நேற்று, பெங்களூரில் இருந்து சென்னை செல்வதற்காக, பெங்களூர் மெயிலில் உட்கார்ந்திருந்தேன். ரயில் புறப்படும் நேரம் இரவு 10.45. தனியாக ஜன்னலோரம் ஒற்றை இருக்கையில் அமர்ந்து இருந்த போது, பக்கத்தில் ஒரு பெரிய மார்வாடி குடும்பம் (பெரிய என்றால் ரொம்ப.. பெரிய லக்கேஜுக்களையும் சேர்த்து) வந்து உட்கார்ந்தது. அவர்களுக்கு மேலே என்னுடையது Upper Berth. கொண்டு வந்த மூட்டை முடிச்சுக்களை என் Berth முழுக்க அடுக்கி விட்டார்கள். நான் படுக்கும் போது சொல்லலாம் என்று இருந்தேன். இரண்டு பெரிய பைகளை வழியில் வைத்துவிட்டார்கள். போவோர் வருவோர் எல்லாம் இடித்துக்கொண்டு போக, அது பக்கத்து அறைக்கு சென்றுவிட்டது.
மூன்று பெண்கள், ஒரு பாட்டி, இரண்டு ஆண்கள், நான்கு குழந்தைகள் எல்லோருக்கும் இடம் எப்படி போதும், என்று நான் யோசித்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த ஒர் ஆண் என்னிடம் மெதுவாக ஹிந்தியில் கேட்டார். "மேரா பேட்டிக்கோ ஆப் தேக்கா ஹைக்கியா?" இங்கு அமர்ந்திருந்த என் குழந்தையை பார்த்தீர்களா ? என்று. பக்கென்று இருந்தது எனக்கு. அப்போது தான் கவனித்தேன். அழகான ஒரு குழந்தையை (இரண்டு வயதிருக்கும்) அங்கே காணவில்லை. உடனே, அந்த ஆண்கள், பாட்டி மற்றும் ஒரு பெண் குழந்தையை தேட சென்று விட்டார்கள். நேரம் 10.40 ஆகி விட்டது. ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி!
குழந்தை பத்திரமாக கிடைக்க வேண்டுமே என்று நான் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கும் போது, பக்கத்தில் மீதம் இருந்த மார்வாடி பெண் மிகவும் நிதானமாக பதட்டமே இல்லாமல் அவர் குழந்தைக்கு Chips கொடுத்துக்கொண்டு இருந்தார். காணாமல் போன குழந்தையின் அம்மா, மீண்டும் அந்த இடத்துக்கு வந்த போது, ஏற்கனவே அங்கு இருந்த பெண் கூறியது: "எங்கே போயிருக்கும். வந்துரும். பொறுமையாக இரு" என்று சொல்லிவிட்டு தன் வேலையை செய்துக்கொண்டு (chips கொடுக்கறது தாங்க!) இருந்தார். நேரம் 10.45 தாண்டி ஐந்து நிமிடங்கள் கழித்து குழந்தையை பத்திரமாக கொண்டு வந்தார் ஒருவர். நல்ல வேளை ரயில் கிளம்பவில்லை. எனக்கும் நிம்மதியாக இருந்தது. மற்றவர்களை போல் அவர்கள் யாரும் அழவில்லை. சத்தம் போடவில்லை. கிடைத்த குழந்தையை எங்கே போனாய் என்று அடிக்கவுமில்லை.
ரயில் புறப்பட்டதும், ஒவ்வொரு Berth-லேயும் இரண்டு குழந்தைகளை போட்டார்கள், தூங்க வைப்பதற்கு. அதிலேயே அந்த பெண்களும் படுத்துக்கொண்டனர். பிறகு பேசினார்கள்... பேசினார்கள்.... 12 மணி வரை பேசினார்கள். அந்த நேரத்திலும் mixture, காரம், chips கொறித்துக்கொண்டு....
கொஞ்ச நேரத்தில் நானும் தூங்கிப்போனேன்.
மணி 2.00 இருக்கும். திடீரென்று ஒரே சத்தம். முகத்தில் light flash. என்னடாவென்று எழுந்து பார்த்தால், பெரிதாக ஒன்றுமில்லை. light போட்டுக்கொண்டு அவர்கள் பாஷையில் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். அது விவாதமா, வெட்டிப்பேச்சா தெரியவில்லை. அவர்களை சத்தம் போடக்கூட தோணாது, தூக்கக் கலக்கத்தில் நானும் தூங்கிப்போனேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக