ஞாயிறு, ஜூலை 24, 2016

கபாலி விமர்சனம் - ரஜினியை பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள்!!!!

கபாலிக்கு டிக்கெட் கிடைக்காதலால் சிவனே.. என்று உட்கார்ந்திருந்த எனக்கு எந்த நடிகருக்கும் ரசிகனாக இல்லாத சில நண்பர்கள்  படத்தை பார்த்துவிட்டு செம படம் என்று உறுதி செய்ததும், என் மனம் சும்மா இருக்குமா... என் மகளை கூட்டிக் கொண்டு லோக்கல் தியேட்டருக்கு படம் பார்க்க கிளம்பி விட்டேன்.

Image result for kabali movie

இதற்கு முன், மூன்று நாளாய் படத்தின் விமர்சனங்களை  இணையத்தில் படித்ததில் படம் மொக்கை, Drag..அப்படி இப்படினு படிச்சதும் ஒரே ஆச்சர்யமாக இருந்தது.  ஏனென்றால், எப்படியும் லிங்காவை விட இந்த படம் நன்றாக இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்பியதும், சில விமர்சனங்கள்  லிங்காவே மேல் என்று எழுதியிருந்ததும் தான்.  பின் தான் இதெல்லாம் சில வட இந்திய ஊடகங்களும், நம் வழக்கமான ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் வேலை என்று தெரிந்தது.

இது வரை ரஜினி படம் மசாலா type, லாஜிக் இருக்காது, கதை இருக்காது, நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்காதென்று சொன்னவர்கள் இப்போது கபாலியில் இது எல்லாம் இருந்தவுடன், படம் ரஜினி படம் மாதிரி இல்லை, ஸ்டைல் இல்லை, விறுவிறுப்பு இல்லை என்று கதை விடுவது ரொம்ப அசிங்கம்.  உண்மையில் இந்த படம் அசத்தல் படம்.  ரஜினியை வெறுப்பவர்கள் தவிர மற்றவர்க்கு  கண்டிப்பாக பிடிக்கும்.  தியேட்டரில் கூட மக்கள் என்னப்பா படம் நல்லா தானே இருக்கு, இதை போய் நல்லாயில்லைனு சில பேர் சொல்கிறார்களே என்று கேட்க முடிந்தது.

ரஜினியின் நடிப்பை பற்றி தனியாக சொல்ல நான் விரும்பவில்லை.  முள்ளும் மலரும், அவள் அப்படி தான் , ஜானி போன்ற படங்களில் முழு படமும், கதை சார்ந்த ஆழமான நடிப்பு திறனை வெளிப்படுத்திருந்தாலும், பின் அவர் ஸ்டைல், காமெடி என்று தன் படங்களை மாற்றிக்கொண்டார்.  ஆனாலும், அண்ணாமலை, பாட்சா, தளபதி போன்ற படங்களில் சில இடங்களில் அந்த ஆழமான நடிப்பு வெளிப்பட்டிருந்தது.  இதுவே, எனக்கு ஏதாவது ஒரு படம் ரஜினியின் ஆரம்ப படங்களை மாதிரி அழுத்தமான நடிப்பு, கதையையொட்டி வராதா என்று ஏக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.  அப்படியொரு படம் தான் கபாலி.  நடிப்பென்றால் என்னவென்று இந்த படத்தில் ரஜினி Class எடுத்திருக்கிறார்.

மூன்றாவது படமே ஆனாலும் ரஞ்சித்திடம் பெரிய டைரக்டருக்கான தகுதிகள் தெரிகிறது.  படத்தை முடிந்த வரை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களும் கதையையும், அது நடக்கும் களத்தையும் ஒட்டியேயிருந்தது ரஞ்சித்தின் நல்ல Direction.  எனக்கு இந்த டைரக்டரை பிடித்திருக்கிறது.

ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக வரும் சாய் தன்ஷிகா,  கூடவே வரும் ஜான் விஜய், படத்தின் வில்லன் ஆகியோரது நடிப்பு சூப்பர்.  படத்தில் எல்லோருடையும் நடிப்பும் நன்றாக தான் இருக்கிறது.  சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலமும், நிறைய இடங்களில் படத்திற்கு ஏற்ற கம்பீரத்தை கொடுத்திருந்தது. மலேசியாவில் நடக்கும் கதை என்பதால் அதுவே வழக்கமான தமிழ் படங்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது.

சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அதுவும் நன்றாக தான் இருக்கிறது. படத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது கொஞ்சம் அதிகம். Gangster படம் என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை போல... ஊடங்களில் வரும் சில செய்திகளை வைத்து படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்யாதீர்கள்.  படம் சூப்பர்.  இன்னும் சில நாட்களில் படம்  Block Buster என்றே செய்தி வரும் என்று நம்புகிறேன்.



திங்கள், ஜூலை 18, 2016

கபாலி படத்தை விளம்பரங்கள் படுத்தும் பாடு!!

எங்கும் கபாலி எதிலும் கபாலி என்று போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்களில், கபாலியை வைத்துக் கொண்டு இந்த விளம்பரங்கள் படுத்தும் பாடு இருக்கிறதே....சகட்டு மேனிக்கு மக்களை கேளுடா... வாங்குடா... வாடா... போடா.... என்று "டா" போட்டு திட்டாத குறை தான். நெருப்புடா... நெருங்குடா.. கபாலிடா.... வார்த்தைகளுக்கு rhyming ஆக இருக்கணுமாம்.

இதே மாதிரி தான் பாபா படம் ரிலீஸ் ஆன போது ஏகப்பட்ட விளம்பரம் செய்தனர்.  ரஜினியின் குடும்பத்திலேயே ரஜினி 25 என்று விழா கொண்டாடினர்.  ரஜினி பற்றிய பாடல்களை அவர் மனைவி பாடி வெளியிட்டார்.  எங்கும் ரஜினி மயமாக இருந்த அந்த சமயத்தில் வந்த பாபா படம் படு பிளாப்.  இப்போது, கபாலி படத்தின் இயக்குனரே பயமா இருக்குப்பா, கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா என்று பயப்படும் அளவுக்கு விளம்பரம் அமர்க்களம் படுகிறது.

ரஜினி பற்றி ஏதாவது பெரிய விஷயங்கள் வரும் போதெல்லாம் அவரை பிடிக்காதவர்களுக்கு வயிறு பயங்கரமாக எரியும்.  பாலு விக்கிற விலையில அவர் ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பாலை ஊத்துறாங்கய்யா... காச கரியா எரிக்கிறாங்க என்று இவர்கள் எரிந்து போவார்கள்.   ஒன்றோ இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ரஜினி படத்துக்கு ஒரு நாள் அவரது ஒரு ரசிகன் தன் வருமானத்தில் 500 ரூபாய் செலவு செய்து விட்டு போகட்டுமே. அவன் வாழ்க்கையில் என்ன குறைந்து விட போகிறது.  முதல் show போவது, ரஜினி பட சட்டையை அணிந்து கொள்வது, கடல் கடந்து போய் படம் பார்ப்பது எல்லாம் பண்டிகையை ஒத்த ஒரு ஆனந்தம்.  ஆனால் இதெல்லாம் ரஜினியை பிடிக்காதர்வர்களுக்கு மண்டை குடையும்.  ரத்த நாளங்கள் எல்லாம் சூடாகும்.  ரஜினி என்னும் நடிகனுக்காக செலவு செஞ்சு அழிஞ்சு போகும் கிறுக்கு ரசிகனுங்க என்று ஒப்பாரி வைப்பார்கள்.  ரசிகர்கள் இப்படி வருடத்திற்கு ஒரு ரஜினி படம் பார்ப்பதால் அவர்கள் வேலை கேட்டு போய் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்களா என்ன?  

Image result for kabali muthootImage result for kabali airtel

இப்போதோ விமானத்தில் ரஜினி படம்.  அப்படியானால் ரஜினி Haters க்கு எப்படி இருக்கும்?  அப்துல் கலாம் படத்தை பஸ்ஸில் கூட வைக்கலப்பா... ரஜினி படத்தை பிளேன்ல போட்டாங்க.. என்று ஒரே அழுகை...
முத்தூட் பைனான்ஸ், Big FM, ஏர்டெல், U டாக்ஸி, Cadburys என்னும் எத்தனையோ நிறுவனங்கள், T.V சானல்களில் போட்டிகள் என்று ஏகப்பட்ட விளம்பரங்கள்.  ரஜினி படத்திற்கு விளம்பரம் தேவை இல்லை தான்.   ஆனால் இவர்களின் வியாபாரத்திற்கு விளம்பரம் செய்ய ரஜினி தேவையாய் இருக்கிறார்.

Image result for kabali air asia

எங்கும் எதிலும் கபாலியை பற்றிய செய்திகளை கேட்கும் போது சலிப்பு வராமல் இல்லை.   டேய்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. படம் ஊத்திக்க போது என்று ரஜினியை பிடிக்காதவர்கள் வயிறு எரிந்தாலும்.... ........ 
இதையெல்லாம் மீறி படம் வெற்றி பெறட்டுமே... உண்மையிலேயே தீபாவளி பண்டிகை போன்று மக்களிடையே என்ன ஒரு மகிழ்ச்சி... பேச்சு...எதிர்பார்ப்பு... 
படத்தின் ரிலீஸ்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன். 

வெள்ளி, ஜூலை 08, 2016

பிஞ்சில் முற்றிவிடும் குழந்தைகள்!!

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொலை சென்னைவாசிகள் அனைவரது தூக்கத்தையும் சில நாள் கலைத்திருக்கும். பெண்ணை பெற்றவர்கள் எல்லோரும் ஒரு வித திகிலில் கண்டிப்பாக இருந்திருப்பார்கள்.  இது சம்பந்தமாக வந்த செய்திகளையெல்லாம் தொகுப்பாக தர எனக்கு விருப்பமில்லை (ஏற்கனவே நிறைய படித்திருப்பீர்கள்). ஆனால் இன்றைய தலைமுறையை (பெற்றோர்களும், பிள்ளைகளையும்) பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று தோன்றியது.


இப்போதெல்லாம் பத்து வயது பிள்ளைகள் இருபது வயது பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள்.  இருபது வயது பிள்ளைகள் பெரியவர்களுக்கே அறிவுரை சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.  இப்படி பிள்ளைகள் பிஞ்சிலேயே முற்றி விடுவதில் பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோஷம்.
சார், என் பையன் நாலாம் கிளாஸ் தான் படிக்கிறான்.  ஆனா, செல்போன் operation எல்லாம் அத்துப்படி சார்.  எனக்கே ஏதாவது டவுட்னா அவனை தான் கேட்கிறேன் என்பார்.   தனக்கு தான் மூளை இல்லை.  ஆனால்,  தன் பையன் சின்ன வயதிலேயே ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்ற நினைப்பு.   இதே மாதிரி தான் - என் பையன் இப்போதே கார் ஓட்டுகிறான், கடையை கவனிச்சுக்கிறான், அவனுக்கு தெரியாததே இல்லை, அப்படி இப்படினு பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.

சின்ன பிள்ளைகள் ஏழாம் வகுப்பிலேயே Girl friends, Boy friends என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். கூட படிக்கும் ஒன்றிரண்டு அப்பாவி குழந்தைகள் வீட்டில் வந்து அம்மா அப்பாவை பார்த்து இன்னைக்கு வகுப்பில் Flames போட்டுக் கொண்டார்கள், Crush, Love பத்தி பேசிக்கிறாங்கன்னு சொல்லும் போது சங்கடமாக இருக்கிறது.  அது அது வர வேண்டிய வயதில் வர வேண்டும்.  படிப்பில் கவனம் இருக்குதோ இல்லையோ, டீச்சரை எப்படி சமாளிப்பது, மற்ற பிள்ளைகளை எப்படி மட்டம் தட்டி பேசுவது என்பதில் புத்திசாலித்தனம் காட்டுகிறார்கள். இந்த கேடு கெட்ட புத்திசாலித்தனத்திற்கு பெற்றோர்களுக்கு பெருமை வேறு!!

Image result for spoiled adult children

தன் பிள்ளை சின்ன வயதிலேயே அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்ற ஆசையில் ஏகப்பட்டதில் சேர்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு தன் வயதில் விளையாடும் விளையாட்டில் விளையாட நேரம் கிடைக்காமல் போகிறது.  நான் கோலி, கில்லி விளையாடிய வயதில் இப்போது பிள்ளைகள் நுழைவு தேர்வு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். சினிமா என்றால் என்ன என்று தெரியாத என் வயதில், இப்போது பிள்ளைகள் நீ விஜய் Fana, அஜித் Fana என்று கேட்டுக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு செல் போன் கிடைத்து விடுகிறது.  Facebook, whatsapp பார்க்கிறார்கள். அசிங்கமான படம் என்றெல்லாம் சொல்லத் தெரிகிறது.  அரசியல் தெரிகிறது.  காதலை பற்றி யோசிக்கிறார்கள்.  எல்லாம் தெரிகிறது. ஆனால் எதிலும் நிதானம் இல்லை.  அது எப்படி வரும்?.  அதற்கு அனுபவம் வேண்டுமே.  மற்ற குழந்தைகளுக்கு வண்டி வண்டியாய் போதனை செய்யும் பெற்றோர் தன் குழந்தைகளை ஒழுங்காக வளர்ப்பதில்லை.  தங்கள் குழந்தைகள் சரியான ரூட்டில் தான் போகிறார்களா என்று சரி பார்ப்பதில்லை.  நாமக்கல் பள்ளியில் சேர்த்து விட்டால் பையன் தேறி விடுவான் போன்ற அவசரத்தனம் தான் தெரிகிறது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், தனுஷ் போன்றோர் பெரும்பாலான படங்களில் வேலைவெட்டி இல்லாத படிக்காத பையனாக தான் வருகிறார்.  ஆனால் காதலிப்பதோ அழகான பணக்கார பெண்ணை.  இதில் அட்றா அவளை, வெட்றா அவளை என்று பாட்டு வேறு.  அவர் அண்ணன் செல்வராகவன் தான் இந்த வகையறா படங்களை ஆரம்பித்து வைத்தது.  படங்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டுக்கு ஒரு வேண்டுகோள்.  இனி மேல் படங்களை ஆரம்பிக்கும் முன்பே திரைக்கதையை (Script) என்னவென்று ஆராய்ந்து செர்டிபிகேட் செய்யுங்கள்.

என்னை பொறுத்த வரை குழந்தைகளை குழந்தைகளாக வைத்திருந்தாலே அவர்களை நன்றாக வளர்ப்பது போலாகும். பிஞ்சுலேயே பழுத்து விடுவதால் அதனால் தொல்லைகள் அதிகம். அப்படியானால் எப்படி வளர்க்கலாம்?
12ஆம் வகுப்பு வரை செல்போன் வாங்கி கொடுக்காதீர்கள்.  காலேஜ் முடிக்கும் வரை பைக் வாங்கிக் கொடுக்காதீர்கள்.  அதிகமாக டி.வி, சினிமா பார்க்க விடாதீர்கள்.  ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்கள் கண்டிப்பாக பழக்க படுத்துங்கள். பிள்ளைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களை திட்டுவது, பொய் சொல்வது, பிறரை அவ மரியாதை செய்வது, ஏமாற்றுவது போன்றவற்றை செய்யாதீர்கள்.  ஆண் பிள்ளைகளையும் கோயிலுக்கு அழைத்து போங்கள்.

நாங்கள் சின்ன வயதில் Bubble gum மென்று முட்டை விட்ட வயதில் இப்போது சிகரெட்டு புகை விட்டு வட்டம் விடுகிறார்கள். புத்தக பை தூக்கும் வயதில் கத்தி ஆயுதம் தூக்குகிறார்கள்.  பெற்றோர்களின், மற்றும் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந்த காலம் அப்போது.  இப்போது சின்னஞ்சிறு பிள்ளைகள் நமக்கு அறிவுரை சொல்லும் காலம்.   தனக்கென்று ஒரு உலகத்தை உண்டாக்கி வாழும் பிள்ளைகள் பெற்றோரை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள்.   ஏதாவது விபரிதம் நடந்த பின் தான் அது எவ்வளவு தூரம் என்று தெரிய வருகிறது.  அதனால், பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தை கெடுத்து விடாதீர்கள். அவர்கள் மனநிலை பக்குவம் அடைய கால அவகாசம் கொடுங்கள். பெரிய பெரிய விஷயத்தையெல்லாம் அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.  குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற முதிர்ச்சி தேவை!!!