊடகங்கள் வாயிலாக இதற்கு மக்கள் கொண்டிருக்கும் வரவேற்பு  அதிகம். மோடியும் ஊர் ஊராய் சுற்றி திரிந்து எங்க ஊருக்கு வாங்கோ கடைய போடுங்கோ என்று கூவிக் கொண்டிருக்கிறார் . இதனால் வேலை வாய்ப்பு பெருகும் ,  பண புழுக்கம் அதிகரிக்கும் , கட்டு மான தொழில் மற்றும் பிற தொழில்கள் வளரும் என்பதெல்லாம் உண்மை தான்.  ஆனால் இந்தியாவின் அறிவு வளர்ச்சி ?? உலக சந்தையில் அறிவுக்கே  முதலிடம்.  தொழில்நுட்பம் வளர்ந்தால் தான் நாம் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும்.  இந்தியா தயாரிக்கும் பொருட்களுக்கு உலக சந்தையில் நல்ல தேவை ஏற்பட வேண்டும் . இப்போது இஸ்ரோ பிற நாட்டு செயற்கை கோள்களை  நம்முடைய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது போல ... இதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். தொழில் சம்பந்தமான கல்வி சிறு வயதில் இருந்தே  கொடுக்க வேண்டும். ஆராய்ச்சிக்கும் பொருள் தரத்தை உயர்த்துவதற்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டும். இதையெல்லாம் இப்போது சீனா செய்துக்கொண்டிருகிறது.  நாம் இன்னும் ஆங்கிலேயர் காலம் தொட்டு அந்நிய நாட்டினரை நம்பிகொண்டிருக்கிறோம் .

நம் மக்களின் நிலைமையும் ரொம்ப மோசம் தான். நல்ல சோறு பார்த்து பல நாளாச்சுன்னு பசியில வாடுறவன் போல மக்கள் ஒரு நல்ல தலைவனை பார்த்து வெகு  நாளாகிவிட்டது.  ஒரு நல்ல அரசாட்சிக்கும் அரசியல் வாதிக்கும் மக்கள் ஏங்கி கிடக்கிறார்கள்.  முன்னர் அரவிந்த் கேஜ்ரவால் அரசியல் பிரவேசம்   செய்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பு இருக்கிறதே ... தமிழ் நாட்டில் கூட ஒரு கூட்டம் தலையில் குல்லா போட்டு  லஞ்சம் ஊழல் என்று பொங்கி எழுந்தார்கள்.  இப்பொது மோடி .  மனிதர்  கொசு அடிப்பதற்குள் ஒரு பஞ்ச் டயலாக் பேசி விடுகிறார். மிக சிறந்த பேச்சாளர். ஒத்துக்கொள்ள தான் வேண்டும். Make in India - பெரிய பஞ்ச் டயலாக்... அவருக்கே தெரியாமல் கூட துறை சார்ந்தவர்கள் அவரை நம்ப வைத்திருக்கலாம். அரசாங்கம் கொஞ்சம் யோசித்து பார்ப்பது நல்லது.
இந்தியாவில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.  Chicken poultry farm போல அந்நிய நாடுகள் இந்திய மக்களை நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு நாம் கோழிகள் போலாகிவிட்டோம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரு எடுத்துகாட்டு. பெரும்பாலும் Solar panel-கள் 20% வரை மட்டுமே திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன. இப்போது 44% வரை பிறநாட்டில் திறனை அதிகரித்து காட்டி இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள IIT போன்ற தொழில் கல்லூரிகள்  மூலம் சிறந்த மாணவர்களைக் கொண்டு இதை 50 -60 % கொண்டு செல்லலாம்.  நம் ஊரில் அடிக்கிற வெயிலுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
இது வெறும் ஒரு உதாரணம். இதை போல விவசாயத்திலும் நிறைய முன்னேற்றம் காணலாம்.   உணவு விஷயத்தில் மட்டும் (சாப்பிடறதுல தாங்க!!!) நாம் எங்கோ போய் விட்டோம். சிக்கன் டிக்கா , பிரியாணி, இட்லி, தொசையென்று எத்தனை வகைகள். இதையெல்லாம் எழுதும் போதே பிரியாணி ஞாபகம் வந்து  விட்டது. ஸ்டார் பிரியாணி ஒரு கட்டு கட்ட போகிறேன்.  Bye...

புதன், செப்டம்பர் 16, 2015

கல்லுரி நண்பர்கள்

2009 க்கு பிறகு 2015 இல் இப்போது தான் வலைபதிவதற்கு காரணம் வேலை பளு  என்றெல்லாம் கரடி விட்டால் யாரும் நம்ப  போவதில்லை.  உண்மையான காரணம்  சோம்பேறித்தனம்.  ஆனால் இந்த சோம்பேறித்தனத்தை விரட்டி அடிக்கும் ஒன்று இருந்தால் அது ஊக்கத்தை தவிர வேறு இல்லை. அதுவும் நண்பர்கள்  ஊக்கத்திற்கு ஈடு வேறு கிடையாது.
 
1994 ஆம் ஆண்டில் பிரிந்த நாங்கள் (கல்லூரி நண்பர்கள்) இப்போது 2015இல் whatsapp மூலமாக ஒன்று சேர்ந்துள்ளோம்.  மறுபடியும் கல்லூரியில் சேர்ந்ததை போலிருக்கிறது. யாருக்கும் அன்று நடந்தது எதுவும் மறக்க வில்லை. பழைய கதைகளை தினமும் செல் போனில் அலசி கொண்டிருக்கிறோம். இப்படி தான் நாற்பது வயதை கடந்தவர்கள் செய்து கொண்டிருப்பார்கள் என்று ஊகிக்கிறேன். 
வீட்டில் என் குழந்தை அப்பாவுக்கு ஏதோ ஆகி விட்டது என்கிறாள். பாஷா படம் மாதிரி எனக்கு (எங்களுக்கு ) இன்னொரு கதை இருக்கிறது என்றால் என் மனைவி முதலில் நம்ப வில்லை. என் கல்லூரி கதைகளும் நண்பர்கள் வட்டமும் இப்போது அவர்களை ஓரளவிற்கு நம்ப வைத்திருகிறது.
 
"முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அக நக நட்பது நட்பு" 
 
என்னும் குறளுக்கு  ஏற்ற நண்பர்களை  கடந்த 20 வருடங்களளில் பார்க்க  முடியவில்லை. நம் சின்ன வயதில் கொண்ட நட்பு என்றுமே அக நக நட்பு தான்.  இப்போது அலுவலகத்தில்  சக மனிதர்களிடம் நான்  கொண்டுள்ள நட்பு சில பல காரியங்களுக்கான காரிய நட்பாகவே இருக்கிறது.  நேரில் வாங்க போங்க என்பதெல்லாம்  பின்னால்  அவன் இவன்  என்றாகிவிடும். யாரையும் நம்பி எதுவும் சொல்ல  முடியாது. நம் சுய குணம் நமக்கே மறந்து போய் விடும்.  
 
இப்பொது மீண்டும் சேர்ந்துள்ள என் நண்பர்களால் வந்துள்ள உற்சாகம் படு சோம்பேறியான என்னை மீண்டும் எழுத தூண்டி இருக்கிறது. இனி தொடர்ந்து வலை பதிய வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. இனி நான் எழுத போகும் பதிவுகளை படித்து யாரவது துன்புற்றால் அதற்கு முழு காரணமும் என் நண்பர்களை தான்  சேரும். நான் பொறுப்பல்ல.