2009 க்கு பிறகு 2015 இல் இப்போது தான் வலைபதிவதற்கு காரணம் வேலை பளு என்றெல்லாம் கரடி விட்டால் யாரும் நம்ப போவதில்லை. உண்மையான காரணம் சோம்பேறித்தனம். ஆனால் இந்த சோம்பேறித்தனத்தை விரட்டி அடிக்கும் ஒன்று இருந்தால் அது ஊக்கத்தை தவிர வேறு இல்லை. அதுவும் நண்பர்கள் ஊக்கத்திற்கு ஈடு வேறு கிடையாது.
1994 ஆம் ஆண்டில் பிரிந்த நாங்கள் (கல்லூரி நண்பர்கள்) இப்போது 2015இல் whatsapp மூலமாக ஒன்று சேர்ந்துள்ளோம். மறுபடியும் கல்லூரியில் சேர்ந்ததை போலிருக்கிறது. யாருக்கும் அன்று நடந்தது எதுவும் மறக்க வில்லை. பழைய கதைகளை தினமும் செல் போனில் அலசி கொண்டிருக்கிறோம். இப்படி தான் நாற்பது வயதை கடந்தவர்கள் செய்து கொண்டிருப்பார்கள் என்று ஊகிக்கிறேன்.
வீட்டில் என் குழந்தை அப்பாவுக்கு ஏதோ ஆகி விட்டது என்கிறாள். பாஷா படம் மாதிரி எனக்கு (எங்களுக்கு ) இன்னொரு கதை இருக்கிறது என்றால் என் மனைவி முதலில் நம்ப வில்லை. என் கல்லூரி கதைகளும் நண்பர்கள் வட்டமும் இப்போது அவர்களை ஓரளவிற்கு நம்ப வைத்திருகிறது.
"முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பது நட்பு"
என்னும் குறளுக்கு ஏற்ற நண்பர்களை கடந்த 20 வருடங்களளில் பார்க்க முடியவில்லை. நம் சின்ன வயதில் கொண்ட நட்பு என்றுமே அக நக நட்பு தான். இப்போது அலுவலகத்தில் சக மனிதர்களிடம் நான் கொண்டுள்ள நட்பு சில பல காரியங்களுக்கான காரிய நட்பாகவே இருக்கிறது. நேரில் வாங்க போங்க என்பதெல்லாம் பின்னால் அவன் இவன் என்றாகிவிடும். யாரையும் நம்பி எதுவும் சொல்ல முடியாது. நம் சுய குணம் நமக்கே மறந்து போய் விடும்.
இப்பொது மீண்டும் சேர்ந்துள்ள என் நண்பர்களால் வந்துள்ள உற்சாகம் படு சோம்பேறியான என்னை மீண்டும் எழுத தூண்டி இருக்கிறது. இனி தொடர்ந்து வலை பதிய வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. இனி நான் எழுத போகும் பதிவுகளை படித்து யாரவது துன்புற்றால் அதற்கு முழு காரணமும் என் நண்பர்களை தான் சேரும். நான் பொறுப்பல்ல.